`நடிகர் திலீப்பின் பதில்கள் நம்பகத்தன்மையுடன் இல்லை!'

2வது நாளாக போலீஸ் கிடுக்கிப்பிடி விசாரணை
நடிகர் திலீப்
நடிகர் திலீப்

விசாரணை அதிகாரியை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்பிடம் போலீசார் இரண்டாவது நாளாக இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரபல மலையாள நடிகை, கடந்த 2017-ம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். பின் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், திலீப்பின் நண்பரும் இயக்குநருமான பாலச்சந்திர குமார் சமீபத்தில் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோது செல்போனில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள், நடிகர் திலீப்பிடம் கொடுக்கப்பட்டது என்றும் அவர் அதைப் பார்த்தார் என்றும் இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரியை கொல்ல, நடிகர் திலீப் சதி திட்டம் தீட்டியதாகவும் தெரிவித்திருந்தார்.

 திலீப்
திலீப்

இதையடுத்து திலீப், அவர் சகோதரர் அனூப், மைத்துனர் டி.என்.சூரஜ், உறவினர் அப்பு, நண்பர் பைஜூ செம்மங்காடு, ஓட்டல் உரிமையாளர் சரத் ஆகிய 6 பேர் மீது, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, திலீப் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிமன்றம் திலீப் உட்பட 6 பேரும் ஜனவரி 23 , 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை போலீசாரின் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து நடிகர் திலீப் கமலச்சேரியில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். அவரிடம் 11 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. அதில், இது பொய்யான வழக்கு என்றும் நடிகை தாக்கப்பட்டக் காட்சிகளை தான் பார்க்கவில்லை என்றும் திலீப் தெரிவித்துள்ளார். திலீப்பின் பல பதில்கள் முரணாக இருந்தது என்றும் பல பதில்கள் நம்பகத்தன்மையுடன் இல்லை என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in