கே.விஸ்வநாத்
கே.விஸ்வநாத்காவியக் கலைஞன்

கே.விஸ்வநாத் : ’சங்கராபரணம்’, ‘சலங்கை ஒலி’ படைத்த காவியக் கலைஞன்!

- ‘கலாதபஸ்வி’ கே.விஸ்வநாத் நினைவாஞ்சலி

விருதுகளுக்கும் பதக்கங்களும் உண்மையான திறமையாளர்களின் கரங்களில், வந்துசேரும்போது, அவை மேலும் கெளரவம் அடைகிறது என்பார்கள். ஐந்து முறை தேசிய திரைப்பட விருதுகள், ஆந்திர மாநிலத்தின் உயரிய மரியாதையான நந்தி விருதுகள் ஏழு முறை, இந்தியாவின் மிக முக்கியமான விருது என்று எல்லோராலும் போற்றப்படுகிற ஃபிலிம்பேர் விருதுகள் பத்து முறை என்றெல்லாம் இயக்குநர் கே.விஸ்வநாத்தின் கரங்களுக்கு வந்து சேர்ந்தபோது, தென்னிந்தியாவின் அத்தனை மொழி திரைக்கலைஞர்களும் கொண்டாடினார்கள். பாராட்டினார்கள். அந்தக் கலைஞனுக்குக் கிடைத்த கெளரவம், தங்களுக்குக் கிடைத்ததாகவே பூரித்துப் போனார்கள்.

1930-ம் ஆண்டு, பிப்ரவரி 19-ம் தேதி பிறந்தார் காசிநாதுனி விஸ்வநாத். ஆந்திரத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள கிராமம்தான் பூர்விகம். காசிநாதுனி சுப்ரமண்யம் என்பது அப்பாவின் பெயர். காசிநாதுனி சரஸ்வதம்மா என்பது அம்மாவின் பெயர். பள்ளிப் படிப்பில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டார். அதேபோல், குண்டூர் இந்துக்கல்லூரியில் மேற்படிப்பைத் தொடர்ந்தார்.

ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் கிறிஸ்தவக் கல்லூரியில், பி.எஸ்சி., முடித்தார். படிப்பில் ஆர்வமும் ஈடுபாடும் இருந்தாலும் திரைத்துறையின் மீதான காதல் உள்ளே வளர்ந்துகொண்டேதான் இருந்தது. சென்னை வாஹினி ஸ்டூடியோவில், ஒலிப்பதிவாளராக, ஆடியோகிராஃபராக வேலை பார்த்ததுதான், அவரது சினிமா வாழ்வின் தொடக்கம்.

ஒலியின் நுட்பங்களைக் கற்றுக்கொண்டே இருந்தவருக்கு, காட்சிகளின் மெளனமும் காட்சிகளின் நகர்வுகளும் வசனங்களும் கதை மாந்தர்களின் முகபாவனைகளும் இன்னும் இன்னுமாக ஈர்த்தன. இயக்குநர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராகச் சேர வேண்டும் என்ற எண்ணம் விஸ்வநாத்துக்குள் உதித்தது. ஆனால், அது நடக்கவில்லை.

ஆனால், தெலுங்கில் கே.விஸ்வநாத் இயக்கிய திரைப்படத்தின் கரு பிடித்துப் போன பாலசந்தர், தமிழில் உரிமம் வாங்கி, தமிழுக்குத் தகுந்தது போலவும் தன் ஸ்டைலுக்கு ஏற்றது போலவும் படமெடுத்து, மிகப்பெரிய ஹிட்டாக்கினார். அதுதான் ‘மூன்று முடிச்சு’.

அன்னபூர்ணா பிக்சர்ஸ் அடுர்த்தி சுப்பாராவ், இயக்குநர் கே.ராம்நாத் முதலானோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார் விஸ்வநாத். தெலுங்கிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்ட ‘பாதாள பைரவி’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியதுதான், சினிமாவின் நுணுக்கங்கள் மொத்தமும் கற்றுக்கொள்ள அவருக்குப் பேருதவியாக இருந்தது.

