‘உதயநிதியை சந்திப்பேன்’: ‘தில்’ காட்டும் ராஜூ

தொடங்கியது ‘வாரிசு’ போர்
‘உதயநிதியை சந்திப்பேன்’: ‘தில்’ காட்டும் ராஜூ

விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள ’வாரிசு’ திரைப்படத்துக்கு போதிய திரையரங்குகள் கிடைக்காதது தொடர்பாக உதயநிதியை சந்தித்து பேசுவேன் என்று ’வாரிசு’ தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்திருக்கிறார்.

விஜய் - அஜித் என கோலிவுட்டின் 2 உச்ச நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்கள் ஒருசேர, வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கின்றன. விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு ஆகியவை போட்டியிட்டு பொங்கல் வெளியீடு காணுவது திரை ரசிகர்கள் மத்தியில் தீபாவளி கொண்டாட்டத்தை தந்திருக்கின்றன.

போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்த துணிவு திரைப்படத்தை இந்தியாவில், உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. அயல்நாடுகளில் லைகா நிறுவனம் வெளியிடுகிறது. அமெரிக்கா வெளியீட்டுக்கு மட்டும் சரிகம நிறுவனத்திடன் விநியோக உரிமையை லைகா கையளித்துள்ளது. விஜய்யின் வாரிசு திரைப்படத்தை தமிழகத்தில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் வெளியிடுகிறார்.

உதயநிதி
உதயநிதி

தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் விஜய்யின் வாரிசு திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தெலுங்கு, தமிழ் என 2 பிராந்தியங்களிலும், வாரிசுக்கு தியேட்டர் ஒதுக்குவதில் பிரச்சினைகள் எழுந்திருக்கின்றன. ’தமிழில் தயாரான வாரிசு படத்தை தெலுங்கில் ’டப்’ மட்டுமே செய்திருக்கிறார்கள். எனவே தியேட்டர் ஒதுக்கீட்டில் நேரடி தெலுங்கு படங்களுக்கே முன்னுரிமை’ என டோலிவுட் திரையுலகம் சாதித்தது. தெலுங்கின் பெரும் தயாரிப்பாளரான தில் ராஜூ அழுத்தம் கொடுத்ததில் தற்போது அந்த பிரச்சினை தணிந்திருக்கிறது.

தமிழகத்தில் வாரிசு திரைப்படத்தைவிட துணிவு திரைப்படத்துக்கே அதிக திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்திருக்கின்றன. இதன் பின்னணியில் உதயநிதி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடும் ’துணிவு’க்கான முன்னுரிமை என்பதற்கு அப்பால், விஜய்க்கு எதிரான அரசியல் காரணங்களும் இருப்பதாக அவரது ரசிகர்கள் புலம்புகிறார்கள். இந்த நெருக்கடியின் மத்தியில் சுமார் 5 வருடங்கள் இடைவெளியில் ரசிகர்களுடன் பனையூரில் வைத்து நேரடி சந்திப்புகளை மும்முரமாக நடத்தி வருகிறார் விஜய். இதில் தமிழகத்தில் ’வாரிசு’க்கு உரிய திரைகள் ஒதுக்கப்படாது குறித்தும் நிர்வாகிகளுடன் விஜய் கலந்து வருகிறார்.

அடுத்தபடியாக இந்த விவகாரத்தில் வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜூம் இப்போது களமிறங்கி இருக்கிறார். இதன் பொருட்டு அஜித் - விஜய் ஆகியோரை ஒப்பிட்டு அவர் கொளுத்திப் போட்டது, தமிழகத்தில் பற்றிக்கொண்டிருக்கிறது. ”தமிழகத்தை பொறுத்தவரை விஜய் தான் நெ.1. அஜித்தைவிட பெரிய நட்சத்திரமான விஜய் படத்துக்கு குறைவான திரைகள் தமிழகத்தில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக அஜித் படத்தின் விநியோகஸ்தரான உதயநிதி ஸ்டாலினை சந்திக்க இருக்கிறேன். விஜய் படத்துக்கும் கூடுதல் திரைகள் ஒதுக்குங்கள் என்று கேட்பேன். இது வர்த்தகம் என்பதாலும் என்னுடையதும் பெரிய படம் என்பதாலும், கூடுதலாக 50 திரையங்குகளையாவது கேட்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

அஜித்தைவிட விஜய்தான் பெரிய நடிகர் என்று தில் ராஜூ வாக்குமூலம் தந்திருப்பது, அஜித் - விஜய் ரசிகர்களிடையே இணையவெளியில் காரசாரமான விவாதங்களுக்கு வழி செய்திருக்கிறது. விஜய் நடிப்பில் இதற்கு முன்னதாக வெளியான ‘பீஸ்ட்’ திரைப்படத்தை வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனம், தற்போது வாரிசு படத்தை தவிர்த்ததோடு, வாரிசுக்கு போதிய திரைகள் கிடைக்காது தவிக்கவும் விட்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறது. இவை திரையுலகுக்கு அப்பால் அரசியல் மூலைகளிலும் எதிரொலித்து வருகின்றன. இதனிடையே வாரிசு தயாரிப்பாளர் ’தில்’லாக களத்தில் இறங்கியிருப்பதும், இந்த விவகாரத்தில் சினிமா காட்சிகளுக்கு இணையான பரபரப்பை உருவாக்கி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in