
’விஷாலுடன் இனி படம் பண்ண மாட்டேன்’ என இயக்குநர் மிஷ்கின் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ், கெளரி கிஷன் நடிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் ‘அடியே’. இதன் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் மிஷ்கின் பேசினார். அப்போது, “ஜி.வி பிரகாஷ் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து இன்று தமிழில் தவிர்க்க முடியாத நடிகராக உயர்ந்திருக்கிறார். எல்லோரிடமும் இனிமையாகவே பேசக் கூடியவர். இன்றைய இளைய தலைமுறை படைப்பாளிகளை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.
சயின்ஸ் ஃபிக்சன் படத்தை தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக சொல்ல முடியுமா? என்ற கேள்வி இருக்கிறது. இதுபோன்ற படங்களில் எல்லாம் ஹாலிவுட்டில் தான் தயாரிப்பார்கள். அவர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், தமிழ் சினிமாவில் இது எப்படி சாத்தியம்? அதுவும் சயின்ஸ் ஃபிக்சன் விஷயத்தை காதலுடன் கலந்து கொடுப்பது என்பது ஆச்சரியமான ஒன்று.
சினிமாவில் ஒரு நபரை நகைச்சுவைக்காக விமர்சிக்க முழு உரிமை கொடுக்க வேண்டும். இன்று காலை என் படத்தின் இறுதி காட்சி எழுதி கொண்டிருந்தேன். ஒரு கதாபாத்திரத்துக்கு 'இளையராஜா' என பெயர் வைத்தேன். என் அப்பாதான் அவர். இருந்தாலும் பெயர் வைத்தால் அவரே என் மேல கேஸ் போடுவார்" என நகைச்சுவையாக குறிப்பிட்டார். மேலும் நடிகர் விஷாலுடனான பிரச்சினை குறித்தும் மிஷ்கின் பேசினார்.
அப்போது அவர், "செய்த துரோகத்தை மறக்க மாட்டேன் என விஷால் சொல்கிறான். அவன் என் இதயத்திற்கு நெருக்கமானவன். சண்டை போடாமல் எப்படி வாழ்க்கை இருக்கும்? அவன் கூட படம் பண்ணலைன்னாலும் அவனோட படம் ஹிட்டாகணும். உடனே எல்லோருக்கும் விஷாலுக்கு ஐஸ் வைக்கிறேன் என எழுதுவாங்க. ஆனால், அவன்கூட இனிமேல் படமே பண்ணமாட்டேன்" என்றார்.