இயக்குநர் என்.லிங்குசாமி
இயக்குநர் என்.லிங்குசாமி

இயக்குநர் லிங்குசாமி: தோல்விக்கு ‘அஞ்சான்'!

பிறந்தநாளில் சிறப்புப் பகிர்வு

இன்னவிதமான திரைப்படங்களைத்தான் இவர் எடுப்பார் என்று ஒரு சில இயக்குநர்களைத் திட்டவட்டமாக வரையறுத்துக்கொள்ள முடியும். ஆனால், காதலையும் குடும்பத்தையும் சொல்வது, காதலையும் ஆக்‌ஷனையும் சொல்வது, காதலையும் அரசியலையும் சொல்வது என வெரைட்டி காட்டிக்கொண்டே இருக்கும் இயக்குநர்களில் லிங்குசாமி முக்கியமானதொரு இடத்தில் இருக்கிறார்.

ராமநாதபுரம் பரமக்குடிப் பக்கமுள்ள கிராமம்தான் சொந்த ஊர். சிறுவயதில் படித்ததெல்லாம் இங்குதான். சில வருடங்களில், மொத்தக் குடும்பமும் கும்பகோணம் குடவாசலுக்கு வந்தார்கள். அங்கே படிப்பு மீண்டும் தொடங்கியது. பிறகு கும்பகோணம் கல்லூரியில் படித்தார்.

படித்துக்கொண்டிருந்தாலும் லிங்குசாமிக்குப் படங்களின் மீதுதான் அதீத விருப்பம். ஒருகட்டத்தில் தன் விருப்பத்தை வீட்டில் சொல்லும் தருணம் வந்தது. குடும்பத்தினர் கொந்தளிக்கவில்லை. அப்பா கட்டையைப் போடவில்லை. சகோதரர்கள் குறுக்கே நிற்கவில்லை. ‘இதான் உன் விருப்பம்னா... தாராளமா போ. போய் ஜெயிச்சிட்டு வா’ என்று வாழ்த்தி, கைகுலுக்கி அனுப்பிவைத்தது வீடு.

ஆனால் கோடம்பாக்கம், உடனே ‘வாங்க வாங்க’ என்றெல்லாம் கைகொடுக்கவில்லை. சிலபல போராட்டங்கள், காத்திருப்புகள். அதன் பின்னர் இயக்குநர் விக்ரமனிடம் உதவி இயக்குநராகச் சேரும் வாய்ப்புக் கிடைத்தது. சூப்பர் குட் பிலிம்ஸுக்கு விக்ரமன் படங்கள் செய்ய, அதற்குப் பக்கத்துணையாக உதவி இயக்குநராக தன் வேலையைச் சிறப்புறச் செய்தார் லிங்குசாமி. எல்லோராலும் கவனிக்கப்பட்டார்.

‘கதை ஏதாவது ரெடி பண்ணி வச்சிருந்தா சொல்லுங்க தம்பி’ என்று சூப்பர்குட் பிலிம்ஸ் சொல்லியது. குருவி சேகரித்து அடைகாத்து வைத்தது போல, நான்கைந்து கதைகள் முழுவதுமாகவும் பாதியளவிலும் ஒன்லைனாக மட்டும் என்றெல்லாம் வைத்திருந்ததைச் சொன்னார் லிங்குசாமி. அதில் ஒரு கதையைத் தேர்வு செய்தார் ஆர்.பி.செளத்ரி.

அவர் சம்மதம் சொல்லியதும் லிங்குசாமி ஆனந்தப்பட்டுப் போனார். வீட்டுக்குத் தகவல் சொல்ல, மொத்த வீடும் ஆனந்தமானது. முதல் படம் கிடைத்த சந்தோஷம் ஒருபக்கம், ஜெயித்துவிட வேண்டும் என்கிற வெறி இன்னொருபக்கம் என ஆனந்தமாக படவேலைகளைத் தொடங்கினார். ‘ஆனந்தம்’ என்றே பெயர் வைத்தார். மம்முட்டி, முரளி, அப்பாஸ், டெல்லி கணேஷ், ஸ்ரீவித்யா, விஜயகுமார், சினேகா முதலானோர் நடித்த இந்தப் படம், மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

கும்பகோணத்திலும் அதைச் சுற்றி உள்ள ஊர்களிலும் படப்பிடிப்பை நடத்தினார். கும்பகோணத்திலும் திருவாரூரிலும் தஞ்சாவூரிலும் உள்ள தியேட்டர்களில் எத்தனையெத்தனை படங்களையோ பார்த்த லிங்குசாமியின் திரைப்படம், அந்த ஊரில் உள்ள தியேட்டர்களில் வெளியானது கூடுதல் ஆனந்தம்.

