எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்துக்கு 9-வது தேசிய விருது!

எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்துக்கு 9-வது தேசிய விருது!

பிரபல எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் 9-வது முறையாக தேசிய விருதை வென்றுள்ளார்.

மத்திய அரசு ஒவ்வொரு வருடமும் தேசிய திரைப்பட விருதுகளை வழங்கி வருகிறது. பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்களில் இருந்து, சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குநர் உள்பட பல பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 68-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

சூர்யா நடித்த ’சூரரைப் போற்று’, சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, பின்னணி இசை, சிறந்த திரைப்படம் ஆகிய 5 பிரிவுகளில் விருதுகளைப் பெற்றுள்ளது. சிறந்த நடிகர் விருது சூர்யாவுக்கும், ’தன்ஹாஜி: அன்சங் வாரியர்’ என்ற இந்திப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அஜய்தேவ்கனுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

வசந்த் சாய் இயக்கிய ’சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ சிறந்த தமிழ்த் திரைப்படமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்காக சிறந்த எடிட்டர் விருது ஸ்ரீகர் பிரசாத்துக்கும், துணை நடிகை விருது லட்சுமி பிரியா சந்திரமெளலிக்கும் கிடைத்துள்ளது. இதில் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்துக்கு இது 9-வது தேசிய விருது ஆகும்.

இந்த விருது பற்றி ஸ்ரீகர் பிரசாத்திடம் கேட்டபோது, ‘கமர்சியல் படம் அல்லாமல் தரமான படத்தை இயக்க வேண்டும் என இயக்குநர் வசந்த் விரும்பினார். அப்படி உருவான படம் இது. இதற்கு விருது கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. இது எனக்கு 9-வது தேசிய விருது என்பதில் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in