`குடும்பத்துடன் பார்க்க படம் இயக்கினேன், என் குடும்பம் மட்டுமே பார்த்தது’: பார்த்திபன்

`குடும்பத்துடன் பார்க்க படம் இயக்கினேன், என் குடும்பம் மட்டுமே பார்த்தது’: பார்த்திபன்

’சுகமான சுமைகள்’ படத்தை குடும்பத்துடன் அனைவரும் பார்க்க வேண்டும் என்று எடுத்தேன், ஆனால், என் குடும்பம் மட்டுமே பார்த்தது என்று இயக்குநர் ஆர்.பார்த்திபன் தெரிவித்தார்.

உலகப்புகழ்ப் பெற்ற ஈரானிய திரைப் படமான ’சில்ரன் ஆஃப் ஹெவன்’ படத்தை தமிழில் ’அக்கா குருவி’ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார், இயக்குநர் சாமி. இளையராஜா இசை அமைத்துள்ளார். மாஹின், டாவியா, தாரா ஜெகதாம்பா, செந்தில்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குநர் ஆர்.பார்த்திபன் பேசியதாவது:

நான் 'உள்ளே வெளியே' என்ற படத்தை இயக்கினேன். அதற்கு காரணம் நான் இயக்கிய 'சுகமான சுமைகள்' படம் தான். நான் அதைக் குடும்பத்துடன் பார்க்க வேண்டும் என்பதற்காக ஒழுக்கமாக இயக்கினேன். ஆனால், அதை என் குடும்பம் மட்டுமே பார்த்தது. அந்தப் படத்தால் நான் ரூ.75 லட்சம் நஷ்டம் அடைந்தேன். அது நான் சம்பாதித்த பணம் இல்லை. சம்பாதிக்கப் போகும் பணத்தையும் சேர்த்து போடப்பட்ட பணம். அந்த பொருளாதார பிரச்சினை, வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்து விட்டது. எனக்கு தெரிந்து ரஹ்மான் சார் சொல்வது போல், இரண்டு பாதை உள்ளது. ஒன்று காதல், மற்றொன்று வெறுப்பு. அதில் நாம் தேர்ந்தெடுக்க வேண்டியது காதலைதான் என்பார். அது போல, தேர்ந்தெடுத்தலே மிக முக்கியமான ஒன்று என நினைக்கிறேன்.

’அக்கா குருவி’ படத்தின் இசை வெளியீட்டு விழா
’அக்கா குருவி’ படத்தின் இசை வெளியீட்டு விழா

நான் ஒரு செருப்பை வைத்து படம் இயக்கினேன், இயக்குநர் சாமி, இரண்டு ஷூவை வைத்து படம் இயக்கியிருக்கிறார். நான், ஒத்த செருப்புப் படத்தை இயக்கும் போது எவ்வளவு கஷ்டப்பட்டேனோ, அது வெளியாகி ஓடிடி தளத்திற்கு சென்றவுடன் உலக பெருமை கிடைத்தது.

இயக்குநர் சாமிக்கு திடம் மிகவும் முக்கியமான ஒன்று. நான் முந்தைய காலத்தில் பல படங்களின் மூலம் சம்பாதித்து இருக்கலாம். ஆனால், நிறைவை தரும் படம் 'இரவின் நிழல்' மட்டும் தான். பாக்யராஜ் சார் படத்தை பார்த்தார். அந்த பாராட்டு என்பது எவ்வளவு கோடி கொடுத்தாலும் கிடைக்காது. அது போன்ற சந்தோஷத்தை சாமி உணருவார். இந்த படம் வெற்றி யடையும்.

இவ்வாறு பேசினார்.

இயக்குநர் அமீர், பிவிஆர் பிக்சர்ஸ் கதிர், தயாரிப்பாளர் வி.எஸ்.குமார், ஆதம் பாவா, நடிகர் ஆதி உட்பட பலர் பேசினர்.

Related Stories

No stories found.