‘அரங்கேற்ற வேளை’ வந்து 33 வருஷமாச்சு!

- ஃபாசிலின் கலகல காமெடி கபடி படம்
அரங்கேற்ற வேளை
அரங்கேற்ற வேளை

வேலையை எப்படியாவது அடையவேண்டும் என்பதையே வேலையாகக் கொண்டவர்கள் இங்கே நிறையபேர் உண்டு. “பணம் இருக்கட்டும்ங்க. கலைக்காக சேவை செய்ய ஆசைப்படுறேன்” என்று ‘காதலிக்க நேரமில்லை’ சச்சு போல் சொல்லிக்கொண்டு, உணர்வு ரீதியாக கலைதாகத்துடன், ஒரு ‘அரங்கேற்றம்’ நடந்துவிடாதா என ஏழ்மையில் தவிக்கிற கலைஞர்களும் இருக்கிறார்கள். “எனக்குத் தேவை பணம். அது எப்படி வந்தாலும் எனக்குச் சம்மதம்தான். அதுக்காக நான் எது வேணும்னாலும் செய்வேன்” என்று வாழ்பவர்களும் இருக்கிறார்கள். இந்த மூன்று பேரும் ஒருபுள்ளியில் இணைந்து நிகழ்த்துவதுதான் ‘அரங்கேற்ற வேளை.’

அலுவலகத்தில் ஒரு தீ விபத்து. அதில் பலர் இறந்துபோகிறார்கள். அப்படி இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கொடுப்பதாக நிர்வாகம் அறிவிக்கிறது. அதன்படி கதையின் நாயகன் சிவராமகிருஷ்ணன், அலுவலகத்துக்கு வந்து அடிக்கடி போராடுகிறான். ‘’சீனியாரிட்டிப்படி எங்க அப்பா இறந்திருக்காரு. அதனால எனக்கு வேலை கொடுத்தே ஆகணும்’’ என்று வம்படியாக நிற்கிறான்.

அவனுக்கு அந்த ஊரில் தங்குவதற்கு இடமில்லை. அங்கே, ‘சக்தி நாடக சபா’ வாசலில், ‘வாடகை வீடு கிடைக்கும்’ என்கிற அறிவிப்பைப் பார்க்கிறான். இங்கே வீடு வாடகைக்கு இருக்கிறது என்று நினைத்துக் கொள்கிறான். ஆனால், அது ‘வாடகை செட் வீடு’ வாடகைக்கு தருகிற, நாடகங்கள் போடுகிற சபா. அந்த உரிமையாளர் நம்பிராஜனைப் பார்க்க, ஒருவழியாக இரக்கப்பட்டு, சிவராமகிருஷ்ணன் தங்குவதற்கு இடம் தருகிறார். அங்கேதான் மாஷாவும் தங்கியிருக்கிறாள். ஏற்கெனவே முதல் சந்திப்பில் சிவராமகிருஷ்ணனும் மாஷாவும் முட்டிக் கொள்கிறார்கள். பிறகு இதுவே தொடர்ந்துகொண்டிருக்கிறது.

சிவராமகிருஷ்ணனைப் போலவே தன் தந்தையை தீவிபத்தில் பறிகொடுத்த தந்தையின் வேலையைப் பெறுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள் ஒருத்தி. அவள், சிவராமகிருஷ்ணனை சந்திக்க, இருவருக்கும் வாய்ச்சண்டை நீள்கிறது. ‘’அவர் நோ அப்ஜெக்‌ஷன் லெட்டர் கொடுத்துட்டா, எனக்கு வேலை கிடைச்சிரும்’’ என்கிறாள் அவள். அவளிடம் ஐநூறு ரூபாய் வாங்கிக் கொண்டு சிவராமகிருஷ்ணனிடம் எதற்கு கையெழுத்துப் போடுகிறோம் என்பதே தெரியாமல் கையெழுத்து வாங்குகிறாள். அந்தப் பெண்ணுக்கு வேலை கிடைக்கிறது.

