
சினிமாவில் அடுத்தடுத்து படங்கள் இயக்க இருப்பதாக இயக்குநர் அமீர் தெரிவித்தார்.
இயக்குநர் அமீர், 9 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கும் படத்துக்கு வெற்றி மாறன் மற்றும் எழுத்தாளர் தங்கம் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். இந்த திரைப்படத்துக்கு 'இறைவன் மிகப் பெரியவன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் சார்பில் ஜாஃபர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. விழாவில் இயக்குநர்கள் வெற்றி மாறன், கரு.பழனியப்பன், யுவன் சங்கர் ராஜா, தயாரிப்பாளர் ஜாஃபர் உட்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில், இயக்குநர் அமீர் பேசியதாவது:
“ஒரு புதிய தயாரிப்பாளர், இந்தக் காலத்தில் படம் செய்வதே கடினம். அதிலும் என்னை மாதிரி இயக்குநரை வைத்து படமெடுப்பது இன்னும் கடினம். அவருக்காகத் தான், அந்த தயாரிப்பாளரை அறிமுகப்படுத்தும் நோக்கம்தான் இந்தவிழா. நானும் வெற்றிமாறனும் சேர்ந்து தினமும் ஒரு புராஜக்ட் பற்றி பேசிக்கொண்டே இருப்போம். நான் வேறு படங்கள் செய்யும் நிலையிலிருந்த போது, இந்தப் படத்தை, இந்தக் கதையை செய்யலாம் என தோன்றியது. நான் வெற்றியிடம் ’இறைவன் மிகப்பெரியவன்’ செய்யலாமா? எனக் கேட்டேன். கண்டிப்பாக செய்யலாம் என்றார். இடையில் நான் இன்னொரு படமும் செய்திருக்கிறேன். அதைப்பற்றி அறிவிப்பு விரைவில் வரும். இந்தப் படத்தை பொறுத்தவரை கரு. பழனியப்பன் நடிக்கிறார். இப்போதைக்கு இது மட்டும்தான் முடிவாகியுள்ளது.
எனக்கு இப்படி சுதந்திரமாக வேலை செய்வதுதான் பிடிக்கும். இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம் மதத்தைத் தீவிரவாத மதமாகக் கட்டமைக்கும் பழக்கம் இருக்கிறது. இன்றைக்கு புதிதாக வருபவர்கள் தங்கள் சாதி அடையாளங்களைத் தான் முன்னிறுத்துகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் இது மோசமான விஷயமாக இருக்கிறது. அதற்காக இதை செய்ய வேண்டும் என தோன்றியது. இந்தப் படம் எங்களுக்குள் இருக்கும் அழகான உறவைச் சொல்லவருகிறது. நீங்கள் பார்க்காதது எதையும் சொல்லப்போவதில்லை. நீங்கள் பார்த்த விஷயங்களை, நினைவுகளைதான் இந்தப்படம் சொல்லும்.
சூரியை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறேன். இன்னும் அடுத்தடுத்து நிறைய படங்கள் செய்யவுள்ளேன். சினிமாவில் என்னை முழுதாக பார்க்கலாம். ஓட்டுக்காக எங்களுக்குள் பகைமையை உண்டாக்காதீர்கள் என்பதை இந்தப் படம் அழுத்தமாகச் சொல்லும்”.
இவ்வாறு இயக்குநர் அமீர் பேசினார்.