‘எம்ஜிஆர் ஃபார்முலா’வை உருவாக்கிய இயக்குநர்!

ப.நீலகண்டன் நினைவுநாளில் சில மலரும் நினைவுகள்
‘எம்ஜிஆர் ஃபார்முலா’வை உருவாக்கிய இயக்குநர்!

தமிழ் சினிமா நூற்றாண்டு கடந்து வெற்றிகரமாகப் பயணித்துக்கொண்டிருந்தாலும் ஐம்பதுகளில்தான் சினிமாவின் வெற்றி சூட்சுமங்களைப் புரிந்துகொண்டு, களமாடத் தொடங்கினார்கள். முன்னேர் செல்ல பின்னேர் அதன் பாதையில் போகும் என்பார்களே... அதுமாதிரியெல்லாம் இல்லாமல், தாங்கள் படித்த, கேட்ட, பார்த்த விஷயங்களையெல்லாம் கிரகித்துக்கொண்டு, அவற்றைப் படமாக்கினார்கள்.

எந்தக் கதையை சினிமாவாக எடுக்க வேண்டும், எதையெல்லாம் சொன்னால் மக்களுக்குப் புரியும், மக்களுக்குப் பயனுள்ள கருத்துகளை எப்படிச் சொல்வது, எந்த நடிகரைக் கொண்டு எதைச் சொன்னால், மக்களிடம் அவை சென்றுசேரும் என்பவற்றையெல்லாம் மிகத் துல்லியமாகக் கணித்து அவர்கள் உருவாக்கிய படங்கள் எல்லாமே இன்றைக்கும் பொக்கிஷங்கள். இப்படி எத்தனையோ இயக்குநர்கள், ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் வந்து ஏராளமான படங்களைக் கொடுத்திருக்கிறார்கள்.

இன்றைக்கு, படம் வெளியாகி மூன்று நாள் ஓடினால், ‘சக்ஸஸ் மீட்’ வைத்து ‘ஹேஷ்டேக்’கில் டிரெண்டிங் செய்கிறோம். ஆனால் அந்தக் கால இயக்குநர்களின் சரிதங்களை, வெற்றிகளை, படங்களை முறையாக ஆவணப்படுத்தக்கூட செய்யாமல் இருக்கிறோம். கொண்டாடப்பட வேண்டிய இயக்குநர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களில் இயக்குநர் ப.நீலகண்டனும் ஒருவர்.

பாகவதர் காலத்தில் தொடங்கி இன்றைக்கு சிம்பு, தனுஷ் வரை நீண்ட பயணத்துடன் வலம் வந்துகொண்டிருக்கிற தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜியின் சாதனைகள்தான் ஆகச்சிறந்த பொற்காலம் என்று தாராளமாகச் சொல்லலாம்.

‘சிவாஜிக்கு என்ன தீனி கொடுக்க வேண்டும்’ என்று பல இயக்குநர்களுக்குத் தெரியும். ‘எம்ஜிஆரை எப்படிக் காட்டினால், தியேட்டர் அதிரும்’ என பல இயக்குநர்கள், விரல் நுனியில் வைத்துக் கொண்டு அசத்தினார்கள். அப்படி எம்ஜிஆரின் முன்னே கண்ணாடியாக பிரதிபலித்து, வெற்றிக்கொடி நாட்டியவர் ப.நீலகண்டன்.

திரைக்கு உண்டான மொழியை மிக அழகாக உள்வாங்கிக்கொண்டவர். கதாபாத்திரங்களை வார்த்தெடுப்பதில் கெட்டிக்காரர். இரண்டரை மணி நேரப் படத்தில், மூன்று நிமிடமோ நான்கு நிமிடமோ வரக்கூடிய காட்சிகளை, ரசிகர்கள் இமைக்காமல், எழுந்திருக்காமல் ரசித்துப் பார்க்க வேண்டும் என்று ஒவ்வொரு காட்சியிலும் ‘ஷுகர் கோட்டிங்’ கொடுத்துக் கொண்டே வருவதில் திரைக்கதை ஜித்தன் நீலகண்டன். சினிமாவில் தான் அறிந்து, புரிந்து, உணர்ந்து, தெளிந்த விஷயங்களைப் பிறகொரு காலத்தில் புத்தகங்களாக எழுதினார். அந்தப் புத்தகங்களைப் படித்தால், சினிமாவின் கிழக்கு வடக்கையும் மேற்கு தெற்கையும் மிக எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.