கிட்டத்தட்ட இங்கே பாலசந்தரும் அங்கே தெலுங்கில் கே.விஸ்வநாத்தும் ஒரே காலகட்டத்தில்தான் இயக்குநராக நுழைந்தார்கள், ஜெயித்தார்கள் என்றாலும் கே.பாலசந்தரின் படங்கள் மீது அப்படியொரு காதல் கே.விஸ்வநாத்துக்கு! 1965-ம் ஆண்டு ‘ஆத்ம கெளரவம்’ எனும் படத்தை முதன்முதலாக இயக்கினார். முதல் படமே ஆந்திரத்தின் நந்தி விருது வாங்கி, சிறந்த படம் என பாராட்டப்பட்டது.

வணிக சமரசங்களுக்குள் கே.விஸ்வநாத்தின் சிந்தனைகள் ஒருபோதும் நுழைவதே இல்லை. காதல் கதை எடுப்பார். அதில் ஆழ்ந்த பேரன்பு இருக்கும். சங்கீதத்தை ஜீவனாகக் கொண்டு படமெடுப்பார். அதில் கர்நாடக சங்கீதத்துக்கே கிரீடம் சூட்டுவது போல் இயக்கி இருப்பார். கலை என்பதும் சினிமா என்பதும் காட்சி வழி ஊடகங்கள் என்பதில் கவனமாகவே இருந்தார் விஸ்வநாத். அதேபோல், சினிமாவை நல்லது சொல்லப் பயன்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதனால்தான், வயது முதிர்ந்த சோமயாஜுலுவை நாயகனாக்கி, ‘சங்கராபரணம்’ கொடுக்கமுடிந்தது அவரால்!

தெலுங்கில் எடுக்கப்பட்ட படம், தமிழகத்தில் தெலுங்கிலேயே வந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதென்றால், கே.விஸ்வநாத்தின் ‘சங்கராபரணம்’, கே.பாலசந்தரின் ‘மரோசரித்ரா’ என்றுதான் இருக்கும். கே.வி.மகாதேவனின் இசையில், அவர் படைத்த காவியமான ‘சங்கராபரணம்’ படத்துக்காக, எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு தேசிய விருது கிடைத்தது. இன்னொரு விஷயம்... எஸ்பி.பி-யும் கே.விஸ்வநாத்தும் நெருங்கிய உறவினர்களும் கூட!

கே.விஸ்வநாத்தின் படைப்புகள், நம்மூர் கே.பாலசந்தர், மகேந்திரன், பாலு மகேந்திரா முதலானோரின் படைப்புகளுக்குச் சமமானவை. அதனால்தான் இவரின் பல படங்கள், ரஷ்ய மொழியில் மாற்றம் செய்யப்பட்டு, மாஸ்கோவில் உள்ள தியேட்டர்களில் திரையிடப்பட்டு, எல்லோராலும் பாராட்டப்பட்டன.

’செல்லெலி கபுரம்’, ‘சாரதா’, ‘ஓ சீத கதா’, ‘ஜீவன ஜோதி’, ‘சிரிசிரி முவ்வா’ என இவரின் படைப்புகள் ஒவ்வொன்றும் ஏதோவொரு வகையில் மக்களின் ரசனையை உயர்த்தும் வகையிலான காவியங்களாகவே கொண்டாடப்பட்டன.

