நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன்: மருத்துவமனையில் இருந்து மகிழ்ச்சியான செய்தி

நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன்: மருத்துவமனையில் இருந்து மகிழ்ச்சியான செய்தி

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குநர் பாரதிராஜா நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். தன்னை நேரில் காண மருத்துவமனைக்கு யாரும் வரவேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் திரைப்பட உலகின் நட்சத்திர இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜாவிற்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார் நீர்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் திடீரென பாரதிராஜா, மேல் சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். அவரைச் சந்தித்த கவிஞர் வைரமுத்து, பாரதிராஜா நலமுடன் இருப்பாதாக செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.

இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், " என் இனிய தமிழ் மக்களே, வணக்கம். நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன்.

மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வர வேண்டாம் என்று என் மேல் அன்பு கொண்ட அனைவரையும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன். மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் இணையதளம் மூலமும் அன்புடன் விசாரித்த மற்றும் நலம் பெற பிரார்த்தித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் சந்திப்போம்" என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிக்கையால் தமிழ் திரையுலகினரும், அவரது ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in