ஓடிடி உலா: உலக அழிவு எப்படி இருக்கும் - ‘டோன்ட் லுக் அப்’

ஓடிடி உலா: 
உலக அழிவு எப்படி இருக்கும் - ‘டோன்ட் லுக் அப்’

இன்னும் சில நாட்களில் இந்த உலகம் அழிந்துவிடும். ஹீரோ மற்றும் அவரது நண்பர்களால் மட்டுமே இவ்வுலகைக் காப்பாற்றமுடியும். இந்த மூன்று வரி கான்செப்ட்டை வைத்து இது வரை முந்நூறுக்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்கள் வந்திருக்கும் ‘இண்டிபென்டன்ட் டே’, ‘ஆர்மெகடண்’ போன்ற படங்கள் இதற்குச் சிறந்த உதாரணம். உலக அழிவை மையமாகக் கொண்டு இதுவரை வந்த படங்கள் அனைத்தையும் விட, மாறுபட்ட ஒரு திரைப்படமாக வெளியாகியுள்ளது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் 'டோன்ட் லுக் அப்' திரைப்படம்.

லியனார்டோ டிகாப்ரியோ, ஜெனிஃபர் லாரன்ஸ், மெரில் ஸ்ட்ரீப், ஜோனா ஹில் போன்ற நடிப்பு ஜாம்பவான்களின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ‘அதர் கைஸ்’, ‘தி பிக் ஷார்ட்’, ‘தி வைஸ்’ போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கிய ஆடம் மெக்கே இயக்கியுள்ளார்.

பூமியை அழிக்கும் விண்கல்

அமெரிக்காவின் மெக்சிகன் மாகாணத்தில் உள்ள வானியல் நிபுணரான கேட் டிபியாஸ்கி (ஜெனிஃபர் லாரன்ஸ்), பூமியை நோக்கி வேகமாக வரும் மிகப்பெரும் விண்கல் ஒன்றைத் தொலைநோக்கி வழியாகக் கண்டுபிடிப்பார். அதைத் தன்னுடைய ஆசிரியரான ரேண்டல் மின்டியிடம் (லியனார்டோ டிகாப்ரியோ) தெரியப்படுத்துவார். இருவரும் சேர்ந்து அந்த விண்கல் இன்னும் 6 மாதத்தில் உலகைத் தாக்கும் என்று கணக்கிடுவார்கள். அந்த விண்கல் தாக்கினால் பூமி மொத்தமும் அழியும் என்றும் கணிப்பார்கள்.

உடனே இதை நாசாவுக்குத் தெரியப்படுத்த, விவகாரம் அமெரிக்க அதிபரான ஜேனி ஓர்லனிடம் (மெரில் ஸ்ட்ரீப்) கொண்டு செல்லப்படும். அதிபர் அலுவலகம் கொண்டு சென்றதும் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்பும் கேட் மற்றும் மின்டிக்கு, பெரும் அதிர்ச்சி காத்திருக்கும். அரசியல் ஆதாயத்துக்காகவும், கார்ப்பரேட் பெரு முதலாளிகளின் சுய லாபத்துக்காகவும், பூமிக்கு வரும் பேரழிவு புறந்தள்ளப்படும். ஆறு மாத கால அவகாசத்தில் பூமி காப்பாற்றப்பட்டதா என்பதே, படத்தின் மீதிக்கதை.

சமூக நையாண்டி

பொதுவாக உலக அழிவை மையப்படுத்திய திரைப்படங்களில் ஆக்‌ஷன் அதிரடி காட்சிகளை மையப்படுத்தியே பார்த்துவிட்ட நமக்கு, இத்திரைப்படத்தில் ஒரு ஆக்‌ஷன் காட்சி கூட இல்லை என்பதே பெரும் ஆச்சரியமாக இருக்கக்கூடும். திரைப்படம் முழுக்க அரசியல்வாதிகள், கார்ப்பரேட் முதலாளிகள், திரைப் பிரபலங்கள், சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோர் என்று பலரைக் கடுமையாகக் கிண்டலடித்துள்ளனர். குறிப்பாகத் தொழிலதிபராக வரும் சர்.பீட்டர் இஷர்வெல் கதாபாத்திரம் பல இடங்களில் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் எலான் மஸ்க்கை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

லியனார்டோ டிகாப்ரியோ

குவின்டின் டாரன்டினோ இயக்கத்தில் 2019-ல், வெளியான ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்’ படத்துக்குப் பிறகு, 2 வருட இடைவெளி கழித்து டிகாப்ரியோ நடித்திருக்கும் ‘டோன்ட் லுக் அப்’ திரைப்படம் அவரது ரசிகர்களுக்கு விருந்தாகவே அமைந்துள்ளது. பதற்றத்துடன், கேமரா முன் பேசப் பதறும் காட்சிகளிலும், பொறுமை இழந்து கேமரா முன் உரக்கக் கத்தும் காட்சிகளிலும் இரு வேறு டிகாப்ரியோவை நம் கண்முன் நிறுத்துகிறார். மெரில் ஸ்ட்ரீப், ஜெனிஃபர் லாரன்ஸும் தங்கள் பங்குக்கு நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். லியனார்டோ டிகாப்ரியோ, ஜெனிஃபர் லாரன்ஸ், மெரில் ஸ்ட்ரீப், ஜோனா ஹில் போன்ற அட்டகாசமான நடிகர்கள் போட்டிபோட்டு நடித்திருக்கும் இப்படத்தின் இறுதிக்காட்சி, மனதை உலுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

