இயக்குநர் பி.மாதவன் : சிவாஜியை ரசித்துக் காதலித்து படங்கள் எடுத்த படைப்பாளி!

- நினைவுநாளில் சிறப்புப் பகிர்வு
இயக்குநர் பி.மாதவன் : சிவாஜியை ரசித்துக் காதலித்து படங்கள் எடுத்த படைப்பாளி!

ஒரு விதையில் இருந்து ஓராயிரம் மரங்கள் வரும் என்பதுதான் இயற்கையின் நியதி. சினிமாவிலும் அப்படித்தான்... நமக்கு ஒரு இயக்குநரிடம் இருந்து பல இயக்குநர்கள் கிடைத்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் பாரதிராஜா வந்த பிறகு அவரிடம் இருந்து வந்தவர்களும் அதிகம். பாக்யராஜிடம் இருந்து நமக்குக் கிடைத்த டைரக்டர்கள் பட்டியலும் நீளம்.

இப்படித்தான், அந்தக் காலத்தில் டி.ஆர்.ரகுநாத், பீம்சிங், ஸ்ரீதர் முதலானோரிடம் இருந்து நமக்கு இயக்குநர்கள் கிடைத்தார்கள். அப்படிக் கிடைத்த இயக்குநர்கள் பலரும் பொக்கிஷமான படங்களைக் கொடுத்திருக்கிறார்கள். அப்படியான இயக்குநர்களில் பி.மாதவனும் ஒருவர்.

ஆரம்பத்தில் டி.ஆர்.ரகுநாத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அடுத்து ஸ்ரீதருடன் சேர்ந்தார். பல படங்களுக்கு உதவி இயக்குநராக வேலை பார்த்தார். சென்னையில் இருந்து வேலூர் செல்லும் வழியில் உள்ள வாலாஜாபேட்டைதான் மாதவனுக்கு சொந்த ஊர். படிப்பில் ஆர்வம் இருந்தது. நன்றாகப் படித்தார். பி.ஏ.பட்டமும் பெற்றார். இப்படி படித்துக் கொண்டிருக்கும் போதே ஒருவிஷயத்தை எல்லோரும் கவனித்து அவரைப் பாராட்டிக் கொண்டே இருந்தார்கள். முக்கியமாக, மாதவனின் அம்மா ராதாமணியும் உச்சிமுகர்ந்து பாராட்டினார்.

அப்படிப் பாராட்டுகிற அளவுக்கு மாதவனிடம் என்ன திறமை இருந்தது? பத்துப்பேர் இருக்குமிடத்தில் மாதவன் ஒருவிஷயத்தைப் பேச ஆரம்பித்தால், மொத்தபேரின் கவனத்தையும் தன் பக்கம் இழுத்துக் கொள்வார். குறுக்கே பேசாமல், அவர் பேசுவதை வாய்பிளந்து கேட்டுக்கொண்டே இருப்பார்கள். ஒரு கோயிலுக்குப் போய்விட்டு வந்த விஷயத்தை, புதிய ஹோட்டலில் சாப்பிட்டதன் சுவையை, சாலையின் ஓரமாக சுருண்டு தூங்கிக் கொண்டிருக்கும் ஆதரவற்ற மனிதரை, முதல் நாள் பார்த்துவிட்டு வந்த சினிமாவின் கதையை, அப்படியே மாதவன் சொல்ல, அந்தக் காட்சிகளை எதிரே கொண்டு வந்து காட்டிவிடுவார்.

அப்படி படம் பார்த்ததை அம்மாவிடம் சொல்ல, ‘’எவ்ளோ அழகா ஒரு படத்தைப் பத்தி சொல்றேடா. அதுவும் ஒவ்வொரு கதாபாத்திரத்தோட உணர்ச்சிகளையும் முகத்துல கொண்டு வந்து கொட்டிடறே. தாராளமா நடிக்கறதுக்குப் போகலாம். ஜெயிச்சிருவே’’ என்று சொல்லி ஆசீர்வதித்தார். இதையேதான் நட்பு வட்டமும் சொல்லிக் கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில், மாதவனுக்கு நடிகராக வேண்டும் என்கிற ஆசை வளரத் தொடங்கியது. சென்னைக்குக் கிளம்பி வந்தார்.

