இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் கேள்வி: ‘சாதி வெறி பிடித்தவனா நான்?’

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் கேள்வி: ‘சாதி வெறி பிடித்தவனா நான்?’

‘கெளதம் வாசுதேவ் மேனன்’ என பெயர் மாற்றியதற்கு பின்னால் சாதி வெறி இருக்கிறது என தன்னைப் பற்றி பரவிய செய்திகளுக்கு காமதேனு மின்னிதழுக்காக பிரத்யேகமாக அளித்த நேர்காணலில் இயக்குநர் கெளதம் மேனன் விளக்கம் கொடுத்துள்ளார்.

’மின்னலே’, ‘காக்க காக்க’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘வெந்து தணிந்தது காடு’ எனப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன். இவர் தன்னுடைய ஆரம்பக்கால படங்களின் கிரெடிட் கார்டில் ‘இயக்குநர், கெளதம்’ என்பதை மட்டுமே பயன்படுத்தி வந்தார். ஆனால், சில படங்களுக்குப் பிறகு ’கெளதம் வாசுதேவ் மேனன்’ எனப் படங்களின் கிரெட்டில் உபயோகப்படுத்த ஆரம்பித்தார்.

இதற்கு பின்னால் இயக்குநர் கெளதம் மேனனிற்கு சாதி வெறி இருக்கிறது என பல செய்திகள் வெளியானது. இதற்கான விளக்கத்தை ‘ காமதேனு’ மின்னிதழுக்கு பிரத்யேகமாக கொடுத்த நேர்காணலில் இயக்குநர் கெளதம் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அவர் பேசியிருப்பதாவது, “நான் பிறக்கும் போதே எனக்கு வைத்த பெயர் கெளதம் வாசுதேவ் மேனன். என்னுடைய பர்த் சர்டிஃபிகேட், ஆதார் கார்டு, பள்ளி, கல்லூரி காலங்களின் பதிவுகளில் என எல்லாமே ‘கெளதம் வாசுதேவ் மேனன்’ தான். ‘மின்னலே’ படம் செய்யும் போது, கிரெடிட் எல்லாவற்றிலும் ‘கெளதம் வாசுதேவ் மேனன்’ என்றுதான் தயார் செய்து வைத்திருந்தோம்.

அப்போது என்னுடைய தயாரிப்பாளர் முரளி என்னிடம் வந்து, ’எனக்கு பிடித்த இயக்குநர் ஷங்கர். அதுபோல நீயும் உன்னுடைய பெயரை ‘கெளதம்’ என சுருக்கமாக வைத்துக் கொள். ‘கெளதம் வாசுதேவ் மேனன்’ என வைத்தால் தொலைந்து போய்விடுவாய்’ என என்னிடம் நட்பு ரீதியாக சொன்னார். அவர் மேல் எனக்கு நிறைய மரியாதை இருக்கிறது. அவர் என்னிடம் ரெக்வஸ்ட்டாக கேட்ட போது பெரிதாக என்னால் மறுக்க முடியவில்லை.

பிறகு, ‘காக்க காக்க’ படம் செய்யும் போது தயாரிப்பாளர் தாணு, ‘அந்தப் படத்தில் கெளதம் என வைத்து விட்டு இதில் கெளதம் வாசுதேவ் மேனன் என வைத்தால் வேறு இயக்குநர் என நினைப்பார்கள்’ என சொன்னார். அதனால், ‘வேட்டையாடு விளையாடு’, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ வரை அந்தப் பெயரே தொடர்ந்தது.

பின்பு ‘வாரணம் ஆயிரம்’ படம் செய்யும் போது, அது முழுக்க முழுக்க என்னுடைய கட்டுப்பாட்டில் இருந்தது. தயாரிப்பாளரைக் கொண்டு வருவது, வெளியீட்டு தேதி, டிஸ்டிரிபியூட்டரிடம் கொண்டு போய் சேர்ப்பது, அந்தப் படத்தின் தன்மை, என் அப்பாவைப் பற்றிய விஷயங்கள் என தனிப்பட்ட முறையில் அந்தப் படம் எனக்கு ஸ்பெஷல் என்பதால் அதில் இருந்து ‘கெளதம் வாசுதேவ் மேனன்’ என வைக்க ஆரம்பித்தேனே தவிர, மற்றவர்கள் சொல்வது போல சாதி வெறி, நான் மேனன் என்னை சொல்லிக் கொள்ள வேண்டும் என கேவலமாக சொல்கிறார்கள் இல்லையா, அதுபோல எண்ணம் கிடையாது.

பார்த்திபன் சார் கூட என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ‘இப்படித் தான் ட்விஸ்ட் பண்ணி சொல்வார்கள். தயாராக இருங்கள்’ என சொன்னார். அதற்கு நான் அவரிடம் சொன்னேன், ‘சார், அதுகுறித்து எனக்கு கவலையில்லை. அப்பா மலையாளி, அம்மா தமிழ், இவர்கள் லவ் மேரேஜ்தான். என்னுடைய மனைவி கிறிஸ்டியன்.

இப்படி இருக்கும்போது எனக்கு இதுபோன்ற சாதிய எண்ணம் எல்லாம் கிடையாது. அப்படி யாராவது நினைத்தால் அது அவர்களுடைய சின்ன புத்தி. அதுக்குறித்து எனக்கு கவலை கிடையாது. எனக்கு என் பெயரில் மகிழ்ச்சி” என நேர்காணலில் விளக்கம் அளித்துள்ளார் கெளதம் மேனன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in