‘சங்கராபரணம்’ ஏற்படுத்திய தாக்கம், வெறும் சினிமா வெற்றியாக மட்டுமே பார்க்கப்படவில்லை. பாரம்பரிய இசை, கர்நாடக இசை, மேல்நாட்டு இசையின் மோகத்தால் உண்டான விளைவுகள் என கண்ணீருடனும் கவலையுடனும் மிக கவனமாகவும் ஆழமாகவும் சுட்டிக்காட்டப்பட்டன.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாலும் வாலிப வயதில் கமலை ‘அரங்கேற்றம்’ செய்தவர் கே.பாலசந்தர். இயக்குநர் கே.விஸ்வநாத்துக்கு பாலசந்தரைப் பிடித்தது போலவே கமலையும் ரொம்பவே பிடித்துப் போனது. சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல் நடித்த ‘இரு நிலவுகள்’ அங்கே தெலுங்கில் சக்கைப்போடு போட்டது. அதேபோல், தெலுங்கில் கே.பாலசந்தரின் இயக்கத்தில், ‘மரோசரித்ரா’ கமலுக்கு அங்கே தனி மார்க்கெட்டையே உண்டுபண்ணிக் கொடுத்திருந்தது. அப்படி ஆந்திரப் பக்கம் வந்த கமலுக்கும், கே.விஸ்வநாத் மீது அளப்பரிய அன்பும் மரியாதையும் ஏற்பட்டது.

’சாகர சங்கமம்’ என்ற படத்தை கமலை வைத்து இயக்கினார் கே.விஸ்வநாத். ஏற்கெனவே, தமிழகத்தில் ‘சங்கராபரணம்’ மூலம் அறியப்பட்டவரை, ‘சலங்கை ஒலி’ என ‘டப்’ செய்து இங்கே வெளியிட இன்னும் அவரைக் கொண்டாடியது தமிழகம். கமல் எனும் மகத்தான கலைஞனின் உன்னத நடிப்பில், உயிர்ப்பான படைப்பைக் கொடுத்திருந்தார் கே.விஸ்வநாத்.

இந்தப் படத்தை எடுத்துமுடித்துவிட்டு, போட்டுப்பார்த்தார் விஸ்வநாத். படம் பார்த்துவிட்டு வந்த அந்த நள்ளிரவில், அவசரம் அவசரமாக கமலுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். ‘அன்புள்ள கமல். உன் மேல் எனக்குக் கோபம். உண்மையிலேயே உன் மேல் எனக்குக் கோபம். இத்தனை ஆண்டுகாலம் திரையுலகில் இருந்துகொண்டு, இன்னுமா உயர்ந்த விருதுகள் உன்னை வந்தடையவில்லை? - இப்படிக்கு உன் ரசிகன் கே.விஸ்வநாத்’ என்று அவர் எழுதி அனுப்பிய கடிதத்தை, கமல் இன்றைக்கும் பொக்கிஷமாக வைத்திருக்கிறார்.

பரதக் கலையை, கமலின் பரதத் திறமையை, கலைஞர்கள் இறக்கலாம், கலை ஒருபோதும் இறக்காது என்கிற உண்மையை, ரத்தமும் சதையுமாக, ஜீவனுடன் கொடுத்து மிகப்பெரிய சாதனையையே நிகழ்த்தினார் கே.விஸ்வநாத்.

அதேபோலத்தான்... ‘ஸ்வாதி முத்யம்’ என்ற படத்தை கமலை வைத்து இயக்கினார். ’சிப்பிக்குள் முத்து’ என்ற பெயரில் தமிழில் வெளியானது. ஆட்டிஸம் மாதிரியான மூளை வளர்ச்சி குன்றிய இளைஞன், அன்பு மட்டுமே தெரிந்த இளைஞன், பரோபகாரமும் பக்தியும் மட்டுமே தெரிந்த ஒரு இளைஞன், அவனின் அன்பால் நலம் பெறும் விதவைப் பெண்ணையும் அவளின் மகனையும் கொண்டு, காதலில் காவியக் கவிதைப் படைத்திருந்தார் கே.விஸ்வநாத். ஆந்திரத்தின் உயரிய விருதுகளை இந்தப் படமும் பெற்றது. கமலுக்கும் கிடைத்தது. கே.விஸ்வநாத்தை இன்னும் கெளரவப்படுத்தியது ஆந்திர அரசாங்கம்.

