‘மனசாட்சியை தொட்டு சொல்வோம்; ரஜினி சிறந்த நடிகரா?’ - அமீர் கிளப்பிய குபீர்!

அமீர் - ரஜினி
அமீர் - ரஜினி

விருதுகள் அனைத்துமே லாபி மூலம் பெறப்படுகின்றன என்று எழும் அண்மைக் குரல்களில் இயக்குநர் அமீரும் சேர்ந்திருக்கிறார். அந்தவகையில் ரஜினி காந்துக்கு விருது அளிக்கப்பட்டதை தொட்டு அமீர் பேட்டியளித்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆஸ்கர் விருது வென்றன் பின்னணியில் மிகப்பெரும் பொருட்செலவிலான புரமோஷன் மற்றும் லாபி உள்ளிட்டவை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆஸ்கர் விருது அறிவிப்பு வெளியானதுமே, வரவேற்று கொண்டாடிய அலை அடங்கியதும், தற்போது எதிர்ப்பாட்டு படிப்போர் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. ’நாட்டு.. நாட்டு’ பாடலுக்கு விருது கொடுத்தால், ’நாக்க மூக்க..’ பாடல் மட்டும் தொக்கா என்ற நகுல் குரலில் தொடங்கி, ஏ.ஆர்.ரஹ்மான் வரை பலரும் பலவிதங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். இவர்களில் அண்மை வரவு இயக்குநர் அமீர்.

’செங்களம்’ தொடருக்கான ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் அமீர், பத்திரியாளர்கள் மத்தியில் ரஜினியை முன்னிறுத்தி எழுப்பிய கேள்வி சர்ச்சையை கூட்டியுள்ளது. விருதுகள் அனைத்தும் லாபி மூலம் பெறப்படுபவையே என்பதை அமீர் உடைத்துப் பேசினார். ”இந்தியாவின் மிகப்பெரும் நடிகரான சிவாஜி கணேசனுக்கு தேசிய விருது வழங்கப்படவில்லை. மிகத் தாமதமாக தேவர் மகன் படத்தில் நடித்ததற்காக சிறப்பு விருது அளித்தார்கள். அது கூட விருதுக்கான நடுவர் குழுவில் இருந்தவர்கள் மத்தியில் வலியுறுத்தியே பெறப்பட்டதாக சிவாஜியே ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய இயக்குநர் அமீர், பின்னர் சிவாஜி கணேசனிடமிருந்து ரஜினி நடித்த ’சிவாஜி’ திரைப்படத்துக்கு தாவினார்.

”2007ல் சிவாஜி திரைப்படத்தில் நடித்ததற்காக ரஜினி காந்துக்கு சிறந்த நடிகருக்கான மாநில விருது வழங்கப்பட்டது. ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார்; மிகச்சிறந்த பொழுதுபோக்காளர். ஆனால் சிறந்த நடிகரா? மனசாட்சியை தொட்டுச் சொல்வோம். சிவாஜி திரைப்படத்தில் அவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாரா? விருதுகள் அனைத்தும் லாபி மூலமே பெறப்படுபவை” என்றார்.

இதனையடுத்து அமீரின் ரஜினி எதிர்ப்பு நிலை குறித்து மேலும் கேள்விகள் எழுப்பப்பட்டதும், சுதாரித்தவராக, “ரஜினி நடித்த முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபதி வரை போன்ற திரைப்படங்களுக்கு விருது தந்தார்களா? அப்படியெனில் அதில் அவர் சிறப்பாக நடிக்கவில்லையா?” என்று கேள்வி எழுப்பியவர்களை மடக்கினார் அமீர். விருதுகள் அனைத்துமே லாபி மூலம் பெறப்படக்கூடியவை என்ற குரல்களின் அங்கமாக, ரஜினியை முன்னிறுத்தி இயக்குனர் அமீர் எழுப்பிய கேள்விகள் கூடுதல் விவாதங்களை கிளப்பியுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in