`அந்த சொகுசு காரை என்னால வாங்க முடியுமா?’: பிரபல இயக்குநர் விளக்கம்

`அந்த சொகுசு காரை என்னால வாங்க முடியுமா?’: பிரபல இயக்குநர் விளக்கம்

சொகுசு கார் வாங்கியதாக வெளியான தகவல் பற்றி இயக்குநர் ஷாஜி கைலாஷ் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழில், ‘வாஞ்சிநாதன்’, ‘ஜனா’, ‘எல்லாம் அவன் செயல்’ உள்பட சில படங்களை இயக்கியவர் ஷாஜி கைலாஷ் . மலையாள இயக்குநரான இவர் இயக்கிய ’கடுவா’, கடந்த மாதம் வெளியானது. ஒன்பது வருட இடைவெளிக்குப் பிறகு ஷாஜி கைலாஷ் இயக்கிய மலையாளப் படம் இது. இதில் பிருத்விராஜ், சம்யுக்தா மேனன் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் ஹிட்டானது.

இப்போது பிருத்விராஜ் நடிக்கும் கப்பா என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளி உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் வால்வோ சொகுசு காரின் சாவியை, இயக்குநர் ஷாஜி கைலாஷ் வாங்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த காரின் விலை 85 லட்சம் என்று கூறப்படுகிறது.

’கடுவா’ ஹிட்டானதால் அதில் கிடைத்த சம்பளத்தை வைத்து சொகுசு கார் வாங்கியதாகச் செய்தி வெளியானது. இந்நிலையில் இதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். ‘’கடுவா ஹிட்டுக்குப் பிறகு நான் வால்வோ காரின் சாவியை வாங்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. அந்த காரை நான் வாங்கவில்லை. பிருத்விராஜ், ஆசிப் அலி நடிக்கும் ’கப்பா’ படத்தின் தயாரிப்பாளர் டோல்வின் குரியாகோஸ் வாங்கியிருக்கும் கார் அது. அதன் சாவியை பெற்றுக்கொண்டு ஆசிர்வதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதால் அதை வாங்கிக் கொடுத்தேன்’’ என்று பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

பின்னர் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இப்போது அந்த காரை வாங்கும் வசதி என்னிடம் இல்லை. சுமார் ஒன்பது வருடங்களுக்குப் பிறகு மலையாளப் படம் இயக்கி இருக்கிறேன். இதனால் பொருளாதாரச் சிக்கல்கள் எனக்கு இருக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in