இதற்கெல்லாம் மாஷாதான் காரணம் என்று கோபமாகிறான் சிவராமகிருஷ்ணன். அதேவேளையில், சிவராமகிருஷ்ணன், தன் தங்கையின் திருமணத்துக்காக நாயுடுவிடம் பணம் கடன் வாங்கி, அதைத் திருப்பித்தராமல் இருக்க, நாயுடுவும் அவனைத் தேடி அவனிருக்கும் இடத்துக்கே வந்துவிடுகிறான்.

ஒருபக்கம், சிவராமகிருஷ்ணனுக்கு பணம் வேண்டும். மாஷா தனது கிராமத்து வீட்டை இழந்த நிலையில், தான் ‘ஏர்ஹோஸ்டஸ்’ வேலை பார்ப்பதாக அம்மாவை நம்பவைக்கிறாள். யாரோ கட்டிக்கொண்டிருக்கும் வீட்டை ‘’இது நம்ம வீடும்மா, நான் தான் உனக்காகப் பாத்துப் பாத்துக் கட்டிக்கிட்டிருக்கேன்’’ என்று பொய் சொல்கிறாள். ஆக, அவளுக்கும் பணம் வேண்டும்.

ஒருகாலத்தில் நாடகங்களை மிகப்பெரிய அளவில் நடத்திக் கொண்டிருந்த நம்பிராஜன், தற்போது நாடகக்கலை நசிவாலும் பொருளாதார இழப்பாலும் நாடகம் போடமுடியாத சூழ்நிலை. வீடு முழுக்க, நாடக செட்டுகள், லைட்டுகள், உடைகள், பிராப்பர்டிகள் இருக்க, நாடகம் போடத்தான் ஆட்களுமில்லை. பணமுமில்லை. ஆக நம்பிராஜனுக்கும் பணம் தேவை.

சிவராமகிருஷ்ணனைப் போலவே வேலைக்குக் காத்திருந்து, வேலையிலும் சேர்ந்துவிட்ட அந்தப் பெண்ணிடம் பணம் கேட்கிறான் சிவராமகிருஷ்ணன். ஆனால், மனநிலை பாதிக்கப்பட்ட அம்மா, பார்வை இழந்து ஆபரேஷன் செய்யமுடியாத நிலையில் இருக்கும் தம்பி, தங்கை என ஏழ்மையில் தவித்துக் கொண்டிருக்கிறாள் அவள். அவளுக்கும் பணம் மிக மிக அவசியம்.

இங்கே ஒரு விஷயம்... அந்த ஊரில் சத்தியநாதன் என்றொரு தொழிலதிபர் இருக்கிறார். சக்தி நாடக சபாவும் இருக்கிறது. டெலிபோன் டைரக்டரியில் பிரின்ட் செய்த குளறுபடியால், சக்தி நாடக சபாவுக்கு வரும் போனெல்லாம் சத்தியநாதனுக்கும், சத்தியநாதனுக்கு வருகிற அழைப்புகளெல்லாம் சக்தி நாடக சபாவுக்கும் வருகிறது. அப்படித்தான் ஒருநாள்... நம்பிராஜன் போனுக்கு அழைப்பு. ‘’நான் பக்கிராம் பேசுறேன். சத்தியநாதா... உன் மகளை கடத்திட்டு வந்திருக்கோம். ஒரு லட்ச ரூபா கொடுத்தா, அவளை நீ பாக்கமுடியும். விட்ருவோம்’’ என்று ரிசிவர் சொல்ல, ஆடிப்போகிறார்கள் மூவரும்!

பிறகு சுதாரித்துக் கொண்ட சிவராமகிருஷ்ணன், சத்தியநாதனுக்கு வருகிற போன் நமக்கு வருகிறது என புரிந்துகொண்டு, சத்தியநாதனுக்குப் பேசுகிறார். ‘’நான் பக்கிராம் பேசுறேன். உன் பொண்ணைக் கடத்தி வைச்சிருக்கோம். நாலு லட்ச ரூபா கொடுத்தா, உம் பொண்ணை நீ பாக்கலாம். விட்ருவோம்’’ என்று பக்கிராம் சொன்னதை அப்படியே சொல்லி, ஆனால், அவன் கேட்ட ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் மூன்று லட்ச ரூபாய் கேட்க, சத்தியநாதனும் தருவதாகச் சொல்லுகிறார்.

