`பாட முடியாதுன்னு நினைத்தாங்க; இப்போது ஆச்சரியமா கேட்கிறாங்க'- `அரபிக் குத்து’ பாடகியின் அனுபவம்!

`பாட முடியாதுன்னு நினைத்தாங்க; இப்போது ஆச்சரியமா கேட்கிறாங்க'- `அரபிக் குத்து’ பாடகியின் அனுபவம்!

``பாடல் வாய்ப்புகளைப் பெறுவதற்கு ஆரம்பத்தில் உச்சரிப்பு தனக்குத் தடையாக இருந்தது'' என்று ’அரபிக் குத்து’ பாடலைப் பாடிய ஜோனிதா காந்தி தெரிவித்துள்ளார்.

பின்னணி பாடகி ஜோனிதா காந்தி, டெல்லியை சேர்ந்தவர். சிறு வயதிலேயே அவர் குடும்பம் கனடாவுக்கு சென்றதால், அங்கு வளர்ந்தவர். இந்திப் படங்களில் பாடி வந்த இவர், பிறகு தென்னிந்திய படங்களிலும் பாடத் தொடங்கினார். ஓ காதல் கண்மணி , அச்சம் என்பது மடமையடா, காற்றுவெளியிடை, சர்கார், கோலமாவு கோகிலா என பல படங்களில் பாடியுள்ளார்.

தெலுங்கு, இந்தி, மராத்தி உட்பட பல்வேறு மொழிகளில் பாடி வரும் இவர், விஜய்யின் ’பீஸ்ட்’ படத்தில் பாடிய ’அரபிக் குத்து’ பாடல் சூப்பர் ஹிட்டானது. வெளிநாட்டில் வளர்ந்ததால், சரியான உச்சரிப்புக்கு அதிக சிரத்தை எடுத்துக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ஜோனிதா காந்தி கூறும்போது, ``நிச்சயமாக அதிக பொறுமைத் தேவைப்படுகிறது. இந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளை நான் பேசி வளர்ந்ததாலும் அதைப் பேசுபவர்களால் சூழப்பட்டிருப்பதாலும் எனக்கு கடினமாகத் தெரியவில்லை. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் எனக்கு அறிமுகம் இல்லாதவை. அதனால் அந்த மொழிகளில் பாடும் போது கடினமாக உழைக்கிறேன்.

’அரபிக் குத்து’ பாடல் வைரல் ஹிட்டாகி இருக்கிறது. காரணம் என்னைச் சுற்றி இருக்கும் நல்ல உள்ளங்கள்தான். அவர்கள் இப்படி பாட வேண்டும், உச்சரிப்பு இப்படி இருக்க வேண்டும் என்று சொல்லித் தருகிறார்கள். சரியாகப் பாடவில்லை என்றால், அதைத் தெளிவாகப் புரிய வைக்கிறார்கள். நான் கடினமாக உழைப்பது எனக்கு பலன் அளிக்கிறது'' என்கிறார்.

ஆரம்பத்தில் வாய்ப்புகளைப் பெறுவதற்கு உச்சரிப்பு தடையாக இருந்ததா? என்று கேட்டதற்கு, ‘என்னால் சரியான உச்சரிப்புடன் பாட முடியாது என்று பலர் நினைத்தார்கள். இப்போது அந்த நிலை மாறிவிட்டது. நான் வெவ்வேறு மொழிகளில் பாடுவதைக் கேட்கிறார்கள். ’இதை நீங்களா பாடுனீங்க?’ என்று ஆச்சரியமாக விசாரிக்கிறார்கள்’ என்கிறார் ஜோனிதா காந்தி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in