1916 அக்டோபர் 2-ம் தேதி, காந்தி ஜெயந்தி நாளில் விழுப்புரத்தில் தேசிய உணர்வு மிக்க குடும்பத்தில் பிறந்தார் நீலகண்டன். அதனால்தானோ என்னவோ, அவருக்குள் காந்தியமும் தேசியமும் ஊறித்திளைத்தது. காங்கிரஸ்காரராகத் தன்னைக் காட்டிக்கொண்டுதான் வளர்ந்தார். இளம் வயதிலேயே எழுத்தின் மீது ஈடுபாடு வந்தது. நிறைய எழுதினார். அது கதையாக, உரையாடலாக, சினிமாவுக்கான திரைக்கதையாக, நாடகமாக என இருந்தது. ஊரிலும் சென்னையிலும் என பல நாடகங்களை அரங்கேற்றினார். அவர் உருவாக்கிய கதைக்கருவும் வசனங்களும் மக்களை வெகுவாகக் கவர்ந்தன.

ஒவ்வொரு நாடகமும் ஒவ்வொரு விதமாக, ஒவ்வொரு கருத்தைச் சொல்லும் வகையில் இருந்தது. அப்படித்தான் அந்த நாடகமும் அரங்கேறியது. ஏவி.மெய்யப்பச் செட்டியாருக்கு அந்த நாடகம் பற்றிச் சொல்லப்பட்டது. நாடகத்தைப் பார்க்க விரும்பினார். அரங்கிற்கு வந்தார். முழுமையாகப் பார்த்தார்.

‘யார் அந்த நீலகண்டன்? அவரைக் கொஞ்சம் வரச்சொல்லுங்க’ என்று சொல்லி அனுப்பினார். அதன்படி செட்டியாரைப் பார்த்தார் நீலகண்டன். ‘உங்க நாடகம் ரொம்ப நல்லாருக்கு. இதுக்குள்ளே அழகான சினிமா இருக்கு. நீங்க சம்மதிச்சா, இதை சினிமாவா எடுக்கலாம்’ என்று செட்டியார் சொல்ல, மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார் நீலகண்டன். உடனே சம்மதித்தார். அந்த நாடகம், சினிமாவாக்கப்பட்டது. செட்டியாரே படத்தை இயக்கினார். படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதுதான் நீலகண்டன் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் படம் ‘நாம் இருவர்’.

அந்தப் படத்துடன் ஏவி.எம் நிறுவனத்துக்கும் நீலகண்டனுக்குமான பந்தம் முடிந்துவிடவில்லை. தன் நிறுவனத்தில், கதை உள்ளிட்ட விஷயங்களுக்காக நீலகண்டனை வேலைக்குச் சேர்த்துக்கொண்டார் ஏவி.எம். செட்டியார். நீலகண்டனின் கதைத் தேர்வில், அந்தக் கதையில் உள்ள ஓட்டைகளை கவனித்துச் சொன்ன விதத்தில், அவருக்குள்ளிருக்கும் திறமை வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது. 'வேதாள உலகம்’, ’வாழ்க்கை’ முதலான ஏவி.எம் படங்களுக்கு வசனங்கள் எழுதினார்.

1951-ம் ஆண்டு, பேரறிஞர் அண்ணாவின் ‘ஓர் இரவு’ படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். அண்ணாவுடன் தொடர்பு ஏற்பட்டது. கலைஞருடன் நட்பு மலர்ந்தது.

