
கரோனா பரவல் காரணமாக, ஃபிளாஷ்பேக் காதல் காட்சியைப் படமாக்க முடியாமல் போய்விட்டது என்று ’எண்ணித் துணிக’ படத்தின் இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.
ஜெய், அதுல்யா ரவி, வம்சி கிருஷ்ணா நடித்து கடந்த 4-ம் தேதி வெளியான படம், ’எண்ணித் துணிக’. எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசை அமைத்துள்ளார். தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரெயின் ஆஃப் ஆரோஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் சுரேஷ் சுப்ரமணியன் தயாரித்துள்ள இந்த ஆக்ஷன் த்ரில்லர் படத்துக்குக் கிடைத்துள்ள வரவேற்பு பற்றி, எஸ்.கே.வெற்றிச்செல்வன் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
“இயக்குநர் வசந்திடம் இணை இயக்குநராகப் பணியாற்றினேன். ’எண்ணித் துணிக’ என் முதல் படம். 2017-ல் படத்தைத் தொடங்கினோம். கரோனா காரணமாகப் படம் தாமதமாகிவிட்டது. அதனால் ஜெய், அதுல்யா ரவியின் ஃபிளாஷ்பேக் காதல் காட்சியை எடுக்க முடியாமல் போய்விட்டது. அந்தக் காட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தால் ஜெய், அதுல்யா ரவிக்கான காதல் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கும்” என்று அவர் கூறியிருக்கிறார்.
மேலும், “இப்போது படம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. படத்தின் திரைக்கதையைப் பாராட்டுகிறார்கள். வன்முறை, ஆபாசம் இல்லாததால் பெண்களுக்கும் இந்தப் படம் பிடித்திருக்கிறது. ஹீரோ ஜெய், முழு ஒத்துழைப்புக் கொடுத்து நடித்தார். அடுத்து இரண்டு பெரிய நிறுவனங்களில் கதை சொல்லியிருக்கிறேன். ஹீரோ முடிவாகவில்லை” என்று வெற்றிச்செல்வன் தெரிவித்தார்.