இன்றைக்கு உலக நாயகனாகக் கொண்டாடப்படும் கமல்ஹாசன், ஆரம்பகாலத்தில் இயக்குநராக வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார். ஆனால் கே.பாலசந்தர் அவரை நடிகராக்கினார். பிறகு சில படங்களை இயக்கினார் கமல்ஹாசன். அதேபோல, இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் நடிக்கும் ஆசையில்தான் இருந்தார். ஆனால் அவர் இயக்குநராகி, பல இயக்குநர்களையும் பல நடிகர் நடிகைகளையும் உருவாக்கிக் கொடுத்தார். தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

மாதவன் நிலையும் இப்படித்தான். நடிக்க வேண்டும் என்று சென்னை கோடம்பாக்கதுக்கு வந்தவரை, காலம் உதவி இயக்குநராக ஆக்கியது. டி.ஆர்.ரகுநாத்திடம் உதவி இயக்குநராக பல படங்களில் பணியாற்றினார். பிறகு இயக்குநர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குநரானார்.

இப்போது நடிப்பில் இருந்த நாட்டம் போயேபோனது. நடிப்பவர்களை இயக்குவதில் தன்னை வளர்த்துக் கொண்டார். ஒருகட்டத்தில் இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ’பருப்பு இல்லாமல் கல்யாணமா?’ என்றொரு சொலவடை உண்டு. அதேபோல், அந்தக் கால படங்களில் ‘கண்ணதாசன் இல்லாமல் படமா?’ என்பதும் கண்ணதாசனின் அண்ணன் ’ஏஎல்.எஸ். இல்லாத படமா’ என்பதும் சொலவடையாகவே வைத்துப் பார்க்கலாம்.

அந்தக் காலத்தில் ஏஎல்.எஸ். படத்தைத் தயாரித்திருப்பார். இல்லையா... பட விநியோக உரிமை மொத்தத்தையும் பெற்றிருப்பார். அல்லது படங்களுக்கு பைனான்ஸ் செய்து பங்களித்திருப்பார். இத்தனை பெருமை மிக்க ஏஎல்.எஸ். அவர்கள்தான், மாதவனை அழைத்தார். படம் இயக்கும் வாய்ப்பை அளித்தார்.

1963-ம் ஆண்டு, ‘மணியோசை’ எனும் படத்தை இயக்கினார் மாதவன். நல்ல கதை, சிறப்பான நடிப்பு, அருமையான இயக்கம் என்று படம் பார்த்தவர்கள் பாராட்டினாலும், படம் ஏனோ தோல்வியைத் தழுவியது. முதல் படமே தோல்வி என்பதில் கொஞ்சம் அப்செட்டில் இருந்தாலும் தலை உலுக்கி, எழுந்து அடுத்த படத்துக்கு கடுமையாக உழைத்தார்.

அட்டகாசமான கதையைத் தேர்ந்தெடுத்தார். சிவாஜி கணேசனிடம் கதை சொன்னார். பிடித்துப் போனது. நடிக்க ஒப்புக் கொண்டார். ‘அன்னை இல்லம்’ என்ற அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதுமட்டுமா? இயக்குநர் ஸ்ரீதரின் படங்கள் பலவற்றில் நடிக்கும்போதே சி.வி.ராஜேந்திரன் மீதும், மாதவன் மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார் நடிகர்திலகம். ‘அன்னை இல்லம்’ படத்தில் சிவாஜி நடிக்க உடனே ஒப்புக்கொண்டதற்கு, ஸ்ரீதரின் சிஷ்யர் மாதவன் என்பதும் ஒரு காரணம்.

இதைவிட முக்கியம்... இயக்குநர் பி.மாதவன், சிவாஜியின் நடிப்பை அணு அணுவாக ரசிக்கும் காதலன். எம்ஜிஆரை வைத்து சத்யா மூவிஸ் தயாரிப்பில், கே.பாலசந்தரின் வசனத்தில், ‘தெய்வத்தாய்’ படத்தை இயக்கினார். இதுவும் நற்பெயரைப் பெற்றுத் தந்தது மாதவனுக்கு.

அடுத்தடுத்து படங்கள் வரத்தொடங்கின. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான படங்களாக அமைந்தன. ‘’மாது, கதையை செலக்ட் பண்றதுல உனக்குன்னு ஒரு பாணியை வைச்சிருக்கேடா’’ என்று சிவாஜி பாராட்டியிருக்கிறார் மாதவனை!