ஏ.எல்.எஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, சிவாஜி கணேசன் நடித்த ‘அம்பிகாபதி’, எம்ஜிஆர் நடித்த ‘திருடாதே’ முதலான படங்களை நீலகண்டன் தயாரித்தார். சிவாஜியை வைத்து ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ படத்தை இயக்கினார். ’முதல் தேதி’ படத்தையும் சிவாஜியை வைத்து இயக்கினார். நீலகண்டனின் இயக்கத்தைக் கண்டு, ‘நீலகண்டா, உனக்கொரு பெரிய எதிர்காலம் இருக்குய்யா, கவனமா பண்ணு’ என்று சிவாஜி வாழ்த்தினார்.

1965-ல் ஏ.எல்.எஸ். தயாரிப்பில் ‘ஆனந்தி’ படத்தை இயக்கினார். அற்புதமான படம். மிகச்சிறந்த கதையும் திரைக்கதையுமாக வந்திருந்தது. ஆனால் படம் சரியாகப் போகவில்லை. ’எப்படி இந்தப் படம் தோற்றுப்போனது’ என்று வருந்தியபடியே பலகாலம் இருந்தாராம்.

எம்ஜிஆரை வைத்து ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தை இயக்கினார். மிகப்பெரிய வெற்றியை ருசித்தார் எம்ஜிஆர். அடுத்து, ’நல்லவன் வாழ்வான்’ படத்தை இயக்கினார். அப்போதுதான் நீலகண்டனுடன் எம்ஜிஆர் ரொம்பவே உரையாடினார். சினிமா மீது நீலகண்டனுக்குள் இருக்கும் காதலையும் திறமையையும் புரிந்துகொண்டார் எம்ஜிஆர். அதேபோல எம்ஜிஆர், தன் படங்களில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என நினைக்கிறார், எதிர்காலத்தில் அவர் எப்படியாக அறியப்பட வேண்டும் என விரும்புகிறார் என்பதையெல்லாம் நீலகண்டன் புரிந்துகொண்டார். இருவருக்குமான அந்தப் புரிதல், ஒரு நட்பாக, ஒரு உறவாக, பந்தமாக வேர்விட்டது. அதனால்தான் எம்ஜிஆரை வைத்து அதிக படங்களை இயக்கியவர் என்று நீலகண்டனுக்கு பெருமை ஏற்பட்டது. எம்ஜிஆரை வைத்து 18 படங்களை அவர் இயக்கியிருக்கிறார்.

கலைஞருடனான நட்பால், ‘பூம்புகார்’ படத்தை இயக்கும் வாய்ப்பு நீலகண்டனுக்குக் கிடைத்தது. எம்ஜிஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் என அப்போதைய முன்னணி நடிகர்கள் பலரை வைத்து படங்களை இயக்கினார். அதே எஸ்.எஸ்.ஆரை வைத்து ‘அவன் பித்தனா?’ என்ற படத்தை இயக்கினார். இந்த இரண்டு படங்களையும் பத்திரிகை விமர்சனங்கள் கொண்டாடித் தீர்த்தன.

அதேசமயம், ‘கொடுத்து வைத்தவள்’, ’காவல்காரன்’, ’கண்ணன் என் காதலன்’, ’கணவன்’, ‘மாட்டுக்கார வேலன்’, ‘என் அண்ணன்’, ’குமரிக்கோட்டம்’, ’ஒரு தாய்மக்கள்’, ’நீரும் நெருப்பும்’ என்று வருடத்துக்கொரு படம் வீதம் எம்ஜிஆரை வைத்துத் தொடர்ந்து இயக்கினார். இன்றைக்கு சினிமாவில் எம்ஜிஆர் ஃபார்முலா என்று சொல்லிவருகிறோம். அதைத்தான் உல்டாபுல்டா செய்து சினிமாவின் வெற்றி ஃபார்முலா என்று பெயரிட்டார்கள், பின்னால் வந்தவர்கள்.

