
கிறிஸ்தவ மதத்தையும், மதபோதகர்களையும் இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாக 'ஜாஸ்பர்' திரைப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இயக்குநர் டி.யுவராஜ் இயக்கத்தில் விவேக் ராஜ்கோபால், ஐஸ்வர்யா தத்தா, லாவண்யா நடிப்பில் வெளியான படம் 'ஜாஸ்பர்'. இப்படத்தை மணிகண்டன் தயாரித்துள்ளார். டிரம்ஸ் சிவமணியின் மகன் குமரன் சிவமணி இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகியுள்ளார்.
இந்த நிலையில், இப்படத்திற்கு தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இதன் தலைவர் பிலிப் நெல்சன் லியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் யுவராஜ் இயக்கியுள்ள 'ஜாஸ்பர்' திரைப்படம் வெளியாகியுள்ளது. விஸ்வரூபி பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள இந்த படம் கிறிஸ்தவ மதம், மதபோதகர்களை இழிவுபடுத்தும் வகையில், காட்சிகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி இருப்பின் நாங்கள் அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக நீக்க வேண்டிய காட்சிகளை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.