சமூகப் பிரச்சினைகளையும் குடும்ப உணர்வுகளின் சிக்கல்களையும் யதார்த்தம் மாறாத பேரன்பையும் கொண்டு படங்களை இயக்கினார் விஸ்வநாத். அகிம்சை, உழைப்பின் மேன்மை, பொறாமையும் கோபமும் ஒருவனுக்கு எப்படியெல்லாம் எதிரியாக மாறி அழிக்கிறது என்பன முதலான இவரின் படங்களைப் பார்த்துவிட்டு வந்தால், நான்குநாட்களுகு தூக்கம் வராது நமக்கு. நம்மை என்னவோ செய்து உலுக்கியெடுத்திருப்பார் கே.விஸ்வநாத். இந்திப் படங்களை இவர் இயக்கியதில், அங்கேயும் மிகப்பெரிய தாக்கத்தை உண்டுபண்ணினார். நூறு சிறந்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில், ‘சங்கராபரணம்’, ‘சாகர சங்கமம்’ உள்ளிட்ட பல படங்கள் இடம்பெற்றுள்ளன.

கமல் தயாரித்து நடிக்க, பி.சி.ஸ்ரீராம் இயக்கிய ‘குருதிப்புனல்’ படத்தில் மிகச்சிறந்த கதாபாத்திரத்தில், சீனிவாசன் எனும் கேரக்டரில் நடித்தார் விஸ்வநாத். கமலின் தந்தையார் பெயர் சீனிவாசன் என்பது நமக்குத் தெரியும். கே.விஸ்வநாத்தையும் கே.பாலசந்தரையும் அப்படியொரு தந்தை ஸ்தானத்தில் வைத்துத்தான் கமல் பார்த்து வருகிறார்.

பிறகு, பார்த்திபனுடன், விக்ரமுடன், அஜித்துடன் ‘முகவரி’ முதலான படங்கள் ‘யாரடி நீ மோகினி’யில் தனுஷுடன் என பல படங்களில் நடிகராகவும் தனித்து அடையாளம் காணப்பட்டார். டிவி சீரியல்களிலும் நடித்துப் புகழ் பெற்றார். நகைக்கடை விளம்பரமாகட்டும் வேஷ்டி விளம்பரமாகட்டும்... அதில் அப்படியே அழகுறப் பொருந்தினார் கே.விஸ்வநாத். இந்த யதார்த்தம்தான் கே.விஸ்வநாத் எனும் படைப்பாளியின் மிகப் பிரம்மாண்டமான வெற்றி! அதனால் தான் அவரை ’கலாதபஸ்வி’ என்று விருது கொடுத்து கொண்டாடியது ஆந்திர அரசு!

பிப்ரவரி 19ம் தேதி வந்தால் விஸ்வநாத்துக்கு 93 வயது. ஆனால், இன்று பிப்ரவரி 3-ம் தேதி அவர் நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார். ஆனால், இன்னும் நூற்றாண்டுகளுக்கு யதார்த்த படைப்பாளி, உணர்வுகளைக் கடத்தும் படைப்பாளி என கே.விஸ்வநாத் பேசப்பட்டுக் கொண்டே இருப்பார். கொண்டாடப்பட்டுக் கொண்டே இருப்பார்.

‘சலங்கை ஒலி’ படத்தின் முடிவில் ‘கலைஞர்களுக்குத்தான் மரணம். கலைக்கு இல்லை’ என்று டைட்டில் போட்டு படத்தை முடித்திருப்பார் கே.விஸ்வநாத். அற்புதமான இயக்குநரைப் பொறுத்தவரை, கலைக்கும் மரணமில்லை. மகா கலைஞனான கே.விஸ்வநாத்துக்கும் மரணமில்லை!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in