
’புஷ்பா 2’ படத்தில் சமந்தாவுக்கு பதில் இந்தி நடிகை, குத்துப் பாடலுக்கு ஆட இருப்பதாகக் கூறப்படுகிறது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படம், ’புஷ்பா’. பான் இந்தியா படமாக, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். பகத் பாசில், சுனில், தனஞ்செயா, அஜய் கோஷ், ராவ் ரமேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.
சுகுமார் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். பாடல்கள் அனைத்தும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், நடிகை சமந்தா ஆடிய, 'ஊ சொல்றியா மாமா' என்ற பாடல் வட இந்தியாவிலும் புகழ்பெற்றுள்ளது.
சமந்தாவின் நடனமும் பாடலும் படத்துக்கு மிகப் பெரிய பிளஸ்சாக அமைந்தன. இதனால் இந்தியிலும் சமந்தாவுக்கு மார்க்கெட் அதிகரித்துள்ளது. இதன் தெலுங்கு பதிப்புப் பாடலான, ’ஊ அண்டவா மாவா’ யூடியூப் தளத்தில் 200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனைப் படைத்தது.
இந்நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க இருக்கிறது. இதிலும் ஒரு குத்துப் பாடல் இடம்பெறுகிறது. அதில் சமந்தாவுக்குப் பதிலாக, பிரபல இந்தி நடிகை திஷா பதானி நடனம் ஆட இருப்பதாகக் கூறப்படுகிறது. புஷ்பா 2-ம் பாகம் இந்தி ரசிகர்களை அதிகம் ஈர்க்கும் வகையில் எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. முந்தையை பட்ஜெட்டை விட அதிக பட்ஜெட்டில் 2-ம் பாகம் உருவாக்கப்படுகிறது. அதனால், திஷாவை ஆட வைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.