`நடிகை கடத்தல் வழக்கில் திலீப்புக்கு தொடர்பில்லை'- பரபரப்பை கிளப்பும் சிறைத்துறை முன்னாள் டிஜிபி

`நடிகை கடத்தல் வழக்கில் திலீப்புக்கு தொடர்பில்லை'- பரபரப்பை கிளப்பும் சிறைத்துறை முன்னாள் டிஜிபி

நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப்பை சேர்த்ததற்குப் பின், பெரும் சதி நடந்திருக்கும் என சந்தேகிப்பதாக, கேரள சிறைத்துறை முன்னாள் டிஜிபி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்த பிரபல நடிகையை 2017 பிப்ரவரி 17-ம் தேதி சிலர் காரில் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இவ்வழக்கு தொடர்பாக பல்சர் சுனி உட்பட 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இது தென்னிந்திய திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், திலீப் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், நடிகர் திலீப்பின் நண்பரும் திரைப்பட இயக்குநருமான பாலசந்திரகுமார் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோது செல்போனில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள், நடிகர் திலீப்பிடம் இருப்பதாகவும், அதை அவர் பார்த்தது தெரியும் என்று பாலசந்திரகுமார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்ரீலேகா, நடிகர் திலீப்
ஸ்ரீலேகா, நடிகர் திலீப்

இந்த வழக்கில் விசாரணை அதிகாரியான டிஎஸ்பி பைஜு பவுலோசை கொல்ல நடிகர் திலீப், அவரது தம்பி அனூப், உறவினர் சூரஜ் சதி திட்டம் தீட்டியதாகவும் பாலசந்திரகுமார் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு நடந்து வருகிறது.

இந்நிலையில், நடிகை தாக்கப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்புக்கு எதிராக போலீஸார் பொய்யான ஆதாரங்களை உருவாக்கியதாக, கேரள சிறைத்துறை முன்னாள் டிஜிபி ஸ்ரீலேகா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தனது யூடியூப் சேனல் மூலம் அவர் கூறியிருப்பதாவது:

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனியும் திலீப்பும் சந்தித்ததாக வெளியான புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டது. அவர்கள் சந்தித்துக்கொண்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இது போலீஸுக்கும் தெரியும். அதனால்தான் பாலசந்திரகுமார் போன்றவர்கள் சொல்லும் வாக்குமூலத்தை நம்பி போலீஸார் வழக்கை இழுத்தடிக்கின்றனர். ஆனால், பல்சர் சுனி, முன்னாள் குற்றவாளி. இதற்கு முன்னும் சில நடிகைகளை மிரட்டியிருக்கிறார். ஆனால் அவர்கள் இதுபற்றி புகார் செய்யவில்லை.

இந்த வழக்கில் திலீப்பை இழுத்திருப்பதற்கு பின்னால் பெரிய சதி இருப்பதாக நினைக்கிறேன். அவருக்கு எதிராக சக்திவாய்ந்த விரோதிகள் இருந்தனர். ஒரு குற்றம் நடந்திருக்கிறது. இதில் தொடர்புடையவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், இங்கு தேவையில்லாமல் போலீஸார் சிலரை வழக்கில் சேர்த்து இழுத்தடிக்கிறார்கள்.

இவ்வாறு ஸ்ரீலேகா தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in