#Oscars2024 | மொத்தமாக 7 விருதுகளை அள்ளி மாஸ் காட்டிய ‘ஓப்பன்ஹெய்மர்’... மேடையில் உருக்கமாக பேசிய நோலன்!

இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்
இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்

இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம் இன்று பல்வேறு பிரிவுகளில் ஏழு ஆஸ்கர் விருதுகளை அள்ளியுள்ளது. இதுவரை எட்டுமுறை ஆஸ்கர் விருதுக்காக நாமினேட் ஆன நோலன் தன்னுடைய முதல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். இது குறித்து நோலன் மேடையில் உருக்கமாகப் பேசியுள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 96ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று அதிகாலை 4 மணி முதலே தொடங்கியது. ’ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம் அதிக விருதுகளை வெல்ல வேண்டும் என நோலன் ரசிகர்கள் இணையத்தில் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி வந்தனர். அவர்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தியாக்கும் விதத்தில், பல்வேறு பிரிவுகளில் ’ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம் விருதுகளை வென்று குவித்துள்ளது.

அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஒப்பன்ஹெய்மர் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம் உலகம் முழுவதும் திரையுலக ரசிகர்களைக் கவர்ந்தது.

ஒப்பன்ஹெய்மர்
ஒப்பன்ஹெய்மர்

சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த உறுதுணை நடிகர், சிறந்த இசையமைப்பு, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு என ஏழு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை அள்ளியுள்ளது ’ஓப்பன்ஹெய்மர்’. கற்பனைக்கும் அப்பாற்பட்டப் படங்களை இயக்குவதற்குப் பெயர் போன இயக்குநர் நோலன் வெல்லும் முதல் ஆஸ்கர் விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முந்தைய ஆண்டுகளில் எட்டுமுறை ஆஸ்கர் விருதுகளுக்காக நாமினேட் செய்யப்பட்டிருந்தாலும் நோலன், ஒவ்வொரு முறையும் நூலிழையில் விருதை தவறவிட்டிருந்தார். இந்த முறை கோல்டன் குளோப் விருதுகளில் ‘ஓப்பன்ஹெய்மர்’ ஆதிக்கம் செலுத்தியதால், அவர் நிச்சயமாக ஆஸ்கர் வெல்வார் என ரசிகர்கள் உறுதியாக நம்பினர்.

ஆஸ்கர் விருது வென்றதாக அறிவிக்கப்பட்டவுடன் மேடையில் தோன்றிய நோலன், “அகாடெமி நூறு ஆண்டுகளை நெருங்குகிறது. இத்தனை வருடங்களில் எத்தனையோ படங்களைப் பார்த்திருக்கும். இந்த நம்பமுடியாத பயணம் இங்கிருந்து எங்கு செல்கிறது என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், நான் அதில் ஒரு அர்த்தமுள்ள பகுதி என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இந்த விருதும் அதைத்தான் உணர்த்துகிறது. இது எனக்கு இந்த உலகத்தில் எதை விடவும் பெரிது” என்று உருக்கமாக பேசினார். மேலும், தன்னை முழுவதுமாக நம்பிய ரசிகர்களுக்கும், குடும்பத்தினருக்கும், திரைத்துறையினருக்கும் நன்றி கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in