எழும் சர்ச்சை

சமூகத்தை நோக்கிப் பல கேள்விகளை இப்படம் எழுப்பினாலும், அமெரிக்க அதிபராக ஒரு பெண் கதாபாத்திரத்தை உருவாக்கி, அக்கதாபாத்திரத்தை இவ்வளவு மோசமாகச் சித்தரிக்க வேண்டுமா என்ற விமர்சனம் இப்படத்தின் மீது எழுந்துள்ளது. இதுவரை ஒரு பெண்கூட அமெரிக்க அதிபர் ஆகியிராத சூழலில், தற்போது கமலா ஹாரிஸ் துணை அதிபராகப் பொறுப்பேற்றிருப்பது வரலாற்று நிகழ்வாகப் பார்க்கப்படும் நிலையில், பெண் அதிபர் கதாபாத்திரத்தை இப்படிக் காட்டுவது சரியல்ல என்று கடுமையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது இப்படம். விமர்சனங்கள் ஒருபுறமிருந்தாலும், கொண்டாடப்பட வேண்டிய திரைப்படமாக ‘டோன்ட் லுக் அப்’ திரைப்படம் பார்க்கப்படுகிறது.

137 ஷாட்ஸ்

நிறவெறியின் உச்சத்தையும், காவல் துறையின் அராஜகத்தையும் சமூக வெளியில் பகிரங்கப்படுத்தும் மற்றுமொரு சாட்சியாக உருவாகியுள்ளது ‘137 ஷாட்ஸ்’ என்ற ஆவணப்படம்.

2012-ம் ஆண்டு நவம்பரில், அமெரிக்காவின் கிழக்கு க்ளீவ்லேண்ட் பகுதியில் காரில் சென்ற டிமோத்தி ரஸ்ஸல் மற்றும் மலீஸா வில்லியம்ஸ் என்ற 2 கறுப்பினத்தவர்கள் காவல் துறையினரால் 23 மைல் தூரம் காரில் விரட்டப்பட்டு இறுதியில் 137 குண்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். கொல்லப்பட்டவர்கள் காரில் காவல் துறையினரைக் கடக்கும்போது துப்பாக்கி வெடித்தது போன்ற சத்தம் கேட்டதால், காவல் துறையினர் அவர்களைத் துரத்த ஆரம்பித்தார்கள். ஆனால், உண்மையில் காரின் சைலன்ஸர் ஏற்படுத்திய ஒலிதான் அது.

வெடிச் சத்தம் - காரில் கறுப்பினத்தவர்கள்... ஆக, அவர்கள் கண்டிப்பாக சமூக விரோதிகளாகத்தான் இருப்பார்கள் என்ற போலீஸாரின் பிற்போக்குத்தனமான நிறவெறிப் பார்வையே, 2 உயிர்களை பலி கொண்டுவிட்டது. இந்தக் கொடூர நிகழ்வை ரத்தமும் சதையுமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார், இந்த ஆவணப்படத்தின் இயக்குநர் மைக்கல் மிலானோ.

இறந்தவர்களின் உறவினர்கள், நண்பர்கள் படுகொலையில் ஈடுபட்டவர்களின் பின்னணி என்று சகல பக்கத்தையும் அலசி ஆராய்கிறது இந்த ஆவணப்படம். இறந்தது 2 நபர்கள் மட்டுமல்ல... அவர்களின் கனவுகள், லட்சியங்கள், உறவுகள் என அனைத்தும் நிறவெறியின் கால்களால் நசுக்கிச் சிதைக்கப்பட்டன. இதை மிக அழுத்தமாகச் சொல்லும் ‘137 ஷாட்ஸ்’ ஆவணப்படம், தற்போது நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது.

கடந்த ஏப்ரலில், கறுப்பினத்தவரான ஜார்ஜ் ப்ளாய்ட் அமெரிக்க போலீஸாரால் மூச்சை நிறுத்திக் கொல்லப்பட்டது, இணையத்தின் பலம் கொண்டு பேசு பொருளாக்கப்பட்டது. ஆனால், இப்போதிருப்பது போல் இணையம் பரவலாக்கப்படாத 2012-ல் நடந்த இந்தப் படுபாதகக் கொலைகள் அப்போது அதிகம் பேசப்படவில்லை என்பது பெரும் சோகம். வரலாற்றில் இன்னும் பின்னோக்கிப் பயணித்தால், இன்னும் இதுபோன்று எத்தனை கொலைகளோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது ‘137 ஷாட்ஸ்’.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in