`வேட்டையாடு விளையாடு’ அடுத்த பாகம்- கெளதம் வாசுதேவ் மேனன் சொன்ன புது தகவல்!

`வேட்டையாடு விளையாடு’ அடுத்த பாகம்- கெளதம் வாசுதேவ் மேனன் சொன்ன புது தகவல்!

‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் அடுத்த பாகம் குறித்து இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் பேசியுள்ளார்.

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், ஜோதிகா, கமாலினி முகர்ஜி என பலரும் நடித்த படம் ‘வேட்டையாடு விளையாடு’. கடந்த 2006-ல் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ராகவன் என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருப்பார். படம் வெளியான போதே இதன் இரண்டாம் பாகம் குறித்தான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது.

கடந்த ஆண்டு 2020-ல் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனும் இரண்டாம் பாகம் எடுக்க ஆர்வமாக உள்ளதையும் தெரிவித்து இருந்தார். நடிகை அனுஷ்கா ஷெட்டி அல்லது கீர்த்தி சுரேஷ் இருவரிடமும் பேச்சு வார்த்தை நடப்பதாகவும் அப்போது தகவல் வெளியானது. ஆனால், அதற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனும் அடுத்தடுத்து வேறு படங்களில் பிஸியாகி விட இப்போது ‘வேட்டையாடு விளையாடு’ இரண்டாம் பாகம் குறித்து கெளதம் வாசுதேவ் மேனன் தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கென 120 பக்கங்கள் உள்ளடக்கிய திரைக்கதை வேலை முடிந்துவிட்டது எனவும் இந்த படத்தினை தொடங்க சரியான நேரத்தை எதிர்ப்பார்த்து இருப்பதாகவும் அதில் கூறியுள்ளார். இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கடுத்து இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கமல்ஹாசன் சொல்லி இருந்தார். இது மட்டுமல்லாது, முன்பு ஷங்கருடன் இணைந்த ‘இந்தியன்2’ பட வேலைகள் இந்த மாதம் 22-ம் தேதியில் இருந்து தொடங்க இருக்கிறது.

இதற்கிடையில் ‘விக்ரம்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் படம் முடித்ததும் ‘விக்ரம்3’ எடுக்க உள்ளார். இதற்கிடையில் ‘வேட்டையாடு விளையாடு2’ கமல் நடிப்பாரா அல்லது வேறு நடிகர்கள் இணைய இருக்கிறார்களா என்பது பற்றிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in