அற்புதம்மாள் கதை: வெப் சீரிஸ் எடுக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்!

அற்புதம்மாள்
அற்புதம்மாள்

மகன் பேரறிவாளன் விடுதலைக்காக போராடி சாதித்த ’அற்புத’ அம்மாள் கதையை, திரையில் பதிவு செய்யும் இயக்குநர் வெற்றிமாறனின் கனவு ஒருவழியாக நடைமுறைக்கு வர இருக்கிறது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனைக் குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட்டவர் பேரறிவாளன். ஆனால், பேரறிவாளன் தாய் அற்புதம்மாளுக்கு சட்டம், நீதிமன்ற தீர்ப்பு எல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. கருவறையில் சுமந்து ஈன்ற மகனை சிறைவாசத்திலிருந்து விடுவிக்க பிரசவத்துக்கு இணையான இன்னொரு போராட்டத்தை தொடங்கினார். சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த அற்புதம்மாளின் போராட்டத்தின் பலனாக பேரறிவாளன் விடுதலையானார். ஓர் எளிய தாயின் நீண்ட போராட்டம் கடைசியில் வெற்றி பெற்றது.

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

பேரறிவாளன் சிறைவாசத்தில் இருந்தபோது, வெளியே அவரது விடுதலைக்காக அற்புதம்மாள் மேற்கொண்ட சட்டப் போராட்டத்தில் வெகுவாய் ஈர்க்கப்பட்டவர்களில் இயக்குநர் வெற்றிமாறனும் ஒருவர். ஒரு திரைக்கதைக்கான அனைத்து உள்ளடக்கங்களையும் கொண்ட அற்புதம்மாள் கதையை திரைப்படமாக எடுக்கப்போவதாக, கடந்த 2 வருடங்களாக கூறி வந்தார். அதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். ஆனால் எப்போது படப்பிடிப்பு தொடங்குகிறது, அது திரைப்படமா அல்லது வெப் சீரிஸா என்பது தொடர்பான கேள்விகள் நீடித்தன. தற்போது அதற்கும் விடை கிடைத்திருக்கிறது.

அதன்படி, அற்புதம்மாள் கதையை வெப் சீரிஸ் வடிவில் எடுக்க முடிவாகி உள்ளது. வெற்றிமாறன் தயாரிக்க அவரது உதவியாளார் வர்ஷா இயக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அற்புதம்மாள் பாத்திரத்தில் தோன்றும் நடிகை உள்ளிட்ட அதிகாரபூர்வ தகவல்களை தொடர்ந்து விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in