ஆஸ்கருக்கு குறி வைக்கும் ராஜமெளலி: என்ன காரணம்?

ஆஸ்கருக்கு குறி வைக்கும் ராஜமெளலி: என்ன காரணம்?

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்திற்கு ஆஸ்கர் வாங்குவதில் தீவிரம் காட்டி வருகிறார் ராஜமெளலி.

பிரம்மாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் இந்த ஆண்டு மார்ச் மாதம் ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் வெளியானது. ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடிப்பில் இந்த ஆண்டில் வெளிவந்து 1000 கோடிக்கும் அதிகமாக வசூலில் சாதனை படைத்தது. வசூல் ரீதியாக மட்டுமல்லாது, விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

ஆனாலும், இந்தத் திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்காகத் தேர்வு செய்யப்படாத நிலையில், நேரடியாக அந்தப் போட்டியில் ’ஆர்.ஆர்.ஆர்’ கலந்து கொள்ள இருக்கிறது. இதற்காக இயக்குநர் ராஜமெளலி அமெரிக்கா போயிருக்கார்.

கடந்த சில வாரங்களாக அங்கு 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் சில சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டது மட்டுமல்லாமல், 'ஆர்.ஆர்.ஆர்' படத்தைப் பற்றி ஆஸ்கர் குழுவுக்கும், அமெரிக்க ரசிகர்களுக்கும் தெரிவிப்பதற்காக பல்வேறு விதமான பிரமோஷன் நிகழ்வுகளும் அங்கு நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்த புரோமோஷன் நிகழ்வுகளுக்காக மட்டுமே கிட்டத்தட்ட 50 கோடிக்கும் அதிகமாக படக்குழு செலவு செய்வதாக டோலிவுட் வட்டாரங்களில் இருந்து பேச்சு வெளியாகி இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், இந்த செலவுகள் அனைத்தையும் படத்தின் இயக்குநரான ராஜமெளலியே ஏற்றுக் கொள்வதாகவும் தெரிகிறது.

’பாகுபலி’ திரைப்படம் மூலம் பான் இந்தியா என்ற பதத்தை பரவாக்கிய ராஜமெளலி ‘பாகுபலி-1,2’, 'ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்கள் மூலம் 300 கோடிக்கும் மேல் சம்பளம் பெற்றுள்ளதாகவும் ஒரு தகவல் உண்டு. 'ஆர்ஆர்ஆர்' படத்திற்காக ஒரு சில ஆஸ்கர் விருதுகள் வென்றால் கூட சர்வதேச அளவில் அவரது மார்க்கெட்டும் பிரபலமும் உயர்ந்துவிடும். இந்த ஒரு விஷயத்தை மனதில் கொண்டும் 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் ஆஸ்கர் வாங்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார் ராஜமெளலி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in