மைக்கேல் ராயப்பன் கதாபாத்திரத்தை வைத்து புதிய படம்: விஜய் ரசிகர்களின் ஆவலைத் தூண்டும் அட்லி!

மைக்கேல் ராயப்பன் கதாபாத்திரத்தை வைத்து புதிய படம்: விஜய் ரசிகர்களின் ஆவலைத் தூண்டும் அட்லி!

‘தெறி', 'மெர்சல்' படங்களுக்குப் பிறகு இயக்குநர் அட்லி - நடிகர் விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த படம் 'பிகில்'. 2019-ல் வெளியான இந்தப் படத்தில் நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இந்தப் படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன.

இதில் மைக்கேல் ராயப்பன் என தந்தை கதாபாத்திரம், 'பிகில்' என மகன் கதாபாத்திரம் என இரட்டை வேடத்தில் விஜய் நடித்திருப்பார். படம் வெளியாகி விமர்சன ரீதியாகக் கலவையான விமர்சனம் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வெற்றியைக் கொடுத்தது.

இந்தப் படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் ப்ரைம் கைப்பற்றியுள்ள நிலையில் அதில் மைக்கேல் ராயப்பனின் வீடியோ காட்சி ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டு மைக்கேல் ராயப்பனின் முழுக் கதையை மட்டும் தனிப் படமாக எடுத்தால் எப்படி இருக்கும் என ரசிகர்களிடம் கருத்து கேட்டுள்ளது.
அமேசானின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்திருக்கும் இயக்குநர் அட்லி, அந்த வீடியோவை கோட் செய்து 'செஞ்சிட்டா போச்சு' என ட்வீட் செய்துள்ளார்.

இந்தத் தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அப்படி மைக்கேல் ராயப்பன் கதை மட்டும் தனிப் படமாக வந்தால் 'பிகில்' படத்தின் முன்கதையாக (prequel) இருக்கும் எனவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும் எனவும் இணையதளத்தில் தற்போது ரசிகர்கள் கமென்ட் செய்துவருகின்றனர்.

அட்லி தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து படம் இயக்க உள்ளார். இதற்கு அடுத்து மீண்டும் நடிகர் விஜயுடன் அவர் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘விக்ரம்' படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜயுடன் அவரது 67-வது படத்தில் இணைகிறார். இந்தத் தகவலை சமீபத்தில் விருது விழா மேடை ஒன்றில் லோகேஷ் கனகராஜ் உறுதிப்படுத்தினார். இந்தப் படத்தை அடுத்தே அட்லி - விஜய் இணையும் அடுத்த படம் உருவாகும் என்கிறது சினிமா வட்டாரம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in