மகேந்திரன் எனும் மரபு மீறாத புதுக்கவிதை!

மகேந்திரன் எனும் மரபு மீறாத புதுக்கவிதை!

இன்றைக்கு மணிரத்னம் இயக்கத்தில், பிரம்மாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கிறது ‘பொன்னியின் செல்வன்’. எம்ஜிஆர் ஆசைப்பட்ட ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைக்கதையாக்கும் பொறுப்பு மகேந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது.

என்னதான் வசூல் சாதனைப் படங்கள் வந்தாலும், இந்த வியாபார வகைகளையெல்லாம் கடந்து, மனதைப் பாதிக்கச் செய்கிற, கனக்க வைக்கிற படங்கள் எப்போதாவதுதான் வரும். அப்படியான படங்களை, ரசிகர்கள் ஒருபோதும் கைவிடமாட்டார்கள். உள்ளங்கையில் ஏந்தி, மனப்பத்தாயத்தில் பொக்கிஷமாக வைத்துக் கொள்வார்கள். அப்படியான படங்களை மட்டுமே நமக்குத் தந்தவர் இயக்குநர் மகேந்திரன்.

கம்பீரமான படைப்பாளி. அவரின் நடையும் உடையும் போலவே, படைப்புகளும் நேர்த்தியானவை. மாணவப் பருவத்தில் காரைக்குடியில் எம்ஜிஆரைப் பார்த்தார். லட்சக்கணக்கான ரசிகர்களை தன் வசீகர முகத்தால் ஈர்த்த எம்ஜிஆரை, மகேந்திரன் ஈர்த்தார். பிறகு அவராலேயே சென்னைக்கும் திரையுலகிற்குமாக வந்தார்.

இன்றைக்கு மணிரத்னம் இயக்கத்தில், பிரமாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கிறது ‘பொன்னியின் செல்வன்’. எம்ஜிஆர் ஆசைப்பட்ட ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைக்கதையாக்கும் பொறுப்பு மகேந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அப்படியே நின்றும்போனது.

ஆனால் எம்ஜிஆருடன் எந்தப் படமும் பண்ணவில்லை. சோ நடத்திய ‘துக்ளக்’ பத்திரிகையில் சேர்ந்தார். சினிமா விமர்சனங்கள் எழுதினார். செந்தாமரையுடன் பழக்கமானார். நாடகங்களும் கதைகளுமாக எழுதினார். சிவாஜி நடித்த ‘நிறைகுடம்’ படத்துக்கு கதை, வசனம் எழுதினார் மகேந்திரன். படம் ஹிட்டானது.

அதேபோல், இவரின் நாடகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதை சிவாஜியே தயாரித்து நடித்தார். அந்தப் படம்தான், தமிழ் சினிமாவின் போலீஸ் படங்களுக்கான முதல் ஐகான் என்று இன்றளவும் கொண்டாடப்படுகிறது. ’தங்கப்பதக்கம்’ எஸ்.பி.செளத்ரியையும் ஜெகனையும் மறக்கமுடியுமா?

கமலும் ரஜினியும் சேர்ந்து நடிக்க, எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான ‘ஆடு புலி ஆட்டம்’ படத்தின் கதை வசனத்தை எழுதினார். இவையெல்லாம் எல்லோரும் எப்போதும் எடுக்கிற படங்களாகத்தான் இருந்தன. அதில் சின்னச் சின்னக் காட்சிகளிலும் வசனங்களிலும் கவனம் ஈர்த்தார் மகேந்திரன். இப்படியாக எத்தனையோ படங்கள். ஆனாலும் சினிமாவே வேண்டாம் என்று சொந்த ஊருக்குப் போய்விடுகிற மனநிலையிலேயே இருந்தார் மகேந்திரன். .

அந்த சமயத்தில்தான் மகேந்திரனுக்கு இயக்கும் வாய்ப்பு வந்தது. அதுவரை, எத்தனையோ இயக்குநர்களுக்கு கதைகள் கொடுத்த மகேந்திரன், தான் படம் இயக்க வந்தபோது, நல்ல நாவல்களைப் படமாக்கவே விரும்பினார். ‘முள்ளும் மலரும்’ அப்படித்தான் உருவானது. ரஜினி இன்றைக்கு மிகப்பெரிய சூப்பர் ஸ்டார். அவர், மிக இயல்பாகவும் நடிக்கமுடியும் என மகேந்திரன் நிரூபித்தார். அண்ணன், தங்கை பாசம் என்கிற டெம்ப்ளேட்டுக்குள் சிக்காமல், அண்ணன் தங்கையின் உணர்வுகளைப் படமாக்கியதுதான் மகேந்திரன் படத்தை தனித்துக் காட்டியது.