அந்த ‘எம்ஜிஆர் ஃபார்முலா’வை உருவாக்கியவர்களில் மிக முக்கியமானவர் இயக்குநர் நீலகண்டன். எம்ஜிஆர் எனும் ஹீரோவை ‘கலெக்‌ஷன் ஹீரோ’வாக, ‘சூப்பர் ஹீரோ’வாக, ‘வசூல் சக்கரவர்த்தி’யாக, முக்கியமாக மக்களுக்கு நெருக்கமானவராக, மக்களில் ஒருவராக, மக்களுக்காக எதையும் செய்பவராகத் திரையில் உருவாக்கிக் காட்டினார். எம்ஜிஆர் சினிமா வாழ்விலும் அரசியல் வாழ்விலும் தனித்துவமும் மகத்துவமும் பெறுவதற்கு, இயக்குநர் நீலகண்டனின் திரைமொழி உத்திகள் ரொம்பவே உதவின.

’எந்தக் கதையாக இருந்தாலும், அதை மக்களுக்குப் புரியும் வகையில் படமாக்குகிற வித்தையில் நீலகண்டன் கில்லாடி’ என்று எம்ஜிஆரால் புகழப்பட்டார். அந்தக் கதைக்குள் எம்ஜிஆருக்குத் தேவையான விஷயங்களை, பார்க்கிறவர்களுக்கு உறுத்தாமலும் அதேசமயம் பிரச்சார நெடி இல்லாமலும் திரைக்கதைக்குள் தூவிக்கொண்டே வந்தார் நீலகண்டன்.

பரபரப்பான சூழலில், எம்ஜிஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ உருவானது. படம் பூஜை போடப்பட்ட சமயத்தில் ‘இயக்குநர் ப.நீலகண்டன் படத்தை இயக்குவார்’ என்று அறிவிக்கப்பட்டது. பிறகு ஏனோ தேவைக்காக, எம்ஜிஆரே படத்தை இயக்கினார். ஆனாலும் இயக்கத்தில் தன் பங்களிப்பு மொத்தத்தையும் வழங்கினார் நீலகண்டன். எம்ஜிஆரும் அவரிடம் கேட்டுக்கேட்டு, கதையையும் படமாக்குதலையும் செய்தார். இன்றைக்கும் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ டைட்டிலில், நீலகண்டனுக்கு நன்றி தெரிவித்து, உரிய மரியாதையும் அங்கீகாரத்தையும் கொடுத்திருப்பார் எம்ஜிஆர்.

கிட்டத்தட்ட அறுபதுகளில் இருந்து தொடங்கிய எம்ஜிஆர் - ப.நீலகண்டன் கூட்டணி, ’ராமன் தேடிய சீதை’, ‘நேற்று இன்று நாளை’ என்றெல்லாம் வளர்ந்து, 1975-ல் ‘நினைத்ததை முடிப்பவன்’, 1976-ல் ‘நீதிக்கு தலைவணங்கு’ ஆகிய படங்கள் வரை தொடர்ந்தது. ‘தெய்வத் திருமணங்கள்’ என்ற படத்தை எண்பதுகளின் தொடக்கத்தில் இயக்கினார்.

கன்னடம் மற்றும் சிங்களப் படங்களைக்கூட இயக்கியிருக்கிறார் நீலகண்டன். எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிக்குமார் போன்ற வெற்றிகரமான கமர்ஷியல் இயக்குநர் என்கிறார்கள் திரை ஆர்வலர்கள். ‘படத்துக்கு அதிகம் செலவு வைக்கக் கூடாது, போட்ட முதலுக்கு லாபம் கிடைத்துவிட வேண்டும், எல்லா வயதினரும் வந்து படம் பார்க்க வேண்டும்’ என்கிற திட்டதுடன்தான் கதையையே தேர்வு செய்வார் நீலகண்டன். தயாரிப்பாளர்களின் இயக்குநர், நடிகர்களின் இயக்குநர் என்றெல்லாம் போற்றிப் புகழப்படும் இயக்குநர் ப.நீலகண்டன் 1992 செப்டம்பர் 3ம் தேதி, 76-வது வயதில் மறைந்தார்.

எம்ஜிஆரை ‘காலத்தை வென்றவன்’ என்பார்கள். எம்ஜிஆரின் சரிதம் சொல்லப்படுகிறபோதெல்லாம் இயக்குநர் ப.நீலகண்டன் எனும் மகா கலைஞனை, நினைவுப்படுத்திக்கொண்டே இருக்கும் காலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in