ஹாலிவுட்டில் மீண்டும் புரூஸ் லீ: புதிய பயோபிக் இயக்குகிறார் ஆஸ்கர் புகழ் ஆங் லீ

ஹாலிவுட்டில் மீண்டும் புரூஸ் லீ: புதிய பயோபிக் இயக்குகிறார் ஆஸ்கர் புகழ் ஆங் லீ

குங்ஃபூ மன்னன் புரூஸ் லீ வாழ்க்கையை மையமாகக் கொண்டு பல்வேறு திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த வரிசையில் பிரபல இயக்குநர் ஆங் லீ புதிய புரூஸ் லீ பயோபிக் படைக்க இருக்கிறார். விருதுகள் மட்டுமன்றி வசூலிலும் பெயர் பெற்றவர் என்பதால் ஆங் லீ-யின் புதிய புரூஸ் லீ-க்கு எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன.

தைவானில் பிறந்து ஹாலிவுட்டில் கோலோச்சும் இயக்குநர் ஆங் லீ, ’லைஃப் ஆஃப் பை’ திரைப்படத்தின் வாயிலாக இந்திய ரசிகர்களுக்கும் அறிமுகமானவர். இந்த படத்துக்காக 4 ஆஸ்கர் விருதுகள் பெற்ற ஆங் லீ, ’புரோக்பேக் மவுண்டன்’ படத்துக்காக 3, ’க்ரௌச்சிங் டைகர் ஹிட்டன் டிராகன்’ படத்துக்காக 2 என ஆஸ்கர் விருதுகளை அள்ளியிருக்கிறார். விருதுகளோடு பாக்ஸ் ஆபிஸ் சாதனைக்கும் உரியவை என்பதால் ஆங் லீ படைப்புகளுக்கான எதிர்பார்ப்பு அதிகம் நிலவுகிறது.

இந்நிலையில் புரூஸ் லீயின் சரிதத்தை திரைப்படமாக எடுக்கும் பணிகளை ஆங் லீ தொடங்கியிருக்கிறார். சோனி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் தயாரிப்பிலும் ஆங் லீ இணைந்திருக்கிறார். புரூஸ் லீ வேடத்தில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்புக்கும் ஆங் லீ சர்ப்ரைஸ் தந்திருக்கிறார். மகன் மேசன் லீ, புரூஸ் லீயாக நடிக்கவிருப்பதையும் ஆங் லீ உறுதி செய்திருக்கிறார்.

’ஹேங் ஓவர்-2’ திரைப்படத்தில் டெடி கதாபத்திரத்தில் தோன்றி ரசிகர்களை ஈர்த்த மேசன் லீ, ’லாங் ஹாஃப்டைம் வாக்’ என்ற தந்தை ஆங் லீ இயக்கிய படத்திலும் நடித்திருக்கிறார்.

குங்ஃபூ தற்காப்பு கலையிலும் அதனை திரையில் வெளிப்படுத்திய வகையிலும் உலகம் முழுக்க ஏகோபித்த ரசிகர்களை பெற்றிருக்கும் புரூஸ் லீ, தனது 32 வயதில் சந்தேகத்துக்குரிய வகையில் மரணமடைந்தார். அவரது வீரம், விவேகம், தற்காப்புக் கலை நுட்பங்கள், திரைக்கு அப்பாலான எதிரிகள் அவர்களின் சூழ்ச்சிகள் என பல்வேறு அம்சங்களை ஆங் லீ தனது பாணியில் புதிய திரைப்படத்தில் அலச இருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in