’லியோ’ படப்பிடிப்பில், மைனஸ் 12 டிகிரி வெப்பநிலையில் 500 பேர் அடங்கிய படக்குழுவினர் தீவிரமாக உழைத்து வருவதாக இயக்குநர் மிஷ்கின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலான ‘லியோ’ திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்புக்காக லியோ குழு, காஷ்மீரில் முகாமிட்டுள்ளது. உறை நிலைக்கு கீழான சீதோஷ்ணம் நிலவுவதால், படக்குழுவினர் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
14 ஆண்டுகளுக்குப் பின்னர் விஜய் உடன் இணைந்து நடிக்கும் நடிகை த்ரிஷாவுக்கு இந்த கடும்குளிர் ஒத்துக்கொள்ளாததில், காஷ்மீருக்கு வெளியே தங்கியிருந்து விமானத்தில் சென்று படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இதுபோன்றே பலரும் சவால்களுக்கு ஆளானபோதும், கதைக்குத் தேவை என்பதால் கடும்குளிரின் மத்தியில் பரபரப்பான படப்பிடிப்பை லியோ குழுவினர் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் லியோ திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதற்காக காஷ்மீர் சென்ற இயக்குநர் மிஷ்கின், தனது பகுதி நிறைவு பெற்றதை அடுத்து அங்கிருந்து திரும்பியுள்ளார். கடும்குளிரின் மத்தியிலும் லியோ குழுவினரின் உழைப்பை சிலாகித்து பதிவு ஒன்றையும் மிஷ்கின் வெளியிட்டுள்ளார்.
”காஷ்மீரில் இருந்த சென்னை திரும்புகிறேன். மைனஸ் 12 டிகிரியில் 500 பேர்கொண்ட லியோ படக்குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது.
ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவு மிகச்சிறப்பாக ஒரு சண்டை காட்சியை படமாக்கினார். உதவி இயக்குனர்களின் ஓயாத உழைப்பும், என்மேல் அவர்கள் காட்டிய அக்கறையும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. படத்தின் தயாரிப்பாளர் லலித் அந்த குளிரிலும் ஒரு சக தொழிலாளியாக உழைத்துக்கொண்டிருந்தார்.
படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குனராக அன்பாகவும், கண்டிப்பாகவும், ஒத்த சிந்தனையுடனும், ஒரு பெரும் வீரனைப்போல் களத்தில் இயங்கிக்கொண்டிருந்தார். என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத் தழுவினார். அவர் நெற்றியில் நான் முத்தமிட்டேன்.
என் அருமை தம்பி விஜயுடன் ஒரு நடிகனாக இந்தப் படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன். அவர் என்னுடன் பண்பாக நடந்துகொண்ட விதத்தையும், அவரது அன்பையும் நான் என்றும் மறவேன். லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும்” இவ்வாறு தனது வாழ்த்து செய்தியில் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
லியோ திரைப்படத்தில் விஜய், த்ரிஷா உடன் கெளதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் இணைந்து நடிக்கின்றனர்.