இன்னொரு டீ சாப்பிடலாமா?: மீண்டும் பட்டய கிளப்பும் ‘பேட்ட‘!

இன்னொரு டீ சாப்பிடலாமா?: மீண்டும் பட்டய கிளப்பும் ‘பேட்ட‘!
‘பேட்ட’ ரஜினி போஸ்டர்

ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படம் வெளியானதன் 3-ம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, பேட்ட இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், திரைப்படத்தின் நீக்கப்பட்ட வீடியோ ஒன்றை ரசிகர்களுக்குப் பரிசாக வழங்கியுள்ளார்.

இதையொட்டி, இன்று மதியம் தனது ட்விட்டரில் பேட்ட திரைப்படத்துக்காக பயன்படுத்தப்படாத போஸ்டர் ஒன்றை முன்னோட்டமாக கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டார். ’லவ்யூ தலைவா..’ என அதில் மகிழ்ச்சியையும் தெரிவித்திருந்தார். மேலும் ’இன்றைய தினத்துக்கு இந்த போஸ்டர் போதாது, பேட்ட திரைப்படத்தின் நீக்கப்பட்ட வீடியோவை மாலை வெளியிடுகிறோம்’ என்று அறிவித்திருந்தார்.

செம்மை நிறப் பின்னணியில் ரஜினி ரசிகர்களை ’செம!’ சொல்ல வைத்த போஸ்டர் முதலில் பகிரப்பட்டது. இதற்கு முன்பாக, இதே போன்று பேட்ட திரைப்படத்தின் பயன்படுத்தப்படாத போஸ்டர் ஒன்றை, ரஜினி பால்கே விருது பெற்றதை அடுத்து வெளியிட்டிருந்தார். தற்போது பேட்ட வெளியீட்டின் 3-ம் ஆண்டை முன்னிட்டு, ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் புதிய போஸ்டரை வெளியிட்டார்.

தொடர்ந்து இன்று மாலையில், ’இன்னொரு டீ சாப்பிடலாமா?’ என்ற தலைப்பிலான இரண்டே முக்கால் நிமிட வீடியோவை, பேட்ட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் யூடியூபில் வெளியிட்டது. அதைத் தனது தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கார்த்திக் சுப்பராஜ் மகிழ்ச்சி தெரிவித்தார். அந்த வீடியோவில் வழக்கமான ரஜினி முத்திரை வசனங்கள் மற்றும் முத்தாய்ப்பான காட்சிகளுடன், விஜய் சேதுபதியுடன் திரையைப் பகிர்ந்து கொள்ளும் காட்சிகள் வெளியாகி இருந்தன.

பேட்ட திரைப்படத்தின் வெளியாகாத போஸ்டர் மற்றும் நீக்கப்பட்ட வீடியோ ஆகியவை, இணையவெளியில் வைரலாகி வருகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in