’ராஜபார்ட் ரங்கதுரை’ சிவாஜி
’ராஜபார்ட் ரங்கதுரை’ சிவாஜி

இன்னொரு விஷயம்... நடிகர் திலகத்தை வைத்து அதிகமான படங்களை இயக்கியவர்கள் பட்டியலில் மாதவனுக்கும் இடமுண்டு. எல்லோருக்கும் பிடித்த கதையாக இருக்கவேண்டும்; எல்லோரும் புரிகிற கதையாக இருக்கவேண்டும். சிவாஜி சாரின் நடிப்பை வெளிக்கொண்டு வரும் காட்சிகள் நிறையவே இருக்கவேண்டும். குடும்பத்தோடு பார்க்கும் வகையில் இருக்கவேண்டும். படத்தில் நல்ல மெசேஜ் இருக்கவேண்டும். ஆனால், மெசேஜ் சொல்லும் படமாகவும் இருந்துவிடக் கூடாது. பாடல்கள் ரசிகர்களைக் கவரும் வகையில் இருக்கவேண்டும் என்று தனக்கென திட்டம் வைத்துக்கொண்டு, அதன்படி நூல் பிடித்த மாதிரி சென்று, வெரைட்டியான படங்களையும் நடிகர் திலகத்தின் வெரைட்டியான நடிப்பையும் கொண்டு வருவதில் கில்லாடி என்று இயக்குநர் பி.மாதவனைச் சொல்லுவார்கள்.

அந்தக் காலத்தில் கதாசிரியரும் எழுத்தாளருமான பாலமுருகன், தமிழ் சினிமாவில் தனித்துவம் மிக்கவர். இயல்பான வசனங்களுக்குச் சொந்தக்காரர். சிவாஜியின் ஏராளமான படங்களுக்கு கதை வசனம் எழுதியிருக்கிறார் பாலமுருகன். அதேபோல், சிவாஜி, பி.மாதவன், பாலமுருகன் கூட்டணி என்றாலே படம் ஹிட் என உறுதியுடன் நம்பினார்கள் திரையுலகத்தினர். அதேபோல் வியட்நாம் வீடு சுந்தரத்தின் கதை வசனங்களையும் பயன்படுத்தி இயக்குவதில் சூரர் என்று பேரெடுத்தார் மாதவன்.

‘ஞான ஒளி’ படத்தின் ஆண்டனியையும் லாரன்ஸையும் மறந்துவிடமுடியுமா? ‘வியட்நாம் வீடு’ பிரஸ்டீஜ் பத்மநாபனை இன்றைக்கும் மரியாதை குறையாமல் போற்றிக் கொண்டிருக்கிறோம். ‘ராமன் எத்தனை ராமனடி’ நடிகர் விஜயகுமாரை அவ்வளவு சீக்கிரத்தில் நம் மனதை விட்டு எடுத்துவிடமுடியுமா? இப்படி பல படங்களில் சிவாஜியை ரசித்து ரசித்து இயக்கினார் பி.மாதவன். ‘அருண் பிரசாத் மூவிஸ்’ எனும் கம்பெனியைத் தொடங்கி, தொடர்ந்து 35-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து இயக்கியிருக்கிறார்.

’எங்க ஊர் ராஜா’ சிவாஜி, ’ராஜபார்ட் ரங்கதுரை’ சிவாஜி, ‘தங்கப்பதக்கம்’ செளத்ரி சிவாஜி, ‘பட்டிக்காடா பட்டணமா’ மூக்கையா சேர்வை சிவாஜி என்று ஏகப்பட்ட படங்களைக் கொடுத்து, இன்னும் மக்கள் மனங்களில் நிற்கும் படங்களாகவும் கொடுத்தார் பி.மாதவன்.

ஜெமினி, எஸ்.எஸ்.ஆர்., முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், சிவகுமார், ரஜினிகாந்த் என பலரையும் வைத்து பல படங்களைத் தந்திருக்கிற பி.மாதவன், பாடல்களின் காதலன். பாடலின் வரியைக் கொண்டே தன் படங்களுக்குத் தலைப்பாக்க ஆசைப்படுவார். ‘ராமன் எத்தனை ராமனடி’ என்பது ஒரு பாடலின் வரிதான். ’பட்டிக்காடா பட்டணமா’ என்பது சிவாஜி படம். ஆனால் இந்தப் பாட்டு எம்ஜிஆரின் பாட்டு. ’தங்கப்பதக்கம்’ சிவாஜி படம். ‘தங்கப்பதக்கத்தின் மேலே’ என்பது எம்ஜிஆர் பாட்டு. இயக்குநர் முக்தா சீனிவாசன் பி.மாதவனைப் பார்க்கும் போதெல்லாம், “ஏண்டா மாது... என் படப் பாட்டுலேருந்து தலைப்பை எடுத்து எப்போ படம் பண்ணப்போறே?’’ என்று கிண்டலாகக் கேட்பாராம்!

