கே.பாக்யராஜ்: தமிழ்த் திரைப் பொற்காலத்தின் தவிர்க்க முடியாத படைப்பாளி!

ஜனவரி 7: கே.பாக்யராஜ் பிறந்தநாள்
‘இன்று போய் நாளை வா' திரைப்படத்திலிருந்து...
‘இன்று போய் நாளை வா' திரைப்படத்திலிருந்து...

தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த இயக்குநர், திரைக்கதை மன்னன், ஒரு காலத்தில் வெற்றிகரமான நட்சத்திர நாயகன், இன்றைக்கு மூத்த படைப்பாளி, மதிப்புமிக்க குணச்சித்திர நடிகர் என பல பெருமைகளுக்குச் சொந்தக்காரரான கே.பாக்யராஜ் இன்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

வெற்றிமேல் வெற்றி

தமிழ் சினிமாவின் பொற்காலம் 1980-கள் என்று சொல்லப்படுவதற்கு கே.பாலசந்தர், மகேந்திரன், பாரதிராஜா, பாலு மகேந்திரா, மணி ரத்னம் ஆகிய இயக்குநர்களுக்கு இணையாக பாகயராஜும் பங்களித்திருக்கிறார். 1980-களில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிப் படங்களை இயக்கியவர் எனும் பெருமைக்குரியவர் அவர். 1981-ல் மட்டும் ‘மெளன கீதங்கள்’, ‘இன்றுபோய் நாளை வா’, ‘விடியும்வரை காத்திரு’, ‘அந்த ஏழு நாட்கள்’ என நான்கு படங்கள் சூப்பர் ஹிட் ஆகின என்பதோடு, என்றென்றைக்கும் ரசிக்கப்படும் கல்ட் அந்தஸ்தையும் பெற்றுவிட்டன. சென்னையில் இருந்த பிரம்மாண்டமான திரையரங்க வளாகமான சபையர் தியேட்டரில் இருந்த 3 அரங்குகளில், இந்தப் படங்கள் ஒரே நேரத்தில் ஓடின என்று சொல்லப்படுவதுண்டு.

கே.பாக்யராஜ்
கே.பாக்யராஜ்

‘தூறல் நின்னுபோச்சு’ (1982), ‘முந்தானை முடிச்சு’ (1983), ’தாவணிக் கனவுகள்’ (1984), ‘சின்ன வீடு’ (1985), ’இது நம்ம ஆளு’ (1988) என 80-களில் பாக்யராஜின் திரைவாழ்வானது ஹிட்கள், சூப்பர் ஹிட்கள், பிளாக்பஸ்டர்களால் நிரம்பியது. இடையில் ‘ஆக்ரீ ராஸ்தா’ (1986) எனும் இந்திப் படத்தில் அமிதாப் பச்சனை இயக்கி பாலிவுட்டிலும் தன் கொடியை உயரப் பறக்கவிட்டார் பாக்யராஜ்.

தமிழில், பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘ஒரு கைதியின் டைரி’ படத்தின் இந்தி மறுஆக்கம்தான் ‘ஆக்ரீ ராஸ்தா’. தமிழ்ப் படத்துக்கும் பாக்யராஜ்தான் கதை எழுதினார். இந்திப் பதிப்புக்கு வடமாநில ரசிகர்களின் ரசனைக்கும் அமிதாப்பின் திரை ஆளுமைக்கும் ஏற்றவகையிலான மாற்றங்களைச் செய்திருந்தார்.

நடிகராகவும் உயரம் தொட்டவர்

அதேபோல், அவர் காலத்தின் புகழ்பெற்ற இயக்குநர்களில் மற்றவர்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு பாக்யராஜுக்கு உண்டு. ஒரேநேரத்தில் இயக்குநராக மட்டுமல்லாமல் நாயக நடிகராகவும் மிகப் பெரிய உயரம் தொட்டவர் அவர். தமிழ் சினிமாவில் பாக்யராஜுக்கு முன்பும் பின்பும் இயக்குநர்கள் அரிதாரம் பூசியிருக்கிறார்கள். நட்சத்திர அந்தஸ்துபெற்ற நடிகர்கள் ஓரிரு படங்களுக்காவது ‘ஸ்டார்ட் கேமரா, ஆக்‌ஷன், கட்’ சொல்லி இருக்கிறார்கள். ஆனால், ஒரேநேரத்தில் இயக்குநராகவும் நாயக நடிகராகவும் தொடர்ச்சியாக வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்களில் முன்னோடி என்று பாக்யராஜைத்தான் சொல்ல முடியும். அவருடைய சீடர்களான பாண்டியராஜன், ஆர்.பார்த்திபன் இருவரும் அந்தப் பாதையில் அவரைப் பின்தொடர்ந்தார்கள் என்றாலும் குருவைத் தாண்டிவிடவில்லை. எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘நான் சிகப்பு மனிதன்’ திரைப்படத்தில், பாக்யராஜ் ஒரு முக்கியமான துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்தப் படம் வெளியான திரையரங்குகளில் ரஜினிக்கு எவ்வளவு பெரிய கட் அவுட்கள் வைக்கப்பட்டனவோ அதே அளவு பெரிய கட்-அவுட்கள் பாக்யராஜுக்கும் வைக்கப்பட்டன. இந்தத் தகவலிலிருந்தே அவர் 80-களில் உச்ச நட்சத்திரங்களாகத் திகழ்ந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்குப் போட்டியாளராகத் திகழ்ந்தார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

