‘கஸ்டடி’ ஓடிடி ரிலீஸ்; விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி!

’கஸ்டடி’ திரைப்படம்
’கஸ்டடி’ திரைப்படம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா அக்கினேனி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ’கஸ்டடி’ திரைப்படம், திரையரங்கில் வெளியான ஒரு மாதத்துக்குள் ஓடிடி வெளியீடு காண்கிறது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், மே 12 அன்று தமிழ் - தெலுங்கு என இருமொழி திரைப்படமாக திரையரங்குகளில் வெளியானது ’கஸ்டடி’. நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த் சுவாமி, சரத்குமார், ப்ரியாமணி உள்ளிட்டோர் நடித்த இந்த திரைப்படத்துக்கு, யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் இதுவரை வெளியான திரைப்படங்களில் பெரும் பொருட்செலவிலான ’கஸ்டடி’ வெற்றி குறித்து அவரும் பெரிதும் எதிர்பார்த்திருந்தார். தெலுங்கு புரமோஷன் நிகழ்வுகளில் கஸ்டடி இரண்டாம் பாகம் குறித்தெல்லாம் உற்சாகமாக கதைத்தார். ஆனால், படத்தின் ட்ரெய்லர் உருவாக்கிய எதிர்பார்ப்புக்கு மாறாக, ’கஸ்டடி’ திரைப்படம் திரையரங்கில் வெளியான சூட்டில் சுணங்கியது.

படம் குறித்த கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில், கஸ்டடி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராதது பெரும் பேசு பொருளானது. அடுத்த சில தினங்களில், இயக்குநர் வெங்கட் பிரபு, விஜயின் ’தளபதி68’ திரைப்படத்தை இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. இது விஜய் ரசிகர்களில் ஒரு தரப்பினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அஜித்துடன் ’மங்காத்தா’ வெற்றி திரைப்படத்தை கொடுத்தது முதலே, விஜயுடன் இயக்குநர் வெங்கட் பிரபு இணைவது எப்போது என்று அவ்வப்போது விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால், விஜய் தனது திரையுலக பயணத்தின் உச்சத்தில் இருக்கும்போது, சறுக்கல் கண்டிருக்கும் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது தொடர்பாக ரசிகர்கள் காட்டமான விமர்சனங்களையும் எழுப்பினர். அதிலும் ’கஸ்டடி’ தோல்வி என்றதும், விஜயின் அரசியல் புறப்பாடுகளுக்கு மத்தியில் அவரது அடுத்த திரைப்படத்தின் எதிர்மறை சாத்தியங்களை விரும்பாத ரசிகர்கள் வெகுவாய் அதிருப்தி காட்டினார்கள்.

வெங்கட் பிரபு - விஜய் இணைவது ’லியோ’ மற்றும் ’வாரிசு’ திரைப்படங்களுக்கு முன்பே முடிவானது என்பதாலும், வெங்கட் பிரபு முன்வைத்த கதையில் விஜய் பெரும் நம்பிக்கை வைத்திருப்பதும், இருவரும் இணைவதை அதிகாரபூர்வமாக அறிவிக்கச் செய்தது. இவற்றின் மத்தியில், வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி திரைப்படம் அது திரையரங்கில் வெளியான ஒரு மாதத்துக்குள்ளாகவே ஓடிடி ரிலீஸ் காண்கிறது. அமேசான் பிரைம் வீடியோவில் நாளை மறுநாள்(ஜூன் 8) ’கஸ்டடி’ வெளியாகிறது. இது குறித்தான அறிவிப்பு வெளியானது முதலே, விஜய் ரசிகர்கள் மீண்டும் தங்களது அதிருப்திகளுக்கு உயிர்கொடுத்து வருகின்றனர்.

ஓடிடியில் ’கஸ்டடி’
ஓடிடியில் ’கஸ்டடி’

நிதர்சனத்தில், பெரும்பாலான திரைப்படங்கள் திரையில் வெளியான ஒரு மாத இடைவெளியில் ஓடிடியில் தஞ்சமடைவதும், அதன் மூலம் திரைப்படத்தின் வருவாயில் அடுத்த கட்டத்தை எட்டுவதும் தற்போது அதிகரித்து வருகிறது. அதிலும், பல்வேறு காரணங்களால் திரையரங்கில் துவண்ட திரைப்படங்கள்கூட, அதன் ஓடிடி வெளியீட்டில் சாதித்து இருக்கின்றன. அந்த வரிசையில் கஸ்டடியும் சேரும் என்றும், சில ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அவற்றை பிரதிபலிப்பது போன்று, இயக்குநர் வெங்கட் பிரபுவும், ’பிரைம் வீடியோ கஸ்டடியில் கான்ஸ்டபிள் சிவா’ என்று உற்சாக வீடியோ ஒன்றையும் இன்று வெளியிட்டிருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in