அரசியலும் சர்ச்சைகளும் பேசி சூப்பர் ஸ்டார் படம் ஓட வேண்டிய அவசியமில்லை என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடிய திரைப்படம் 'லால் சலாம்'. இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வருகிற ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வரவிருக்கும் நிலையில் இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.
அதில் ஐஸ்வர்யா பேசியதாவது, "இசை வெளியீட்டு விழாவின் பொழுது அப்பாவை குறித்து நான் பேசிய விஷயமும் படத்தின் புரோமோஷன்காக தான் இப்படி நான் பேசினேனா என்றும் அப்பாவிடம் ஏர்போர்ட்டில் பத்திரிக்கையாளர்கள் கேட்டிருந்தார்கள். இது எனக்கு வருத்தமாக இருந்தது. அப்பாவிடம் அதை கேட்டிருக்க வேண்டாம். நான் என்ன பேசப்போகிறேன் என்பது அப்பாவுக்கு முன்பு தெரியாது.
இப்படியான அரசியல் சர்ச்சைகளையும் வைத்துதான் சூப்பர் ஸ்டார் படம் ஓட வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. இதற்கு முன்பு அப்பா நடித்த 'ஜெயிலர்' படத்தில் எந்தவிதமான அரசியலும் இல்லை. ஆனால் அந்த படம் ஓடியது. விளையாட்டில் நான் பெருசா, நீ பெருசா என்றப் போட்டி வருகிறது. இந்த போட்டி பிசினஸ் ஆக மாறி, அரசியலாக மாறி, பின்பு எப்படி மத வெறியாகிறது என்பதுதான் 'லால் சலாம்' படத்தின் கதை" என்றார்.
மேலும் அவர், "கஷ்டப்பட்டு கிடைக்கிறதுதான் நிலைக்கும். இதை ஆழமாக நம்புகிறேன். இந்த படம் அரசியல் பேசுகிறதா என்றால், சின்ன அரசியல் பேசுது. அது மக்களுக்கான அரசியல். மக்களுக்குள் இருக்கும் அரசியல். நாட்டின் குடிமகனாக இருக்கும் அனைவருக்கும் அரசியலில் பங்கு இருக்கு. அரசியல் இல்லாமல் எந்த ஒரு நாடுமே இயங்காது. அரசியல் என்பது எல்லா இடத்திலும் இருக்கு. பார்க்கிற விதம்தான் மாறுபடும். இதுதான் 'லால் சலாம்' படமும்” என்றார்.