பாரதிராஜா டிஸ்சார்ஜ்: என்ன சொல்கிறது எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை?

பாரதிராஜா டிஸ்சார்ஜ்: என்ன சொல்கிறது எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை?

உடல்நலக் குறைவு காரணமாக சென்னை எஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இயக்குநர் பாரதிராஜா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்.

தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா உடல் நலக் குறைவு காரணமாக ஆகஸ்ட் 21-ம் தேதி சென்னை தியாகராய நகரில் உள்ள பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஆகஸ்ட் 26-ல் உயர் சிகிச்சைக்காக எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. பின்னர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த அவர், தான் நலமாக இருப்பதாக வெளியிட்ட அறிக்கையால் அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.

அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

அதில், ‘பழம்பெரும் இயக்குநர் பாரதிராஜா (81), ஆல்டெர்டு சென்சோரியம்* பாதிப்புகளுடன் ஆகஸ்ட் 26-ல் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எங்கள் ஐசியூ பிரிவில், பல்துறை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் அவரது உடல்நிலையைக் கண்காணித்தனர். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்’ என எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

*மூளையில் ஏற்படும் பாதிப்புகள் - குறிப்பாக, குழப்பநிலை, நினைவு இழப்பு, வழக்கத்துக்கு மாறாக அல்லது விநோதமாக நடந்துகொள்வது உள்ளிட்டவை ஆல்டெர்டு சென்சோரியம் (Altered sensorium) என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in