இது நட்புக்கு மரியாதை: விக்ரமன் மகன் நடிக்கும் படத்தைத் தயாரிக்கும் கே.எஸ்.ரவிக்குமார்

இது நட்புக்கு மரியாதை: விக்ரமன் மகன் நடிக்கும் படத்தைத் தயாரிக்கும் கே.எஸ்.ரவிக்குமார்

இயக்குநர் விக்ரமனின் மகன் கனிஷ்கா நடிக்கும் புதிய படத்தை இயக்குநரும் நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கிறார். தனது திரையுலகப் பயணத்துக்கு உறுதுணையாக இருந்த விக்ரமனின் நட்பைப் போற்றும் வகையில் இந்தப் படத்தை அவர் தயாரிக்கிறார்.

1990-ல் வெளியான ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கே.எஸ்.ரவிக்குமார், பின்னர் ‘சேரன் பாண்டியன்’, ’நாட்டாமை’, ‘முத்து’, ‘அவ்வை சண்முகி’, ‘படையப்பா’, ‘ஆதவன்’ என ஏராளமான வெற்றிப் படங்களைத் தந்தவர். குறிப்பாக, தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களான கமல், ரஜினி இருவரையும் வைத்து அடுத்தடுத்து படங்களை இயக்கியவர்.

திரையுலகில் கே.எஸ்.ரவிக்குமார் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தாலும், ஆரம்பகாலத்தில் அவரும் பல தோல்விகளையும் அவமானங்களையும் சந்தித்திருக்கிறார்.

ஒருகட்டத்தில் விரக்தியடைந்து, ‘இந்த சினிமாவே வேண்டாம்’ என முடிவெடுத்த தருணத்தில் அவரது முடிவை மாற்றியது இயக்குநர் விக்ரமன் தான். அத்துடன், தனது முதல் படமான ‘புது வசந்தம்’ படத்தில் இணை இயக்குநராக கே.எஸ்.ரவிக்குமாரைப் பணியாற்ற வைத்தார் விக்ரமன். அந்தத் தொடர்பே தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் பழக்கம் கிடைக்கக் காரணமானது.

அப்படித்தான் ஆர்.பி.சௌத்ரி தயாரித்த ‘புரியாத புதிர்’ படத்தை இயக்கும் வாய்ப்பு ரவிக்குமாருக்குக் கிடைத்தது. அவரது பயணமும் வெற்றிகரமாக அமைந்தது.

இந்நிலையில் நட்புக்கு மரியாதை செய்யும் விதமாக விக்ரமன் மகன் கனிஷ்கா நாயகனாக நடிக்கும் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கிறார்.

அதற்கான பூஜை இன்று நடந்தது. படப்பிடிப்பும் தொடங்கியது. அதையொட்டி நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஆர்.பி.செளத்ரி, சீனு ராமசாமி உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in