ஒவ்வொருவரும் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் படம் எடுத்திருந்ததால், மொத்த ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். கவிஞர் யுகபாரதியை, ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்’ பாடலின் மூலம் அறிமுகப்படுத்தினார். பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

அடுத்து, சூர்யா மூவீஸ் ஏ.எம்.ரத்னத்துக்கு. மாதவனையும் மீரா ஜாஸ்மினையும் வைத்து ‘ரன்’ படத்தை இயக்கினார். அதுவரை ‘சாக்லெட் பாய்’ மனநிலையில்தான் மாதவனைப் பார்த்தார்கள் ரசிகர்கள்.

வெறித்தனமான ஆக்‌ஷனை மாதவனிடம் இருந்து எதிர்பார்க்கவே இல்லை. ‘காதல் எதையும் செய்யவைக்கும்’ என்பதை ஆக்‌ஷனில் தெறிக்கவிட்ட லிங்குசாமி, காதலைக் கவிதையாக்கி நம் மனங்களை றெக்கை இல்லாமலே பறக்கவிட்டார். வித்யாசாகரின் இசையும் பாடல்களும் படத்தின் வேகத்துக்கு ஈடுகொடுத்தன. நல்ல வரவேற்பைப் பெற்றன.

சுரங்கப்பாதையில், விறுவிறுவென ஓடி, ஷட்டர் சார்த்தும் காட்சியை வைத்துக்கொண்டு, காமெடியாகவும் மீம்ஸாகவும் இன்றைக்கும் பல படங்களும் வலைதளங்களிலுமாக ‘ரிப்பீட்டு’ செய்துகொண்டே இருக்கும் அளவுக்கு, அந்தக் காட்சி மிகப்பெரிய ‘அப்ளாஸ்’ அள்ளிய, மறக்க முடியாத காட்சியானது. பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது ‘ரன்’ திரைப்படம். லிங்குசாமி என்றால் குறிப்பிட்ட வகைப் படங்களை மட்டுமே எடுப்பவர் அல்ல. அவர் எப்பேர்ப்பட்ட படங்களையும் தருவார் என ரசிகர்கள் புரிந்துகொண்டனர். பரவலான ரசிகர் வட்டம் உருவானது.

மூன்றாவது படம் ‘ஜி’. அதே கும்பகோணம், கல்லூரி, கும்பகோணம் தெருக்கள், கோயில்கள், காதல், அஜித், த்ரிஷா, வெங்கட்பிரபுவை நடிக்கவைத்தது, கூடவே அரசியல் பேசியது என்பவையெல்லாம் சேர்ந்து படத்தை இப்படியா... அப்படியா... என ரசிகர்களால் கிரகிக்க முடியாமல் செய்தது. படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

அதேசமயம், இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால், இளைஞர்களின் அரசியல் வருகையைப் பேசுகிற படம் என வேறொரு வண்ணம் கிடைத்து, வேறொரு வெற்றியும் கிடைத்திருக்கும்.

லிங்குசாமி இசையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். அவர் படங்களில் எவர் இசையமைத்தாலும் பாடல்கள் எல்லாமே தனித்துவமாக இருக்கும். அதைப் படமாக்குவதிலும் வித்தைகள் செய்வார் லிங்குசாமி. அதேபோல, அவர் படத்தின் மற்றுமொரு பலம்... வசனங்கள். அவரின் நெருங்கிய நண்பர் பிருந்தாசாரதிதான் அவர் படங்களுக்கு வசனம் எழுதுவார். வசனங்களில் காட்சிகளுக்குத் தகுந்த சுவையைக் கூட்டிக்கொண்டே வருவார். ‘ஜி’ படத்தில் இடம்பெற்ற ‘டிங்டாங் கோயில்மணி’ பாடல் தனிப்பட்ட முறையில் என்னால் மறக்கவே முடியாது. செல்போன் நான் வாங்கிய காலம் அது. காலர் டியூனாக பாடல்களை வைத்துக்கொள்ளலாம் என்று தொடங்கிய காலமும் அதுதான். என் செல்போனில் முதன்முதலாக நான் வைத்துக்கொண்ட பாடல் ‘டிங்டாங் கோயில்மணி’தான்!

விஷாலின் திரையுலக வாழ்வைச் சொல்லும்போது, லிங்குசாமியை அவசியம் சொல்லியே ஆக வேண்டும். ‘செல்லமே’ படத்தில் படபடவென வந்திருந்தாலும் ‘சண்டக்கோழி’ படம்தான் இன்றைக்கு வரை ஆக்‌ஷன் ஹீரோவாக அவர் உயர்ந்து நிற்க, அடித்தளமிட்ட படமாக அமைந்திருக்கிறது.