இதன் பிறகு, அவர்கள் நினைத்தபடி பணம் கிடைத்ததா, சத்தியநாதனின் மகள் மீட்கப்பட்டாளா, பக்கிராம் மாட்டிக்கொண்டானா, சிவராமகிருஷ்ணன் நாயுடுவுக்கு பணம் கொடுத்தானா, நம்பிராஜனின் நாடக சபா என்னவானது, மாஷாவின் அம்மா ஆசைப்பட்டது போல் வீடு கிடைத்ததா என்பதையெல்லாம் சிரிக்கச் சிரிக்க, நையாண்டி மாறாமல் சொல்லியிருப்பதுதான் ‘அரங்கேற்ற வேளை’.

சிவராமகிருஷ்ணனாக பிரபு. மாஷாவாக ரேவதி. நம்பிராஜனாக வி.கே.ராமசாமி. நாயுடுவாக ஜனகராஜ். மாஷாவின் அம்மாவாக சுகுமாரி. சத்தியநாதனாக ஜெய்கணேஷ். அவரின் மகளாக அஞ்சு. வேலையில் சேர்ந்து குடும்பத்துக்காக உழைக்கும் பெண்ணாக ராசி. இவர்களை வைத்துக் கொண்டு, காமெடிக் கபடி ஆடியதுதான் ‘அரங்கேற்ற வேளை’யின் ஸ்பெஷல்!

மலையாளத்தில் சித்திக் - லால் இயக்கிய இந்தப் படத்தை, தமிழில் ‘அரங்கேற்ற வேளை’ என்று ஃபாசில் இயக்கினார். சித்திக் - லால் கதைக்கு, கோகுலகிருஷ்ணா வசனம் எழுதினார். ஆனந்தக்குட்டன் ஒளிப்பதிவு செய்தார். இளையராஜா இசையமைத்தார். மலையாளத்தில் ‘ராம்ஜிராவ் ஸ்பீக்கிங்’ என்று வந்து, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இங்கே, ‘அரங்கேற்ற வேளை’ என வந்து அதே வெற்றியைத் தந்தது.

பிரபுவும் ரேவதியும் ஜனகராஜும் சுகுமாரியும் சிறப்பாக நடிப்பை வழங்கினார்கள் என்றாலும் படத்தில் எல்லோரையும் கவர்ந்து அட்டகாசமாக ஸ்கோர் செய்த முதல் நாயகன் வி.கே.ராமசாமியாகத்தான் இருக்கும். மனிதர், தன் கதாபாத்திரத்தை உணர்ந்து, சிரிக்கவும் சிந்திக்கவும் கலங்கவும் வயிறு குலுங்கவும் என மாறி மாறி, தன் உணர்வுகளை வெகு அற்புதமாக நமக்குள் கடத்தியிருப்பார்.

படத்தில் காமெடி பலம் என்றால், இசை மிகப்பெரிய பக்கபலம். முக்கியமாக, ‘ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ’ இன்றைக்கும் நம் இரவுப் பாடல்களின் பட்டியலில் இருக்கிறது. ‘குண்டு ஒண்ணு வைச்சிருக்கேன்’ பாடலையும் ‘மாமனுக்கும் மச்சானுக்கும்’ பாடலையும் மனோ ஸ்டைலாகப் பாடியிருப்பார்.

ஃபாசில், இப்படித்தான் என்றில்லாமல் எப்படியான உணர்வையும் நம் உள்ளம் தொடுகிற விதமாக எடுப்பதில் தேர்ந்தவர். ‘பூவே பூச்சூடவா’, ‘பூவிழி வாசலிலே’, ‘வருஷம் 16’, ‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ என ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு விதமாகத் தந்தவர், படம் முழுவதும் நம்மை மறந்து சிரிக்கவைத்ததுதான் ‘அரங்கேற்ற வேளை’.

1990-ம் ஆண்டு, பிப்ரவரி 23-ம் தேதி வெளியானது ‘அரங்கேற்ற வேளை’. படம் வெளியாகி, 33 ஆண்டுகளாகின்றன. இன்னமும், ‘பக்கிராம் ஸ்பீக்கிங்’ என்பதையும் மாஷாவையும் மாஷாவின் தில்லாலங்கடியையும் எல்லாவற்றுக்கும் மேலாக, ‘ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ’வையும் நம்மால் மறக்கமுடியவில்லை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in