மஞ்சு வாரியர் அமைதி காப்பது ஏன்? - இயக்குநரின் சர்ச்சை பதிவு விவகாரத்தில் நடப்பது என்ன?

மஞ்சு வாரியர்
மஞ்சு வாரியர்

மலையாளத்தில் ‘செக்ஸி துர்கா’ திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற மலையாள இயக்குநர் சனல்குமார் சசிதரன் நடிகை மஞ்சுவாரியர் மிகவும் ஆபத்தான சூழலில் உள்ளார் என சர்ச்சையான குற்றச்சாட்டைக் கிளப்பியுள்ளார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்கு நடிகை மஞ்சுவாரியர் தரப்பில் இருந்து இதுவரை எந்த அழுத்தமான எதிர்வினையும் வரவில்லை. அது ஏன் அவர் அமைதி காக்கிறார் என்னும் தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

சனல்குமார் சசிதரன்
சனல்குமார் சசிதரன்

மலையாளத்தில் பிரபல நடிகைகளில் ஒருவர் மஞ்சுவாரியர். நடிகையைக் கடத்தி பாலியல் தொல்லைக் கொடுத்த வழக்கில் குற்றவாளிப் பட்டியலில் சேர்ந்த நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி ஆவார். அவருடனான விவாகரத்துக்குப் பின்னர் மீண்டும் சினிமாவில் பிஸியாக வலம்வருகிறார். தமிழிலும் அண்மையில் அசுரன் படத்தில் இவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. இந்நிலையில் சமூக வலைதளத்தளங்கில் சனல்குமார் சசிதரன் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் மஞ்சுவாரியர், ‘முழுக்க தன் மேனேஜர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அவரால் சுயமாக முடிவுகூட எடுக்க முடியாத ஆபத்தான சுழலில் உள்ளார்’’எனவும் பதிவிட்டுள்ளார். இது கேரள சமூகவலைதளங்களில் ஹாட் டாபிக்கும் ஆனது.

இதுகுறித்து இயக்குனர் சனல்குமார் சசிதரன் கூறுகையில், ”என்னுடைய செக்ஸி துர்கா படத்தைப் பார்த்துவிட்டு மஞ்சுவாரியர் என்னைத் தொடர்புகொண்டார். நாம் சேர்ந்து ஒரு படம் செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அப்படித்தான் ‘கயட்டம்’ படம் பிறந்தது. மஞ்சுவாரியரை வைத்து ஒருபடமே எடுத்தபோதும், அவரோடு தனியாகப் பேச வாய்ப்புக் கிடைக்கவில்லை. அவரது உதவியாளராக இருந்து, பின்னர் நிர்வாகத் தயாரிப்பாளர்களான பினீஸ் சந்திரனும், பினு நாயரும் அவரைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். மிகுந்த சிரமத்திற்கு பின்பே. அதுகுறித்து மஞ்சுவாரியரிடமும் கவலையைத் தெரிவித்திருந்தேன். மஞ்சுவின் மேலாளர் இதில் அதிகமாகத் தலையீடு செய்கின்றார். சமீபத்தில் உணவகம் ஒன்று திறப்புவிழாவிற்காக மஞ்சு வாரியர் வந்திருந்தார். அவரை சந்தித்து பேச முயன்றேன். அப்போது, அவரது உதவியாளர்கள் அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர்.

மறுநாள் மஞ்சுவாரியர் அழைத்தபோது நான் எடுக்கவில்லை. மீண்டும் நான் அழைத்தபோது அவர் எடுக்கவில்லை. அவரது தோழிகளிடமும் பேசிப் பார்த்தேன். பலன் இல்லை. என் திரைப்படம் சார்ந்த ஒரு பிரச்சினையை அவர் கவனத்துக்கு கொண்டு செல்வதில்தான் நான் அவரது சூழலைப் புரிந்துகொண்டேன்” என புலம்புகிறார்.

ஆனால் மஞ்சுவாரியர் தரப்பு இந்தக் குற்றச்சாட்டுக்கு இதுவரை பதில் சொல்லவே இல்லை. அதேநேரத்தில் மலையாளத் திரையுலகினரோ, ‘கேரளத்தில் துணிச்சல் மிகுந்த நடிகைகளில் முதல்வரிசையில் வருபவர் மஞ்சுவாரியர். நடிகை காரில் கடத்தப்பட்டு, பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட வழக்கில் தீவிரப் போராட்டத்தை முன்னெடுத்ததே மஞ்சு வாரியர்தான்! சினிமாத்துறையில் இருக்கும் அவர் சுதந்திரமாகவே இயங்குகிறார். சோசியல் மீடியாக்களிலும் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் மஞ்சுவாரியர் தினமும் நான்கைந்து பதிவு போடுகிறார். தனியாகச் செல்லக் கூடிய நம்பிக்கை பெற்றவர்களை தனியாகவே சந்திக்கிறார்.

இயக்குநர் சனல்குமார் சசிதரனுக்கு ஏதும் சினிமா சார்ந்த பிரச்சினைகள் இருந்தால் மலையாள நடிகர்கள் சங்கமான ‘அம்மா’வில் மனு கொடுத்தாலே போதுமானது. அவர் பப்ளிசிட்டிக்காக ஏதேதோ செய்துவருகிறார். அதனால்தான் அவருக்குப் பதில் சொல்லி தன் தரத்தைக் குறைத்துக்கொள்ளக் கூடாது என மஞ்சுவாரியர் அமைதியாக இருக்கிறார்” என்கிறார்கள் உள்நடப்பு தெரிந்தவர்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in