அரசுக்கு எதிராகக் கோஷம்: பெண் இயக்குநருக்குத் தடுப்புக் காவல்

அரசுக்கு எதிராகக் கோஷம்: பெண் இயக்குநருக்குத் தடுப்புக் காவல்

திரைப்பட விழாவில், தனது படம் திரையிடப்படாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரசுக்கு எதிராகக் கோஷமிட்ட பெண் இயக்குநர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

கேரள சர்வதேசப் பெண்கள் திரைப்பட விழா கோழிக்கோடில் நேற்று (ஜூலை 16)தொடங்கியது. கேரள அரசின் கலாச்சித்திர அகாடமி நடத்தும் இந்தப் பட விழாவில் திரையிட, குஞ்சில்லா மாசிலாமணி என்பவர், தான் இயக்கிய ’அசங்காதிதார்’(Asanghatithar) என்ற படத்தை அனுப்பி இருந்தார். இது ஓடிடி தளத்தில் வெளியான ’ஃபிரீடம் ஃபைட்’ என்ற அந்தாலஜியில் இடம்பெற்ற ஒரு குறும்படம். ஓடிடியில் வெளியான படத்தைத் திரையிடுவதில்லை எனக்கூறி விழா குழுவினர் அதைத் திரையிட மறுத்துவிட்டனர்.

இதற்குப் பிற பெண் இயக்குநர்கள் உட்பட பலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அந்தப் படத்தைக் குறும்பட பிரிவிலாவது திரையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதையும் ஏற்கவில்லை. குஞ்சில்லாவுக்கு ஆதரவாக இயக்குநர் விது வின்சென்ட், தனது ’வைரல் செபி’ படத்தைத் திரும்பப் பெற்றார்.

இந்நிலையில், இந்த விழா தொடங்கியபோது மேடைக்குச் சென்ற இயக்குநர் குஞ்சில்லா மாசிலாமணி, அரசுக்கு எதிராகவும் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராகவும் கோஷமிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

போலீசார் அவரை சமாதானம் செய்ய முயன்றனர். அவர் தொடர்ந்து கோஷமிட்டு கொண்டிருந்ததால், அவரை வெளியே அழைத்துச் சென்ற போலீசார், தடுப்புக் காவலில் வைத்தனர். இதுபற்றி குஞ்சில்லா, என்னை கைது செய்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.

பெண் இயக்குநர் ஒருவர், விழா மேடையில் போராட்டத்தில் ஈடுபட்டதும் பின்னர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதும் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in