
’வாரிசு’ படத்திற்காக நடிகர் விஜய்யிடம் கதை சொன்னபோது பதற்றமாக இருந்தது என இயக்குநர் வம்சி தெரிவித்துள்ளார்.
‘பீஸ்ட்’ படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் தற்போது ‘வாரிசு’ படத்தைக் கைவசம் வைத்திருக்கிறார். இறுதிக்கட்டத்தைப் படப்பிடிப்பு நெருங்கி வரும் நிலையில், அடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்குப் படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து படத்தின் இயக்குநர் வம்சி ‘வாரிசு’ படம் பற்றியும் நடிகர் விஜய்க்கு கதை சொன்ன அனுபவம் குறித்தும் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர், " தயாரிப்பாளர் தில் ராஜூ சார்கிட்ட ஒரு நாள் ‘வாரிசு’ கதைப் பத்தி சொல்லி இருந்தேன். அவர்தான் இந்தக் கதையை விஜய் சார்கிட்ட சொல்லிப் பார்க்கலாமா என்று கேட்டார். கதைப் பிடிக்குதோ இல்லையோ ஒருமுறை விஜய் சாரை நேரில் சந்தித்து விடலாம் என்று முடிவு செய்தேன். இயக்குநருக்கும், ஹீரோவுக்குமான முதல் சந்திப்பு என்பது காதலர்களுக்கான சந்திப்புப் போல.
அந்த அளவுக்கு எனக்கு பதற்றமாக இருந்தது. அவர் வீட்டுக்குப் போனதும் இன்னும் எனக்கு பதற்றம் அதிகமாகிருச்சு. நான் கதை சொல்ல ஆரம்பிச்சதும் எந்த ரியாக்ஷனும் தராம அமைதியாக கவனிக்க ஆரம்பிச்சார். கதை முடிச்சதும் எதுவும் பேசல. அவருக்கு கதைப் பிடிக்கலை போலன்னு நினைச்சேன்.
ஆனா, அவர் ‘நைஸ் சார். பண்ணலாம்’ன்னு சொன்னார். ஆனால், அது உடனே அவருடைய அடுத்தப் படமா இருக்கும்ன்னு எதிர்பார்க்கவே இல்லை" என்று கூறியுள்ளார் வம்சி. மேலும், ‘வாரிசு’ படத்தின் கதை ஒவ்வொருவரும் எளிதில் தங்களுடன் பொருத்திப் பார்த்துக் கொள்ளக்கூடிய வகையில் எளிமையான அதே சமயம் விஜய் ரசிகர்களுக்குப் பிடித்த வகையில் வந்திருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.