`தேச விரோதிகளை அடையாளம் காட்டிவிட்டது அக்னிபத் போராட்டம்'- இயக்குநர் பேரரசு

`தேச விரோதிகளை அடையாளம் காட்டிவிட்டது அக்னிபத் போராட்டம்'- இயக்குநர் பேரரசு

``அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் தீய சக்திகள். சமீபகாலமாக நடைபெற்ற போராட்டங்கள் சமூக விரோதிகளை அடையாளம் காட்டிவிட்டன. போராட்டம் மூலமாக பொதுச் சொத்துகளை சேதம் விளைவிப்போரை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்” என இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யோகா பயிற்சியில் இயக்குநர் பேரரசு கலந்து கொண்டார். யோகா பயிற்சியில் ஈடுபட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் பேரரசு, “பல்வேறு நல்ல திட்டங்கள் மூலம் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. தேசத்தை வலிமை மிக்க நாடாக மாற்றும் நோக்கில் அக்னிபத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்கும் விதமாக இளைஞர்களுக்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இளைஞர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து தேசத்தின் மீது பற்று உருவாக்குவதற்காக இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை சமூக விரோதிகள் எதிர்ப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களும், இளைஞர்களும் பங்கேற்று இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும். இந்தியாவை வளர்ச்சி அடைய விடாமல் தடுப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் எவ்வித மத பேதமும் இல்லாமல் அனைவரும் பங்கேற்கலாம் என்று தெரிவித்திருப்பது மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. உண்மையான உணர்வுள்ள இந்தியன் இந்த நாட்டை காக்க இந்த திட்டத்தில் சேர்ந்து வென்று காட்ட வேண்டும். இதை எதிர்ப்பவர்கள் இந்தியர்களாக இருக்க மாட்டார்கள். அவர்களை அடையாளம் காட்டி அப்புறப்படுத்த வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in