'அன்பே சிவம்' படம் செய்த கமல் சாரே இப்போது 'விக்ரம்' போன்ற கதையுடன் தான் வருகிறார்: இயக்குநர் சுந்தர்.சி கலகல பேட்டி!

'அன்பே சிவம்' படம் செய்த கமல் சாரே இப்போது 'விக்ரம்' போன்ற கதையுடன் தான் வருகிறார்: இயக்குநர் சுந்தர்.சி கலகல பேட்டி!

நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி தன்னுடைய இரண்டு மகள்கள் குறித்தும், வீட்டில் தங்களுடைய குடும்ப நேரம் குறித்தும், தன்னுடைய ஆரம்ப கால சினிமா குறித்தும் யூடியூப் தளம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், தன்னுடைய மகள்கள், குடும்பம் பற்றி சுந்தர்.சி பேசியிருப்பதாவது: என்னுடைய மூத்த மகள் அவந்திகா பார்ப்பதற்கு குஷ்பு போலவும், இளைய மகள் அனி என்னைப் போலவும் இருப்பார். ஆனால் இரண்டு பேருமே குணாதிசயங்களில் அப்படியே நேர் எதிர். மூத்த மகள் அவந்திகா பார்ப்பதற்கு குஷ்பு போல் இருந்தாலும் அவர் என்னை போல அமைதியானவர். ஆனால், இளைய மகள், குஷ்பு மாதிரி எப்போதும் துறுதுறுவென நன்றாக பேசக்கூடியவர்.

நான் எப்போதுமே தனிமை விரும்பி. ஆனால், இயக்குநராக என் தொழிலுக்கு அது செட் ஆகாது. அதை எல்லாம் மீறி தான் நான் படப்பிடிப்பு தளத்தில் இருப்பேன். அதனால் வீட்டில் பெரும்பாலும் அமைதியாக இருப்பேன். நானும், எனது அவந்திகாவும் ஒரு பக்கம் அமைதியாக உட்கார்ந்து இருந்தால், எங்களை குஷ்புவும், அனியும் வம்பிழுத்து கொண்டே இருப்பார்கள். எனக்கு படப்பிடிப்பு முடிந்ததும் நேராக வீட்டிற்குப் போய் விட வேண்டும்.

பெரும்பாலும் இரவு 8 மணிக்கெல்லாம் நாங்கள் நால்வரும் வீட்டில் ஒன்றாக கூடி பேசுவோம். எங்கள் குடும்ப நேரம் என்பது மிக முக்கியமானது. அன்று நாள் முழுவதும் நடந்த விஷயங்களை எல்லாம் பரிமாறிக் கொள்வோம். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் குஷ்புவை விட அவந்திகா நன்றாகவே சமைப்பார். அவர் படிப்பிற்காக லண்டன் சென்ற போது அவர் போட்டுக் கொடுக்கும் டீ, சமைக்கும் உணவு ஆகிவற்றை ரொம்பவே மிஸ் செய்தேன். எனக்கு டீ போட்டு கொடுப்பதற்காகவே சீக்கிரம் லண்டனில் படிப்பை முடித்துவிட்டு வந்து விடு என்று விளையாட்டாக சொல்லிக்கொண்டிருந்தேன். இப்போது, சென்னைக்கு வந்திருக்கிறார். மீண்டும் எங்களது குடும்பம் பழையபடி கலகலப்பாக மாறியுள்ளது என மகிழ்ச்சியாக சுந்தர்.சி பேசியுள்ளார்.

மேலும் 'அன்பே சிவம்', 'வின்னர்' என இரண்டு வெவ்வேறு கதைகள் எடுத்து அவை ஒரே மாதிரியாக வெற்றி அடைந்தது குறித்து கேட்டபோது, "அப்போது சினிமா இருந்த காலம் என்பது வேறு. அதனால் அப்படியான ஒரு வெற்றிக்கதை என்னால் கொடுக்க முடிந்தது. ஆனால், இப்போது சினிமா, பார்வையாளர்கள் என்பது முற்றிலும் வேறாக இருக்கிறது. இப்போதும் அந்த மாதிரியான படங்களை எடுக்கலாம். ஆனால், முன்பு இருந்ததை விட இப்போது போட்டி அதிகமாகி விட்டது. யாரும் ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை என்பதே உண்மை. 'அன்பே சிவம்' படம் செய்த கமல் சாரே இப்போது 'விக்ரம்' படத்தில் 'ஆரம்பிக்கலாமா?' என்று தான் வருகிறார் எனில் சினிமா மார்க்கெட்டிங் என்பது அப்படி இருக்கிறது. இதில் என்னுடைய தனிப்பட்ட விருப்பத்தையும், திறமையையும் காண்பதற்கான இடம் என்பது இப்போது இல்லாமல் போய்விட்டது. அதுதான் பிரச்சினை. ஏனெனில் இப்போது ஒரு படம் தவறாக போய்விட்டாலும் எழுந்திருப்பது என்பது சிரமமான ஒரு விஷயம்" என்று இயக்குநர் சுந்தர்.சி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in