அன்றைய முதல்வர் எம்ஜிஆரிடம் விருது பெறும் கே.பாக்யராஜ்
அன்றைய முதல்வர் எம்ஜிஆரிடம் விருது பெறும் கே.பாக்யராஜ்

அசலான கதை நாயகன்

ஒரு இயக்குநராகவும் நடிகராகவும் பல படங்களில் வெற்றிகரமாக வெளிப்பட முடிந்தது என்பதே, பாக்யராஜ் எப்படிப்பட்ட திரைப்பட ஆளுமை என்பதை வரையறுக்கப் போதுமானது. தான் ஒரு இயக்குநர் என்பதால் எல்லோரையும்விட தானே உயர்ந்தவர், தானே அதிபுத்திசாலி என்பதை அவர் தலைக்கு ஏற்றிக்கொண்டதில்லை. அதேபோல் நாயகன் என்பதால், கதையில் தனக்கு மட்டும்தான் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்றும் அவர் என்றைக்கும் நினைத்ததில்லை. அவர் அடிப்படையில் ஒரு கதைசொல்லியாகவே இருந்திருக்கிறார். கதை மட்டுமே அவருக்குப் பிரதானமானதாக இருந்துள்ளது. இன்று வேறு துறைகளில் இருந்துவிட்டு நாயகனாக உருமாற முயலும் பலர் ‘கதையின் நாயகன்’ என்னும் அடைமொழியைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ”இவர் எல்லாம் நாயகனாக நடித்தால் படம் ஓடுமா” என்னும் கேலிப் பேச்சைத் தவிர்க்கும் பொருட்டு, இந்தப் படத்தில் கதைக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதைப் பணிவுடன் உணர்த்தும் பாவனையில் ‘கதையின் நாயகன்’ என்னும் அடைமொழியைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், பாக்யராஜ் மிகவும் விரும்பப்பட்ட முன்னணிக் கதாநாயகனாக இருந்த காலத்திலேயே அவருடைய திரைப்படங்களில் கதைதான் நாயகன். அதாவது, மற்ற எல்லாவற்றையும்விட கதைக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும். அவருடைய தோல்விப் படங்களிலும் உண்மையிலேயே கதைக்கு முக்கியத்துவம் இருந்ததால், ’கதையின் நாயகன்’ என்பது போன்ற பணிவு பாவனைகள் அவருக்கு எப்போதும் தேவைப்படவில்லை.

பெண்களின் மனங்கவர்ந்த கலைஞர்

இப்படிப்பட்ட அணுகுமுறை இருந்ததால்தான் ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தில், தான் அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே மலம் கழித்துவிட்ட கைக்குழந்தையைச் சுத்தம் செய்ய முடிந்தது. ‘மெளன கீதங்க’ளில் மனைவியிடம் அடியும் திட்டும் வாங்க முடிந்தது. ‘விடியும்வரை காத்திரு’ படத்தில் சொத்துக்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து ஏமாற்ற முடிந்தது. ‘அந்த ஏழு நாட்க’ளில் காதலியாலும், துணைக்கு இருக்கும் சிறுவனாலும் எப்போதும் கேலி செய்யப்படும் அப்பாவியாக இருந்துவிடவும் இறுதியில் காதலியை அவருடைய கணவருடன் சேர்த்துவைத்துவிட்டுச் செல்லவும் முடிந்தது. ‘தாவணிக் கனவுக’ளில் ஐந்து தங்கைகளுக்கு அண்ணனாக அவர்களைத் திரையரங்குக்கு அழைத்துச் சென்று படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது, ஒரு பாலியல் காட்சியில் தன்னை மறந்து லயித்துவிட முடிந்தது. ‘இது நம்ம ஆளு’ படத்தில் திறமையிலும் சாமர்த்தியத்திலும் நாயகியைவிட சற்று பின்தங்கியவராகக் காண்பித்துக்கொள்ள முடிந்தது. இதுபோன்ற சித்தரிப்புகளால்தான் பெண்கள் அனைவருக்கும் பாக்யராஜை மிகவும் பிடித்துப்போனது. இன்றைக்கும் வீட்டு வேலைகளை முடித்துவிட்டுப் பெண்கள் சற்று ஓய்வு எடுத்துக்கொள்ளும் நேரத்திலேயே, பாக்யராஜ் திரைப்படங்கள் அதிகமாக ஒளிபரப்பப்படுகின்றன.

