
நடிகர்கள் விஜய், சூர்யா, வடிவேலு நடித்த 'ப்ரண்ட்ஸ்' திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சித்திக் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் குறித்து மலையாள திரையுலகினர் தொடர்ந்து மருத்துவமனை வட்டாரங்களில் விசாரித்து வருகின்றனர்.
மலையாள திரையுலகின் முன்னணி இயக்குநரான சித்திக்(69), இதுவரை 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். தமிழில் விஜய் நடித்த 'ப்ரண்ட்ஸ்', 'காவலன்' ஆகிய படங்களையும், விஜய்காந்த் நடித்த 'எங்கள் அண்ணா' ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.
இவரது யதார்த்தமான கதைக்களத்திற்காக மலையாள திரையுலகில் தனி ரசிகர்கள் வட்டாரம் உருவாயிற்று. இந்நிலையில் இயக்குநர் சித்திக்கிற்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக நிமோனியா மற்றும் கல்லீரல் நோய்களுக்காக இயக்குநர் சித்திக் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தற்போது எக்மோ உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.