’முள்ளும் மலரும்’ படத்தைத் தொடர்ந்து அடுத்ததாகவும் பூக்கள்தான். அவை... ‘உதிரிப்பூக்கள்’. அழகிய திரைக்கதை. கவிதை மாதிரியான காட்சிகள். ஒளிப்பதிவு, இசை, வசனம், நடிப்பு முதலானவற்றை நீள அகல ஆழங்கள் அதிகரிக்காமல், மிகைப்படுத்தாமல் படைத்தார். . நோய்வாய்ப்பட்ட மனைவிக்கு சபலமும் சாடிஸ்ட் குணமும் கொண்ட கணவன், அவர்களின் குழந்தைகள், அந்த அழகிய கிராமம், படைப்பின் உள்ளே இருக்கிற மாந்தர்கள் மட்டுமின்றி ஒவ்வொரு மரமும் கரையும் சலனமற்ற நதியும் கூட மகேந்திரனுக்குக் கட்டுப்பட்டு நடித்திருப்பதை உணர்ந்து சிலிர்த்துக் கலங்காதவர்களே இல்லை.

பக்கம்பக்கமான வசனங்களால் கைதட்டல் பெற்ற சினிமாப் படங்களை, நீளமான மெளனங்களாலும் உணர்வுகளாலும் கைதட்டச் செய்தார் மகேந்திரன். நடிகர்களின் பின்னே ஓடிக்கொண்டிருந்த சினிமாவில், கதையின் பின்னே நடிகர்களையும் ஓடச் செய்தார். ரஜினி மாதிரியான நடிகர்களைக் கூட, கேரக்டர் வழியே உருமாற்றினார்.

தமிழ் சினிமாவில் பாடல்கள் தவிர்க்கமுடியாதவை. ஆனாலும் பாடல்களிலும் முத்திரை பதித்தார். ‘செந்தாழம்பூவில்’ , ‘அழகிய கண்ணே’ , ‘அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா’, அம்மாவும் இரண்டு மகள்களும் சேர்ந்து குதூகலிக்கிற ‘மெட்டி ஒலி காற்றோடு’ பாடலாகட்டும், மேடைப் பாடகி பாடுகிற ‘காற்றில் எந்தன் கீதம்’ பாட்டாகட்டும்... ஒவ்வொன்றிலும் நியாயங்களும் கவிதையும் ரசனையும் கதையும் கனமும் சொன்னார் மகேந்திரன். ஒருபக்கம் அசோக்குமாரையும் மற்றொரு பக்கம் இளையராஜாவையும் வைத்துக்கொண்டு, மகேந்திரன் செதுக்கியவையெல்லாம் சிற்பங்களாகின. அதனால்தான் காலத்துக்கும் பேசப்படுகின்றன.

மகேந்திரன் படங்கள் அனைத்துமே பாடங்கள். கடந்த 40 வருடங்களில் உதயமான இயக்குநர்கள் பலரும், மகேந்திரன் படங்களைச் சிலாகிக்காமல் இருக்கவே மாட்டார்கள். ஆனால் என்ன... மகேந்திரன் படங்கள் போல் எடுக்கத்தான் இதுவரை எவரும் வரவில்லை. ‘பூட்டாத பூட்டுக்கள்’, ‘நண்டு’, ‘மெட்டி’ என இவரின் படைப்புகள் அனைத்தும் மனித குணங்களின் வார்ப்புகள்.

மகேந்திரன்... தமிழ் சினிமாவின் தனிக்கல்வெட்டு. புதுக்கவிதை. மரபு மீறாத புதுக்கவிதை. வித்தியாசமானதொரு அத்தியாயம். இயல்பானதொரு சங்கீத மெளனம்.

- இயக்குநர் மகேந்திரன் பிறந்தநாள் (ஜூலை 25) சிறப்புக் கட்டுரை

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in