`உங்கள் படத்தால் 75% நஷ்டம், கடனாளியாகிவிட்டேன்’- பிரபல ஹீரோவிடம் இழப்பீடு கேட்கும் விநியோகஸ்தர்

`உங்கள் படத்தால் 75% நஷ்டம், கடனாளியாகிவிட்டேன்’- பிரபல ஹீரோவிடம் இழப்பீடு கேட்கும் விநியோகஸ்தர்

தங்கள் படத்தை வெளியிட்டதில் நஷ்டம் ஏற்பட்டதால் அதை ஈடுகட்ட இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விநியோகஸ்தர் ஒருவர் பிரபல ஹீரோவுக்கு கடிதம் எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இவர் நடித்து கடந்த மாதம் வெளியான படம் ’ஆச்சார்யா’. இதில் அவர் மகன் ராம் சரணும் நடித்திருந்தார். பூஜா ஹெக்டே, சோனு சூட் உட்பட பலர் நடித்திருந்தனர். கொரட்டலா சிவா இயக்கி இருந்த இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் ரிலீஸாகி சரியான வசூலை எட்டவில்லை. மோசமான தோல்விப் படமாக அமைந்தது.

இந்தப் படத்தை, கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் பகுதிக்கு, ராஜகோபால் பஜாஜ் என்ற விநியோகஸ்தர் அதிக விலைக்கு வாங்கியிருந்தார். ஆனால், படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாததால் நஷ்டமடைந்தார். அதை சரிகட்டுமாறு, நடிகர் சிரஞ்சீவிக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், ’’ஆச்சார்யா’ படத்தை வாங்க ஒரு வருடத்துக்கு முன்பே ஒப்பந்தம் செய்தேன். படத்துக்கு சிறந்த வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். படம் ஓடாததால், 75% நஷ்டம் அடைந்துள்ளேன். கடன் வாங்கி நான் செய்த முதலீடு என்னை மேலும் கடனாளியாக்கிவிட்டது. அதனால், என்னைப் போல் அதிக நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களுக்கு இழப்பீடு வங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். இதை நீங்கள் பரிசீலித்தால், உங்களுடைய அடுத்தடுத்தப் படங்களை வாங்குவதற்கு ஊக்கமாக இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

பிரபல ஹீரோவுக்கு விநியோகஸ்தர் எழுதிய இந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in