`சிவாஜி’ல ரஜினிக்கு மாமனாரா நடிக்க என்னைதான் கூப்பிட்டாங்க’: திண்டுக்கல் லியோனி

`சிவாஜி’ல ரஜினிக்கு மாமனாரா நடிக்க என்னைதான் கூப்பிட்டாங்க’: திண்டுக்கல் லியோனி

’சிவாஜி’ படத்தில் ரஜினிகாந்துக்கு மாமனாராக நடிக்க தனக்கு வாய்ப்பு வந்ததாக திண்டுக்கல் லியோனி தெரிவித்தார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் வழங்க, சூப்பர் டாக்கீஸ் சமீர் பரத்ராம் தயாரித்துள்ள படம், ’பன்னிக்குட்டி’. கருணாகரன், யோகி பாபு, திண்டுக்கல் லியோனி, லட்சுமி பிரியா, ஸ்வாதிகா, சிங்கம் புலி, ராமர், தங்கதுரை உட்பட பலர் நடித்துள்ளனர். கே இசையமைத்துள்ளார். சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அனுசரண் இயக்கியுள்ள இந்தப் படம், வரும் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அதில் திண்டுக்கல் லியோனி கூறியதாவது:

21 வருடத்துக்கு முன் அருண் விஜய், வடிவேலுவுக்கு அப்பாக ’கங்கா கவுரி’ என்ற படத்தில் நடித்திருந்தேன். பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தது. ’சிவாஜி’ படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு மாமனாராக நடிக்கக் கூடிய வாய்ப்பு வந்தது. அப்போது பள்ளி ஆசிரியராக இருந்ததால், நடிப்பதற்கு லீவு கொடுக்கவில்லை. வேலையை ராஜினாமா செய்துவிட்டு போ என்றார்கள். அந்த நெருக்கடியால் அதில் நடிக்க முடியாமல் போய்விட்டது. பிறகு இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். உங்களுக்காகவே இந்த கேரக்டரை வடிவமைத்திருக்கிறேன் என்ற இயக்குநர் ஒரு சாமியார் வேடத்தைக் கொடுத்திருக்கிறார்.

ஒருமுறை பட்டிமன்ற நடுவராக இருந்தபோது, நித்யானந்தாவுக்கும் விவேகானந்தருக்கும் என்ன வித்தியாசம் என்று ஒருவர் கேட்டார். நான் என்ன சொன்னாலும் மாட்டிக்கொள்வேன். இருந்தாலும் விவேகானந்தர் அவர் சீடர்களால் பிரபலமானார். நித்யானந்தா, தன் சீடிகளால் பிரபலமானார் என்றேன். பிறகு சீடி என்றால் சீடருக்கு பெண்பால் இல்லை, காம்பேக்ட் டிஸ்க் என்று விளக்கினேன். ரசிகர்களிடம் அதற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.

ஸ்வாதிகா, கருணாகரன், லட்சுமி பிரியா
ஸ்வாதிகா, கருணாகரன், லட்சுமி பிரியா

சாமியார்களில் பலவகை இருக்கிறார்கள். குவார்ட்டர் சாமியார் என்று ஒருவர் இருக்கிறார். குவார்ட்டர் அடித்துவிட்டு மக்களுக்கு நல்லது சொல்வார். விளக்குமார் சாமியார் என்று ஒருவர் இருக்கிறார். அவர் நெற்றியில் அதை வைத்து அடித்துக்கொண்டு குறி சொல்வார். எங்க பகுதியில் சாக்கடை சாமியார் என்று ஒருவர் உண்டு. அவரை தேடி வந்து நல்லது கேட்டுவிட்டுச் செல்வார்கள். இப்படி பலவகை சாமியார்கள் இருக்கிறார்கள். ஆனால் இதில் எனக்கு வேறு விதமான சாமியார் கேரக்டரை இயக்குநர் அனுச்சரண் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தில் நல்ல மெசேஜ் இருக்கிறது. நம்பிக்கைக் கொடுக்கும் படம்.

இவ்வாறு திண்டுக்கல் லியோனி கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in