சென்னை, சிதம்பரம், மதுரை, தேனி மாவட்டம் என்றெல்லாம் பயணிக்கிற திரைக்கதையுடன் சேர்ந்து நாமும் பயணித்தோம். இரு தரப்பினரும் வெறிகொண்டு சண்டை போட்டபோது, நாமும் ஏதோவொரு வீட்டுக்குள் நுழைந்து, கதவு சார்த்தி, ஜன்னலிடுக்கு வழியே பார்ப்பதுபோல சண்டைக்காட்சிகளை வியந்து வேடிக்கை பார்த்தோம். ‘ஒத்தைக்கு ஒத்தை’ மோதுகிற கான்செப்ட் லிங்குசாமி ஸ்டைல். படத்தில் ஒருகாட்சியில் அல்லது க்ளைமாக்ஸில் எப்படியும் ‘ஒத்தைக்கு ஒத்தை’ சண்டையைப் போட்டு வில்லனின் பலத்தையும் காட்டுவார். ஹீரோவின் துடிப்பையும் தெறிக்கவிடுவார்.

விக்ரமை வைத்து ‘பீமா’ பண்ணினார். அது வேறொரு களம். கார்த்தியை வைத்து ‘பையா’ பண்ணினார். அதுவொரு அழகிய டிராவலிங். சூர்யாவை வைத்து ‘அஞ்சான்’. விஷாலை வைத்து ‘சண்டக்கோழி 2’ என்றெல்லாம் தொடர்ந்து படங்களை இயக்கிக்கொண்டிருந்தாலும், இன்னொரு விஷயத்தில் லிங்குசாமியும் அவரின் சகோதரர்களும் ரொம்பவே கவனம் ஈர்த்தார்கள். தன் சகோதரர்களுடன் இணைந்து ‘திருப்பதி பிரதர்ஸ்’ எனும் பேனரில் லிங்குசாமி தயாரித்த படங்கள் அனைத்துமே எல்லோராலும் ரசிக்கப்பட்ட, கூர்ந்து கவனிக்கப்பட்ட, பல தரப்பினராலும் கொண்டாடப்பட்ட படங்கள்.

ஜெயம் ரவியை வைத்து ‘தீபாவளி’ தயாரித்தார். பின்னர் ’பட்டாளம்’ தயாரித்தார்... ‘பையா’ தயாரித்தார். பாலாஜி சக்திவேல் எனும் அற்புதமான இயக்குநரின் இயக்கத்தில், ‘வழக்கு எண் 18/9’ படத்தைத் தயாரித்தார். பிரபு சாலமன் இயக்கத்தில், ‘கும்கி’யைத் தயாரித்தார். ’எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கத்தில் ‘இவன் வேற மாதிரி’ எனும் படத்தைத் தயாரித்தார். தனக்கு மிகப் பிடித்த நடிகர், ஆசான் என்று இன்றைக்கும் கொண்டாடிப் போற்றுகிற கமல்ஹாசனை வைத்து ‘உத்தமவில்லன்’ படத்தைத் தயாரித்தார். ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன் இயக்கிய ‘கோலிசோடா’ படத்தையும் அவர்தான் தயாரித்தார்.

தொடர்ந்து இரண்டு படங்களை அஜித்தை வைத்து இயக்கிவிட்டு மூன்றாவதாகவும் அஜித்தை வைத்து ‘துணிவு’ பண்ணிக்கொண்டிருக்கும் ஹெச்.வினோத்தின் முதல் படமான ‘சதுரங்க வேட்டை’யைத் தயாரித்தது லிங்குசாமி தான். சீனு ராமசாமி இயக்கத்தில், ‘இடம் பொருள் ஏவல்’ பல தடைகளைக் கடந்து, விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

நடுவே தோல்விகள், கடன் சிக்கல்கள், பிரச்சினைகள் என போட்டு துரத்தித் துரத்தி லிங்குசாமி கையைப்பிடித்துக் கொண்டு கூடவே வந்துகொண்டுதான் இருந்தன. ஆனால் இதிலெல்லாம் துவண்டுவிடாமல், கலங்கிப்போகாமல், ‘அடுத்தது அடுத்தது அடுத்தது...’ என்று பயணிப்பதிலும் அடுத்த படைப்பைக் கொண்டு வருவதிலும் ஆனந்தமாக, இன்னும் வேகமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் லிங்குசாமி. நடுவில், அவர் எழுதிய கவிதைகளுக்கும் கவிதை நூல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஹைக்கூ கவிதைகளில் தனித்துவத்துடன் எழுதிக்கொண்டிருக்கிறார்.

1967 நவம்பர் 14-ம் தேதி பிறந்தார் லிங்குசாமி. தொடர்ந்து படைப்புகளைத் தந்து வெற்றிபெறவும், ‘திருப்பதி பிரதர்ஸ்’ பேனரில் நல்ல நல்ல படங்களாகக் கொடுத்து விருதுகள் பெறவும் அவரின் இந்தப் பிறந்தநாளில் இனிதே வாழ்த்துவோம்!

பிறந்தநாள் வாழ்த்துகள் லிங்குசாமி சார்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in