பாக்யராஜ், ராதிகா
பாக்யராஜ், ராதிகா

தவிர்க்க முடியாத திரைக்கதைப் பாடங்கள்

குடும்பப் பெண்களுக்கு மட்டும்தான் பாக்யராஜைப் பிடிக்குமா? இல்லவே இல்லை, அறிவிஜீவி திரைப்படக் கோட்பாட்டாளர்களுக்கும் கறாரான விமர்சகர்களுக்கும் மேம்பட்ட திரை ரசனை கொண்ட அனைவருக்கும் பாக்யராஜ் படங்களில் ஆய்வுக்குட்படுத்தி புரிந்துகொள்ள வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன. உண்மையில் தமிழ் வெகுஜன சினிமா, மக்கள் மீது எத்தகைய தாக்கம் செலுத்துகிறது என்பதை உள்வாங்கிக்கொள்ள பாக்யராஜ் படங்களைவிடச் சிறந்த களங்கள் இருந்துவிட முடியாது. கமர்ஷியல் படத்துக்கு லாஜிக் எதற்கு என்பது போன்ற சால்ஜாப்புகளை அவருடைய திரைப்படங்களில் அரிதாகவே பார்க்க முடியும். அவருடைய மோசமான தோல்விப் படங்களில்கூட புனைவுத் தர்க்கம் சரியாகவே அமைந்திருக்கும். திடீரென்று ஒரு கதாபாத்திரமோ ஒரு சூழ்நிலையோ அந்தரத்திலிருந்து குதிக்காது. திரைக்கதை ஆசிரியரின் வசதிக்கேற்ப திருப்பங்கள் நிகழாது (convenient turns). எந்த ஒரு விஷயத்துக்கும் முன்னரே ஒரு சிறிய அறிமுகம். பார்வையாளரின் மனநிலையை தயார்படுத்துதல், கதையின் திருப்பத்துக்கு அதனளவில் ஒரு நியாயம் என அனைத்தும் கச்சிதமாக அமைந்திருக்கும். இவற்றின் காரணமாகத்தான் பாக்யராஜ் ‘திரைக்கதை மன்னன்’ என்று வியந்து பாராட்டப்படுகிறார்.

‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தில் அறிமுகக் காட்சியிலேயே கதாநாயகன், மனைவியை இழந்து ஒரு கைக்குழந்தையை வைத்துக்கொண்டு தனியாகத் தவிக்கும் தந்தை என்பது, ரசிகர்களுக்குத் துல்லியமாக உணர்த்தப்பட்டுவிடும். இதனால், அவர் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று பார்வையாளர்களே எதிர்பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். அதுதான் படத்தின் இடைவேளை. இப்படி திரைக்கதையை பார்த்துப் பார்த்து, சரியாகச் சொல்வதென்றால் உதவி இயக்குநர்கள், கலைஞானம் உள்ளிட்ட சீனியர் கதாசிரியர்களுடன் விவாதித்து விவாதித்து அங்குலம் அங்குலமாக செதுக்குகிறவர் பாக்யராஜ். இதனால்தான், இன்றைக்கும் திரைப்பட இயக்குநராகும் கனவில் இருக்கும் அனைவருக்கும் பாக்யராஜின் திரைக்கதைகள் தவறவிடக் கூடாத பாடங்களாக இருக்கின்றன.

‘ராசுக்குட்டி’ திரைப்படத்தில் மனோரமா, ஐஸ்வர்யா ஆகியோருடன் பாக்யராஜ்
‘ராசுக்குட்டி’ திரைப்படத்தில் மனோரமா, ஐஸ்வர்யா ஆகியோருடன் பாக்யராஜ்

பாக்யராஜின் பிற்காலப் படங்கள் பெரிதாக வெற்றிபெறவில்லை. ஒரு இடைவேளைக்குப் பிறகு விஜயகாந்தை வைத்து அவர் இயக்கிய ‘சொக்கத்தங்கம்’ (2003) பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், தொலைக்காட்சியில் போடும்போது பார்த்தால் நல்ல படமாகத்தான் தெரிகிறது. இன்றய தலைமுறை ரசிகர்களைப் பொறுத்தவரை பாக்யராஜ் ஒரு தரமான குணச்சித்திர நடிகர். ஆனால், இது ஆட்டோ டிரைவர் மாணிக்கம் வடிவம்தான். 1980-களில் வெளியான திரைப்படங்களைப் இன்றைய 2கே கிட்ஸும் பார்க்க வேண்டும். அப்போதுதான் பாக்யராஜின் ’மாணிக் பாட்ஷா’ அவதாரத்தின் பிரம்மாண்டம் அவர்களுக்குப் புரியும்!

தமிழ் மக்களின் திரை ரசனைக்குச் செழுமை சேர்த்த கே.பாக்யராஜுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in