எண்பதுகளுக்குப் பிறகு, புதிய புதிய இயக்குநர்களின் வரவு அதிகமாகிக் கொண்டே போனது. அப்போது, பி.மாதவனின் படங்கள் எல்லாக் காலத்துக்கும் பொருந்தும். எப்போது வேண்டுமானாலும் படமாக எடுக்கலாம் என்பது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாக இருந்தது. அவரின் ஒவ்வொரு படத்தையும் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், ‘அட... ஆமாம்’ என்று நாமும் ஒப்புக்கொள்வோம்.

பின்னாளில் இவர் இயக்கிய படத்துக்கு ஜி.கே.வெங்கடேஷ் இசையமைத்தார். அப்போதிருந்தே இளையராஜாவைத் தெரியும் மாதவனுக்கு. ‘அன்னக்கிளி’ வாய்ப்பு கிடைத்த அன்று ரெக்கார்டிங்கில் மின்சாரம் போனது. அப்போது துவண்டு, ஒரு ஓரமாக உட்கார்ந்துகொண்டார் இளையராஜா.

கரன்ட் வந்தது. மீண்டும் வேலை பார்த்தார் இளையராஜா. ரெக்கார்ட் செய்ததை திரும்பக் கேட்கலாம் என்று ஒலிபரப்பினால், எதுவுமே பதிவாகவில்லை. மீண்டும் சோர்ந்து மனம் உடைந்து உட்கார்ந்தார் இளையராஜா. அப்போது, ‘’ராஜா எங்கேப்பா?’’ என்று கேட்டுக்கொண்டே வந்தார் மாதவன். இளையராஜாவைப் பார்த்தார். அருகில் சென்றார்.’’ராஜா எந்திரி முதல்ல. என்ன இது. நீ ஜெயிக்கணும்னு திருவேற்காடு அம்மன்கிட்ட போய் வேண்டிக்கிட்டு வந்திருக்கேன். இந்தா பிரசாதம். துவண்டு போகாம உற்சாகமா ஒர்க் பண்ணு. நிச்சயம் ஜெயிப்பே’’ என்று இளையராஜாவுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றி, உற்சாகப்படுத்தினார். அத்தனை பெருமைக்கு உரியவர் பி.மாதவன்.

இயக்குநர் ஏ.பி.நாகராஜன், நடிகை வடிவுக்கரசிக்கு பெரியப்பா. வடிவுக்கரசியின் சொந்த ஊர், மாதவனின் ஊருக்கு அருகில் உள்ள ராணிப்பேட்டை. வீட்டுக்குத் தெரியாமலேயே, சொல்லாமலேயே, ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் நடித்துவிட்டார். ‘’நம்ம வீட்டுப் பொண்ணுக்கு சினிமாலாம் வேணாம்’’ என்று வடிவுக்கரசியின் அப்பா கொந்தளிக்க, ‘’என்னய்யா சொல்றே... நாமளாம் இருக்கோம். நல்லாவும் நடிக்கிறா. பெரிய ஆளா வருவா பாரு. தைரியமா அனுப்பு. சினிமால தனக்குன்னு ஒரு பேர் எடுத்து நிலைச்சு நிப்பா வடிவு’’ என்று வடிவுக்கரசியின் குடும்பத்துக்கு நம்பிக்கை சொல்லி, ஊக்கப்படுத்தி, வடிவுக்கரசியின் எதிர்காலத்தையும் அவரின் திறமையையும் கணித்துச் சொன்னவர் இயக்குநர் பி.மாதவன்.

இயக்குநர் பி.மாதவன் செலவு வைக்காதவர். சொந்தப் படங்கள்தான் அதிகம். குறிப்பிட்ட பட்ஜெட்டில் நிறைவானதொரு படங்களைக் கொடுப்பதில் தேர்ந்த படைப்பாளி. ஆரம்ப வரிகளில் சொன்னது போலவே, சினிமாவையும் நடிகர்திலகத்தின் நடிப்பையும் அணு அணுவாக நேசித்து ரசித்த காதலன்.

1928-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பிறந்த பி.மாதவன், 2003-ம் ஆண்டு, டிசம்பர் 16-ம் தேதி காலமானார். அவர் படங்களை மீண்டும் பாருங்களேன். அந்தப் படங்களையெல்லாம் இன்றைக்கும் ரீமேக் செய்து திரையிட்டால், மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்பதை உணருவீர்கள். எல்லாக் காலத்துக்கும் பொருந்துகிற கதைகளைத் தேர்வு செய்வதில் மன்னனாகவும் சிவாஜியின் வெறியனாகவும் இருந்து படங்களைப் படைத்து, விருந்திட்ட பி.மாதவனை எவராலும் மறக்கமுடியாது!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in