காட்சியின் கதாநாயகன்... இயக்குநர் பாலுமகேந்திரா நினைவுதினம் இன்று!

இயக்குநர் பாலுமகேந்திரா
இயக்குநர் பாலுமகேந்திரா

நடிகர்கள், நடிகைகளின் பிரபல்யத்தையும் தாண்டியும் தங்களது கதைக்கருவுக்காகப் பேசப்படும் இயக்குநர்கள் வெகு சிலர்தான். சினிமாவை பிரபல்யத்திற்காகவும் வெறும் தொழிலாகவும் பார்க்காமல் அதைக் கலையாகக் கையாண்டு காலம் சென்ற பிறகும் நிலைத்து நிற்கும் இயக்குநர்களில் பாலுமகேந்திரா மிக முக்கியமானவர். இயக்கம் மட்டுமில்லாது தனது ஒளிப்பதிவிலும் ரசிகர்களைக் கவர்ந்தவர். அவரது பத்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று.

இயக்குநர் பாலுமகேந்திரா
இயக்குநர் பாலுமகேந்திரா

பலரைப் போலவே சிறுவயதில் சினிமாவைப் பார்த்து ஈர்க்கப்பட்டு அதன் மீது காதல் வயபட்டவர்தான் பாலுமகேந்திரா. இலங்கையில் பிறந்து வளர்ந்தவர் சினிமா மீதான தனது காதலை இன்னும் உறுதியாக்க, புனே திரைப்படக்கல்லூரியில் முறையாக ஒளிப்பதிவுக் கலை பயின்றார். பின்பு, 1972-ம் ஆண்டு ’பனிமுடக்கு’ எனும் மலையாளப் படத்தின் ஒளிப்பதிவாளராகத் திரைத்துறைக்குள் அறிமுகமாகிறார். முதல் படத்திலேயே தன்னுடைய ஒளிப்பதிவிற்காகப் பலரின் பாராட்டுகளைப் பெற்றார்.

ஒளிப்பதிவைப் போலவே இயக்கத்திலும் சிறந்தவரான பாலுமகேந்திரா, கன்னடத்தில் ‘கோகிலா’ என்ற படம் மூலமாகத்தான் இயக்குநரானார். தமிழில் இவர் இயக்குநரான படம் ‘அழியாத கோலங்கள்’. ஆனால், இயக்குநராவதற்கு முன்பே மலையாளம், தெலுங்கு, உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் இருபதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து பெயர் பெற்றார்.

’கோகிலா’, ‘மூன்றாம் பிறை’ படங்களின் ஒளிப்பதிவிற்காக இரண்டு முறை தேசியவிருதுகளைப் பெற்றவர், இயக்குநராக ‘வீடு’, ‘சந்தியாராகம்’, ‘வண்ண வண்ணப்பூக்கள்’ போன்ற படங்களுக்காக தேசிய விருதுகள் பெற்றார். ‘முள்ளும் மலரும்’, ‘மூன்றாம் பிறை’, ‘சதிலீலாவதி’, ‘நீங்கள் கேட்டவை’ எனக் காலம் கடந்தும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் கிளாஸிக் படங்களையும் கொடுத்தவர் இவர்.

கதாநாயக பிம்பம், பாட்டு, டூயட், சண்டைக்காட்சி என வெகுஜன சினிமாவுக்காக படமெடுக்கிறேன் பேர்வழி என வணிக சுழலுக்குள் சிக்காமல் உண்மைக்கு நெருக்கமான கதைகளையும் காட்சிகளையும் தன் படத்தில் கொண்டு வந்தார் பாலுமகேந்திரா.

சிறந்த இலக்கிய வாசிப்பாளராகவும் இருந்தது இதுபோன்ற கமர்ஷியல் விஷயங்களை தன் படங்களில் பாலுமகேந்திரா தவிர்க்க முக்கியக் காரணம். பாலா, சீனு ராமசாமி, வெற்றிமாறன், ராம் எனத் தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய படைப்பாளிகளாக இருக்கும் பல இயக்குநர்கள் பாலுமகேந்திரா பட்டறையில் பட்டைத் தீட்டப்பட்டவர்கள்தான்.

அதேபோல, இயக்குநர் மணி ரத்னம் தான் இயக்கும் முதல் படத்திற்கு பாலுமகேந்திராதான் ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவரது திறமையை சரியாக கணித்த பாலுமகேந்திரா, மணி ரத்னத்தின் முதல் படமான ‘பல்லவி அனு பல்லவி’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார்.

’மறுபடியும்’ படத்தில்...
’மறுபடியும்’ படத்தில்...

இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை ஆகிய நான்கும் ஒருவரிசையில் இயங்கினால் மட்டுமே நல்ல சினிமா உருவாகும் என்பதில் ஆழமான நம்பிக்கைக் கொண்டிருந்தார் பாலுமகேந்திரா. தான் இயக்கும் படங்களில் பெரும்பாலும் இசையைத் தவிர்த்து ஒளிப்பதிவு, படத்தொகுப்பைத் தானே செய்து முடித்திருப்பார். அதேபோல, இயக்குநராக தனது முதல் இரண்டு படங்களைத் தவிர்த்து மற்ற படங்களுக்கு எல்லாமே இளையராஜாதான் அவருக்கு ஆஸ்தான இசையமைப்பாளர்.

அதேபோல, சின்னத்திரையிலும் ‘பாலுமகேந்திராவின் கதை நேரம்’ என ஐம்பது சிறுகதைகளுக்குத் திரைவடிவம் கொடுத்தார் பாலு மகேந்திரா. இதுவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. அவரது இயக்கத்தில் இறுதியாக வந்த படம் ‘தலைமுறைகள்’. அவரே அதில் நடித்தும் இருந்தார். அதன் பிறகு உடல்நலக் குறைவால் நம்மை விட்டுப் பிரிந்தார் இயக்குநர் பாலுமகேந்திரா. காலம் கடந்தும் தமிழ் சினிமாவில் அவர் உருவாக்கிய படைப்புகள் அவர் புகழ் பேசும்.

இதையும் வாசிக்கலாமே...

இந்தியன் ரயில்வேயில் 9,000 காலி பணியிடங்கள் அறிவிப்பு!

அதிர்ச்சி... ஒரே விடுதியில் அடுத்தடுத்து மாணவர், மாணவி தூக்கிட்டு தற்கொலை!

நடுரோட்டில் கட்சி மாறிய அதிமுக நிர்வாகி... வேட்டியை அவிழ்த்து சாலையில் வீசியதால் பரபரப்பு!

‘ஐயா மன்னிச்சுடுங்க...’ இயக்குநர் வீட்டு கதவில் தேசிய விருதுகளை தொங்க விட்ட திருடர்கள்!

கல்வி மட்டுமல்ல... 200 மாணவிகளுக்கு வீடும் கட்டித் தந்த ஆசிரியை; குவியும் பாராட்டுகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in