ஆடை சுதந்திரம் என்பது ஆண்களுக்கும் உண்டு: நடிகர் விஜயை விமர்சித்த ஜேம்ஸ் வசந்தனுக்குப் பதிலடி

'வாரிசு' இசை வெளியீட்டு விழாவில் விஜய்.
'வாரிசு' இசை வெளியீட்டு விழாவில் விஜய்.

ஆடை சுதந்திரம் ஆண்களுக்கும் உண்டு என்று 'வாரிசு' படவிழாவில் நடிகர் விஜய் அணிந்து வந்த ஆடை குறித்து விமர்சனம் செய்திருந்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனுக்கு இணையவாசிகள் பதிலடி தந்துள்ளனர்.

விஜய் நடிக்கும் 'வாரிசு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் எளிமையான வகையில் உடை அணிந்திருந்தார். இதை 'சுப்பிரமணியபுரம்', 'பசங்க', 'நாணயம்' போன்ற படங்களுக்கு இசையமைத்த ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

ஜேம்ஸ் வசந்தன்.
ஜேம்ஸ் வசந்தன்.

இதுகுறித்து அவரது பதிவில்," 'வாரிசு' பட விழா தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருந்தது. தற்செயலாக ஒரு கணம் எட்டிப்பார்த்தேன். விஜய் பேசிக்கொண்டிருந்தார். முதல் பார்வையிலேயே அவர் தோற்றம் மனதைச் சற்று நெருடியது. தலையை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி, தாடியைக் கொஞ்சம் நெறிபடுத்தி, இந்த பிரமாண்ட விழாமேடைக்கேற்ற உடையணிந்திருக்கலாம் என்று தோன்றியது.

அது எளிமை என்று அவர் நினைத்திருக்கலாம்; அல்லது அவர் ரசிகர் வாதிடலாம். Simplicity and appropriateness are two different things. எளிமையும், அவைப் பொருத்தமும் வெவ்வேறு விஷயங்கள். இதைப் பொதுவாகத்தான் சொல்கிறேன். நாம் ஒரு வேலைக்கு, நேர்முகத் தேர்வுக்கு போகும்போது ஏன் அவ்வளவு பொறுப்பாக பார்த்துப் பார்த்து உடையணிந்து செல்கிறோம்? ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்ற தோற்ற வரைமுறை உண்டுதானே?

ஒரு நடிகனின் ஒவ்வொரு அசைவையும் அப்படியே கிரகிக்கிற, பின்பற்றுகிற பாமர ரசிகர்மேல் கதாநாயகர்கள், அதுவும் விஜய் போன்ற உட்சபச்ச நாயகன் ஏற்படுத்துகிற தாக்கம் அதிதீவிரமானது; தன் திரை நாயகனை அன்றாட வாழ்வில் ஒவ்வொரு அசைவிலும் பிரதிபலிக்கிற கடைநிலை இளைஞனுக்கு சொல்லாமல் சொல்லிக் கொடுக்கவேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று.

எந்த நிகழ்வுக்கு எப்படி உடையணிந்து செல்லவேண்டும் என்பதை அவன் எங்கே போய் கற்றுக்கொள்வான்? சினிமாவும், கிரிக்கெட்டும் உயிர்மூச்சாக ஆகிவிட்ட இந்தியாவில், இத்துறைகளில் உள்ளவர்க்கென்று சில பொறுப்புகள் உள்ளன. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். நீங்கள் திரைப்படங்களில் எல்லாவித ஆடம்பர ஆடைகளையும் அணிந்து சலித்துப்போய் நிஜவாழ்வில் இப்படி எளிமையாக இருக்க விரும்புவதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனாலும் பொதுமேடையாயிற்றே. வெறித்தனமான இளைஞன் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறானே. ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும், ஆந்திராவிலும் கூட யாருமே இந்த அம்சத்தில் அலட்சியம் காட்டுவதில்லையே. நட்சத்திரங்கள் வசதியானவர்கள் என்பது வெட்டவெளிச்சந்தானே. யாரும் உங்களைத் தவறாக நினைக்கமாட்டார்கள். தன் நாயகன் அழகாக வந்தால் முதலில் மகிழ்பவன் உங்கள் ரசிகன்தான்! முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள்.விடுமுறைகளில் மனம்போல் அணிந்து மகிழுங்கள். இந்த நடைமுறை வரைமுறைகளை உங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் இளைஞருக்குக் கற்றுக்கொடுங்கள்.” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த கருத்திற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. இதில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக இணையவாசிகள் பலர் குமுறி தீர்த்திருந்தனர். அதில் ஒருவர், "ஆடை சுதந்திரம் என்பது ஆண்களுக்கும் உண்டு" என்றும், மற்றொருவர் "சர்ச்சைக்குரிய வகையில் உடை அணியக்கூடிய ஒரு முறை நிர்வாணமாக புகைப்பட தொகுப்பு வர வைத்த ரன்வீர் சிங் போன்ற நபரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்" என்றும், "அதுக்கெல்லாம் பதிவு போட மாட்டார் என்றும் மற்றொருவரும்" பதிவிட்டிருந்தனர்.

"கடந்த காலங்களில் சீரான தான் உடையணிந்து வந்தார். இந்த முறை தான் இப்படி வந்துள்ளார்" என்றும் விஜய்க்கு ஆதரவாக பலர் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். இளையராஜா உள்ளிட்டோர் குறித்து அவ்வப்போது சர்ச்சை கருத்து கூறி வந்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், தற்போது விஜய் குறித்து தனது விமர்சனத்தை வைத்துள்ளது மீண்டும் ஒரு சர்ச்சைக்கு துவக்கப்புள்ளியாக மாறியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in