`நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேற வழி தெரியல’- பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நடிகை திடீர் மனு

`நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேற வழி தெரியல’- பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நடிகை திடீர் மனு

பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகை, திடீரென நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் நடிகர் திலீப் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். பின்னர் திலீப் ஜாமீன் பெற்றார். இந்த வழக்கில் திலீப்பின் மனைவி காவ்யா மாதவன் உட்பட பலரிடம் விசாரணை நடந்து வந்தது.

இதற்கிடையே வழக்கை வரும் 31-ம் தேதிக்குள் முடித்து அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணையை முடித்துவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கை சீர்குலைக்க சதி நடப்பதாகக் கூறி, பாதிக்கப்பட்ட நடிகை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், வழக்கு தொடங்கியபோது நியாயமான விசாரணை நடந்து வந்தது. ஆனால், திலீப் தரப்பு வழக்கறிஞர்களை விசாரிக்காமல் வழக்கை முடிக்க முடியாது என்று போலீஸார் நீதிமன்றத்தில் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்கள் இந்த வழக்கை சீர்குலைக்க சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாகவும் விசாரணைக் குழு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. அதனால், விசாரணை அறிக்கையை, முழுமையான விசாரணைக்குப் பிறகே நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது.

விசாரணையை முடிவுக்குக் கொண்டு வர போலீஸாருக்கு அரசியல் அழுத்தம் உள்ளதாகவும் நடிகர் திலீப் அரசியல் செல்வாக்கு உள்ளவர் என்றும் ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. நீதிக்காக நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர தனக்கு வேறு வழி தெரியவில்லை என்றும் பாதிக்கப்பட்ட நடிகை அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in