சிவகார்த்திகேயனுடன் இணையும் வெங்கட்பிரபு!

சிவகார்த்திகேயனுடன் இணையும் வெங்கட்பிரபு!

நடிகர் சிவகார்த்திகேயனுடன் வெங்கட்பிரபு இணையும் புதிய படம் குறித்தானத் தகவலை இயக்குநர் உறுதி செய்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘பிரின்ஸ்’ திரைப்படம் இந்த தீபாவளிப் பண்டிகைக்கு வெளியாகிறது. இதனை ஒட்டி நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று மாலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் உரையாடினார். இதில் இயக்குநர் வெங்கட்பிரபு சிவகார்த்திகேயன் கேள்விகள் கேட்கலாம் என பகிர்ந்திருந்த வீடியோவை தன்னுடைய சமூகவலைதளத்தில் பகிர்ந்து, ‘ப்ரோ, நாம எப்போ ஷூட்டிங் போகலாம்? அப்புறம் நம்ம அனுதீப் எதுவும் உங்களை டார்ச்சர் பண்ணினாரா?’ என்று ஜாலியாகக் கேட்டுள்ளார்.

இதனை அடுத்து ஏஜிஎஸ் சினிமாஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சிஇஓ-வான அர்ச்சனா கல்பாத்தி, வெங்கட்பிரபுவின் இந்த ட்வீட்டிற்கு ‘ஷூட்டிங் ப்ளான் பண்றீங்களா?’ எனக் கேட்டுள்ளார். ’உங்களுக்குத் தெரியாமலா?’ என வெங்கட்பிரபு இதற்கு பதில் கூறியுள்ளார்.

ஏற்கெனவே, வெங்கட்பிரபு- சிவகார்த்திகேயன் படத்திற்காக இணைகிறார்கள் என்ற செய்தி வெளியானதை அடுத்து இந்த ட்வீட்டின் மூலம் வெங்கட்பிரபு இதனை உறுதி செய்திருக்கிறார். ‘நாய் சேகர்’ படத்திற்கு அடுத்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வெங்கட்பிரபு தெலுங்கு- தமிழ் பைலிங்குவலாக நாகசைதன்யா நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயன் ’பிரின்ஸ்’ படத்தை அடுத்து அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் பிஸி. இந்தப் படங்கள் முடித்து இருவரும் இணைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in