
புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் வாய்ப்பை சமந்தா புறக்கணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் ’புஷ்பா’. 2011, டிசம்பரில் வெளியான இந்தப் படத்தை சுகுமார் இயக்க, ராஷ்மிகா மந்தனா, பஹத் ஃபாசில், தனஞ்செயா, சுனில், அஜய் கோஷ், ராவ் ரமேஷ், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இவர்களுடன் ஒற்றைப் பாடலுக்கு தோன்றி நடிகை சமந்தா ஆடியிருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் படம் பார்த்த ரசிகர்களை ஆட்டுவித்த அந்த ஒரு பாடலில், படத்தின் நாயகி ராஷ்மிகாவை தூக்கிச் சாப்பிட்டார் சமந்தா. இது தவிரவும் படத்தின் எல்லாப் பாடல்களும் ஹிட்டாகி இருந்தபோதும், சமந்தாவின் ’ஊ... சொல்றியா மாமா’ பாட்டுக்கு இளவட்டங்கள் உற்சாகமாக ’உம்’ கொட்டினார்கள்.
இவை உள்ளிட்ட காரணங்களினால் தெலுங்கு மட்டுமன்றி, தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளிலும் புஷ்பா திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதுவே அடுத்த பாகத்தின் தேவையையும் தீர்மானித்தது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை மிரட்டலாக எடுக்க தயாரிப்புக் குழு தீர்மானமாக உள்ளது. அந்த வகையில், முதல் பாகத்தில் ஒற்றைப் பாடலில் தோன்றிய சமந்தாவுக்கு, அதன் அடுத்த பாகத்திலும் மற்றுமோர் ஒற்றைப் பாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாம். ஆனால் சமந்தா அந்த வாய்ப்பை புறக்கணித்து விட்டதாக சொல்லப்படுகிறது.
தசை அழற்சி பாதிப்பிலிருந்து மீண்டிருக்கும் சமந்தா, படிப்படியாக அடுத்த சுற்றுக்கு தயாராகி வருகிறார். புராண காலப் பின்னணியிலான ’சகுந்தலம்’ திரைப்படத்தையொட்டி, பிரதான பாத்திர வாய்ப்புகளே வருவதால் அதற்கே கவனம் செலுத்தவும் சமந்தா முடிவு செய்திருக்கிறார். மேலும், புஷ்பா பாடலுக்கான எதிர்பார்ப்புகளை அடுத்த பாகத்தின் பாடலில் சமந்தா நேர் செய்யவேண்டிய நெருக்கடியும் எழுந்திருப்பதால், ரிஸ்க் வேண்டாம் என்றும் புஷ்பா-2 வாய்ப்பை அவர் தவிர்த்திருப்பதாக சொல்லப்படுகிறது. எனினும் அதிகாரபூர்வ தகவல் மட்டுமே இதனை உறுதிசெய்யும்.