
ஹெச்பிஓ படைப்புகள் விலக்கிக்கொள்ளப்படுவதால், டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்கு அடுத்த இடி விழுந்துள்ளது.
கரோனா காலத்தில் பெரும் வரவேற்பை பெற்ற ஓடிடி தளத்தில், அதன் பின்னரான காலத்தில் படிப்படியாக அடி வாங்கி வருகின்றன. முன்னணி ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் தளத்தின் வருமான இழப்பு அதன் மேலிட நிர்வாகத்தின் சீரமைப்பு வரை எதிரொலித்தன. இதர ஓடிடி தளங்கள் பலவும் கவர்ச்சிகரமான கட்டணக் குறைப்பு மற்றும் விளம்பரங்களுடனான படைப்புகள், வீடியோ கேம்ஸ் வசதி என வாடிக்கையாளர்களை ஈர்க்க முயற்சித்து வருகின்றன.
இந்த வரிசையில் டிஸ்னி+ஹாட்ஸ்டார் தளம் முக்கிய பின்னடைவை சந்தித்திருக்கிறது. இதன் அங்கமாக இருந்த ’ஹெச்பிஓ’ வெளியீட்டிலான படைப்புகள் இனிமேல் காணக் கிடைக்காது என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிஸ்னி+ஹாட்ஸ்டார் தளத்தின் மேற்கத்திய வலைத்தொடர்களை வழங்குவதில் ஹெச்பிஓ முன்னணி வகித்தது. இந்த மார்ச் இறுதியோடு, டிஸ்னி+ஹாட்ஸ்டார் உடனான தன்னுடைய உறவை முறித்துக்கொள்வதாக ஹெச்பிஓ அறிவித்துள்ளது.
இதனால் பிரபலமான ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ உள்ளிட்ட படைப்புகள் இனி ஹாட்ஸ்டாரில் காணக்கிடைக்காது. ஆனபோதும் ’பத்துக்கும் மேலான மொழிகளில், ஒரு லட்சத்துக்கும் மேலான மணி நேரத்துக்கான படைப்புகள் மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளின் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை தங்கள் வசம் இருப்பதாகவும்’ டிஸ்னி+ஹாட்ஸ்டார் அறிவித்துள்ளது.