இப்படி ஒரு கதையை எடுப்பேனா என்று பலர் கேட்டனர்! `ரெய்டு' குறித்து இயக்குநர் முத்தையா!
``மண் சார்ந்த படங்களை எடுத்த என்னிடம் சிட்டி சார்ந்த கதைகளை எடுப்பேனா என என்னிடமே பலர் கேட்டனர்'' என இயக்குநர் முத்தையா பேசியுள்ளார்.
விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர் முத்தையா வசனத்தில் அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள 'ரெய்டு' திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 10ம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
இதில் கலந்து கொண்ட இயக்குநரும் இந்தப் படத்தின் வசனகர்த்தாவுமான முத்தையா பேசியிருப்பதாவது, " 'கொம்பன்', 'மருது' போன்ற மண் சார்ந்த படங்களை முடித்துவிட்டு சிட்டி சார்ந்த ஒரு கதை எடுப்போம் என நினைத்திருந்தேன்.

ஆனால், பலரும் நான் அதுபோல சிட்டி சார்ந்த கதைகளை எடுப்பேனா என என்னிடமே கேட்டனர். அந்த நம்பிக்கையை என் மீது உருவாக்க வேண்டும் என்பதற்காகவே 'ரெய்டு' படத்தின் ஒரிஜினல் ரீமேக் உரிமையை நான் வாங்கினேன்.
அந்த சமயத்தில் 'டாணாக்காரன்' நல்ல ரீச் இருந்தபோது விக்ரம் பிரபு சாரிடம் படம் காட்டி கேட்டேன். அவரும் ஒத்துக் கொண்டார். என் பெயருக்காக இதில் பல பேர் வந்திருப்பது மகிழ்ச்சி. 'ரெய்டு' படம் நன்றாக வந்திருக்கிறது. தீபாவளிக்கு நல்லபடியாக வெற்றி பெற வேண்டும்" என்றார்.

நடிகர் கண்ணன் பொன்னையா பேசும்போது, ``சூர்யாவுக்கு 'காக்க காக்க' போல, விக்ரமுக்கு 'சாமி' போல, விக்ரம் பிரபுவுக்கு 'ரெய்டு' போலீஸ் படங்களில் ஒரு பிராண்டாக அமையும்'' என்றார்.